சுத்தாத்துவைதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூவல்லிருமை அல்லது சுத்தாத்துவைதம் என்பது, வல்லபாச்சாரியாரால் (பொ.ஊ. 1479 - 1531) முன்வைக்கப்பட்ட, வேதாந்தக் கோட்பாடுகளில் ஒன்றும், வைணவக் கொள்கைகளில் ஒன்றும் ஆகும். வல்லப செம்பெருந்தாயம். என்றும் அழைக்கப்படும் இக்கோட்பாடு, நெறி வடிவத்தில் இனங்காணப்படும்போது 'புஷ்டி மார்க்கம் எனப்படுகின்றது. வைணவக் கொள்கையே எனினும், இது சிறீநாதன் என்னும் வடிவில் அமர்ந்திருக்கும் கண்ணனையே முழுமுதல் என்கின்றது.[1] இதே சொல்லாடலை வைதீக சுத்தாத்துவிதம் என்ற பெயரில் சைவர்களும் பயன்படுத்தும் போதும், கொள்கையளவில் இரண்டின் பொரு்ளும் வேறு வேறு.[2]

கொள்கைகள்[தொகு]

நாற்பெரும் விண்ணவ செம்பெருந்தாயங்களில், இன்று உருத்திர செம்பெருந்தாயத்தின் இடத்தில் இத்தூவல்லிருமை வைத்து நோக்கப்படுகிறது.[3] (ஏனைய மூன்றும் முறையே ஸ்ரீ, பிரம்ம, குமார செம்பெருந்தாயங்கள் என்று அறியப்படும் விதப்பொருமை, இருமை, ஈரல்லிருமை எனும் கோட்பாடுகள் ஆகும்.) சங்கரரின் அல்லிருமையைப் போல், அது இந்த முழு உலகும் மாயை (பொய்த்தோற்றம்) என்று கூறாமல், உலகம் என்றுமுள்ள மெய்ப்பொருள் என்கின்றது.[4]

வல்லபர் தூவல்லிருமையின் நிறுவுநர்

வல்லபரின் பார்வையில், கண்ணன் ஒருவனே ஏக இறைவன், முழுமுதற்பொருள். உருவமற்ற, குணங்களற்ற பரம்பொருளை முன்வைக்காமல், வைகுந்தம், சத்ய லோகம், கைலாயம் என்பவற்றுக்கும் மேலே, மூவருக்கும் முதல்வனாக கோலோகத்தில் அமர்ந்திருக்கும் கோபாலனையே அவர் மெய்ப்பொருள் என்கின்றார்.[5] இறைவனின் புகழைக் கனிந்து பாடி அதன் மூலமே கோலோகத்தை அடைதல் எனும் வீடுபேற்றை ஒருவன் பெற முடியும் என்பது புஷ்டி மார்க்கத்தின் மையக்கரு. இது பிரம்மசம்பந்தம் (இறையோடு தொடர்புறுதல்) என்று கூறப்படுகின்றது.[6] புஷ்டி மார்க்கத்தினர், பிரம்ம சம்பந்த மந்திரம் என்று எட்டெழுத்து மந்திரத்தை (ஸ்ரீ க்ருஷ்ண சரணம் மம:) எப்போதும் ஓதுவர்.[7][8]

கோலோகமாம் பிருந்தாவனத்தில் என்றென்றும் இறைவனின் அருகே வாழ்ந்துகொண்டு அவனுக்குத் திருத்தொண்டு புரிவதே புஷ்டி மார்க்கிகளின் வீடுபேறு. இறைவனை அடைய ஞானம் ஓர் வழிதான் என்றாலும், பக்தியே சிறந்தவழி. பக்தியை சிக்கற்படுத்திக் கொள்ளும் ஏனைய நூல்கள் போலன்றி, வல்லபரின் போதனைகள் வீடுபேற்றைத் தரும் "புஷ்டி பக்தி"யை முன்வைக்கின்றன. மனம், வாக்கு, காயம் அனைத்தையும் ஆண்டவனுக்குப் படையல் செய்து (ஆத்ம நிவேதனம்) அளவற்ற பேரன்பும் இன்பமும் கொண்டவர்களாக, கோபியர் போல கோபாலனை வழிபடுவதே புஷ்டி பக்தி எனப்படுகின்றது.[9]

