உள்ளடக்கத்துக்குச் செல்

யமன் (இந்து மதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எமன் (இந்து மதம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யமன்
அதிபதிஇறப்பு
வகைதேவர்கள்
இடம்நரகம்
கிரகம்புளூட்டோ
ஆயுதம்தண்டம், பாசக்கயிறு
துணையமி அல்லது சியாமளா அல்லது ஐய்யோ தேவி

யமன் இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இவர் சூரியனின் மகன். சனீஸ்வரனின் அண்ணன். யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின்படி, யமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார்.

யமனுக்குச் சித்திரகுப்தர் உதவி செய்கிறார். இவரே மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கைச் சரி பார்த்து அவற்றைக் குறித்துக் கொண்டு, அந்தத் தகவல்களை யமனுக்குத் தெரிவிக்கிறார். இந்தக் கணக்கின்படியே, மனிதர்களை நரகத்துக்கு அனுப்புவதா அல்லது சொர்க்கத்துக்கு அனுப்புவதா என முடிவெடுக்கப்படுகிறது. யமனைத் தர்மத்தின் தலைவனாகக் கருதி, இவரை யம தர்ம ராஜா எனவும் அழைப்பதுண்டு. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக யமன் கருதப்படுகிறார்

குணவியல்புகள்

[தொகு]
Yama holding a danda

யமன் ஒரு திக்பாலர் மற்றும் ஓர் ஆதித்யர் ஆவார். ஓவியங்களின் இவர் பச்சை அல்லது சிவப்புத் தோலுடன், எருமையை வாகனமாகக் கொண்டவராகச் சித்திரிக்கப்படுகிறார். தன்னுடைய இடக்கரத்தில் பாசக்கயிற்றை வைத்துள்ளார், அதன் மூலம் மனிதர்களின் ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கிறார். இவர் சூரிய தேவனின் மகன் ஆவார். இவரது சகோதரி யமி அல்லது யமுனா ஆவார். இவர் தெற்குத் திசையின் காவலர் ஆவார். ரிக் வேதத்தின் பத்தாம் பாகத்தில் 10,14,135 சுலோகங்கள் இவரை நோக்கி உள்ளன.

யமன் தர்மத்தின் தலைவர் ஆவார். கதா உநிடத்தில் யமன் மிகச்சிறந்த ஆசிரியராகச் சித்திரிக்கப்படுகிறார். இவர் யுதிஷ்டிரரின் தந்தையும் ஆவார். கருட புராணத்தில் அவ்வபோது யமன் குறிப்பிடப்படுகிறார். இவரது மனைவி சியாமளா தேவி என்றும் உள்ளது.

சிவன் மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிதல்

[தொகு]

யமன் சிவன் மற்றும் திருமாலுக்குக் கீழ்ப்படிந்தவராகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனைச் சிவன் அழிக்க முற்பட்டுள்ளார். அதே போல், பாவங்கள் பல செய்திருப்பினும், இறக்கும் தறுவாயில் தன்னையும் அறியாமல் நாராயணா என அழைத்த அஜமிலனுக்குத் திருமால் யமதூதர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றி மோட்சத்தை அருள்கிறார்.

எமனின் வேறு பெயர்கள்

[தொகு]
 • தருமன்
 • தருமதேவன்
 • ஏமராஜன் (ஏமம் என்றால் எருமைமாடு என பொருளாகும்)
 • காலதேவன்

மகாபாரதத்தில்

[தொகு]

மகாபாரதத்தில், விதுரர் மற்றும் பாண்டவர்களின் மூத்த சகோதரர் தருமர் இருவரும் தர்மதேவதையின் உருவாகக் கூறப்படுகின்றனர்.

கோயில்கள்

[தொகு]

தமிழ்நாடு

[தொகு]

தமிழ் நாட்டின் பல்வேறு சைவ, வைணவ தளங்களில் யமனுக்கு என்று சன்னதிகள் இருந்தாலும். யமனுக்கு என்று தனிக்கோயில் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன அவற்றில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அடுத்ததாக ஏழாயிரம்பண்ணை என்கிற கிராமத்திலும், கோவை அருகே வெள்ளலூர் என்கிற கிராமத்திலும், திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி என்கிற இடத்திலும் இருக்கின்ற கோவில்கள் சிறப்புப் பெற்றவை ஆகும். இந்தக் கோவில்கள் அனைத்திலும் யமதர்ம ராஜாவிற்கு எமகண்ட நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏழாயிரம்பண்ணையில் எமதர்மன் தனது வாகனமான எருமையின் மீது வீற்றிருக்கிறார்.

 • தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் எனும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.[1] இந்தக் கோயிலின் கருவறையில் எருமை வாகனத்தில் இருக்கிறார். மேற்கு திசையில் இந்த கருவறை அமைந்துள்ளது. மூலவரான எமதர்மன் கீழ்வலக்கையில் தீச்சுடர், கீழ்இடக்கையில் ஓலைச்சுவடிகளும் வைத்துக் கொண்டுள்ளார். மேல்வலக்கையில் சூலாயுதம், மேல்இடக்கையில் கதையுடன் உள்ளார்.
 • ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் எமதர்மராஜனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவர் வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இத்தலத்தில் எமனை வழிபட்டபின்பே மற்ற தெய்வங்களை வழிபடுகின்றனர்.[1]
 • கோயம்புத்தூர் மாநகரில் சித்ரகுப்த எமதர்மராஜன் கோயில் உள்ளது. இக்கோயில் சிங்காநல்லூர் வெள்ளலூர் பாதையில் உள்ளது. கருவறையில் எமதர்மன் எருமையின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு அருகே சித்ரகுப்தன் நின்று கொண்டிருக்கிறார்.[1]
 • திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் எமதர்மன் சந்நிதி அமைந்துள்ளது.[1] இந்த சன்னதி பத்தடி ஆழத்தில் அமைந்துள்ளது. எமன் சிவபெருமானின் காலடியில் குழந்தை வடிவில் உள்ளார்.
 • புதுச்சேரி மாநிலம் பிரத்தியங்கிரா கோயிலில் எமதர்மனுக்கு சன்னதி உள்ளது.[1] இச்சன்னதி வடதிசையில் நோக்கி அமைந்துள்ளது. இவர் எருமை வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். கைகளில் சூலாயுதமும், கதையும் உள்ளது. இச்சன்னதியில் எமதர்மன் யோக நிலையில் உள்ளார்.
 • கன்னியாகுமரி மாவட்டத்தில் அநேகமாக பல கிராம கோவில்களில் காலசுவாமி என வணங்கப்படுகிறார்

ஆதாரங்கள்

[தொகு]
 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "அழகன் எமன்!". Archived from the original on 2016-01-26. பார்க்கப்பட்ட நாள் 2016-09-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமன்_(இந்து_மதம்)&oldid=3799173" இலிருந்து மீள்விக்கப்பட்டது