மெய்யியல்[தொகு]

வல்லப செம்பெருந்தாயத்தின் இறைவன் - சிறீநாதன்

வல்லப செம்பெருந்தாயத்தின் படி, நெருப்பும் அதன் சுவாலைச் சுடரும் போல, இறைவனுக்கும், ஆன்மாவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. அவனது திருவிளையாடலால், தம்மைத் தனித்தனி உயிர்களாகக் கருதி ஆன்மாக்கள் அல்லலுறுகின்றன. எனினும், சத்+சித்+ஆனந்தம் (சச்சிதானந்தம்) எனும் இறைவனின் முப்பெரும் இயல்புகளையும் தன்னில் உணரும் கணம், ஆன்மாக்கள் வீடுபேறடைகின்றன.[9] தன்னிலிருந்தே உலகங்களையும் உயிர்களையும் படைத்த சிறீநாதன், பேரூழிக் காலத்தில் அவற்றை மீளத் தன்னுள் ஒடுக்கிக் கொள்வான்.அனைத்தும் அவனது விளையாடலே[10]

புஷ்டி மார்க்கிகள்[தொகு]

உத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவனமே இந்நெ்றியின் தோற்றுவாய் என்ற போதும், இராசத்தானம், கூர்சரப் பகுதிகளிலேயே புஷ்டி மார்க்கிகள் இன்று அதிகம் வாழ்கின்றனர்.[7] இராசத்தானத்தின் நாதத்துவரையில் அமைந்துள்ள சிறீநாதன் ஆலயமே இவர்தம் முக்கிய வழிபாட்டுத் தலம். சூர்தாசர், கிருஷ்ணதாசர், பரமானந்தர், கும்பணதாசர், சதுர்ப்புயர், நந்ததாசர், சித்தசுவாமி, கோவிந்ததாசர் ஆகிய எட்டுப் புஷ்டிமார்க்கக் கவிஞர்களின் (அட்டசாப்) பாடல்கள் தூவல்லிருமையரால் போற்றப்படுகின்றன.

சிவ சுத்தாத்துவிதம்[தொகு]

சைவர்களின் தூவல்லிருமையானது, புஷ்டி மார்க்கிகளின் தூவல்லிருமையிலும் வேறுபட்டது. எனினும், உலகைப் பொய்த்தோற்றமில்லை என்று அவை வற்புறுத்தும் பாங்கிலும், இறைவனின் திருவருட்சக்தியே மாயை என்பதை வலியுறுத்தும் விதத்திலும் சைவ - வைணவ தூவல்லிருமைகள் ஓரளவு ஒத்துப் போகின்றன.[2]

உசாத்துணைகள்[தொகு]

  1. Martin, Nancy M., "North Indian Hindi devotional literature" in Flood 2003, ப. 182–198
  2. 2.0 2.1 Murugesa Mudaliar (1979) "The relevance of Saiva siddhanta philosophy: being lectures delivered at the Banaras Hindu University and the Allahabad University" Annamalai University 2nd edition, p.79
  3. Stephen Knapp (2005) "The Heart of Hinduism: The Eastern Path to Freedom, Empowerment, and Illumination" Page 38, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0595350755
  4. Rajendra Jindel (1976) "Culture of a Sacred Town: A Sociological Study of Nathdwara - Page 36 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8171540406
  5. Roma Chaudhuri (1975) "Ten Schools of the Vedānta: Further reflections on the five schools of the Vedanta" page 113
  6. Jethalal Govardhandas Shah (1969) "Shri Vallabhacharya: His Philosophy and Religion - Page 346
  7. 7.0 7.1 Beck 1993, ப. 194–195
  8. Colas, Gerard, "History of Vaiṣṇava traditions" in Flood 2003, ப. 229–270
  9. 9.0 9.1 Edwin F. Bryant (2007) "Krishna : A Sourcebook" Page 479 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195148916
  10. "கோசுவாமி ராகுநாத்ஜி, "வல்லபரின் தூவல்லிருமையின் அமைப்பு (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)"" (PDF). Archived from the original (PDF) on 2016-04-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-27.

மேலதிக வாசிப்புக்கு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தாத்துவைதம்&oldid=3913774" இலிருந்து மீள்விக்கப்பட்டது