உள்ளடக்கத்துக்குச் செல்

சந்நியாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கரருடன் சீடர்கள், பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்
சுவாமி விவேகாநந்தர் (1894) ஒரு சந்நியாசி

சந்நியாசம் அல்லது துறவறம், மனித வாழ்வில் நான்காம் ஆசிரம நிலையாகும். பந்த பாசங்களினின்று விடுபட்டு தன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல். இக்காலத்தில் இடம் விட்டு இடம் சென்று, உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும், தான் அறிந்த உண்மைகளையும் நீதிகளையும் மக்களுக்கு கூறுதலும் ஆகும். சமய வாழ்வில் மக்களை ஈடுபடச் செய்தல். ‘முற்றும் துறந்த நிலையே’ சந்நியாசமாகும். எழுபத்தைந்து வயதிற்கு மேற்பட்ட காலம்.[1][2][3]

16-ஆம் நூற்றாண்டில் பார்ப்பன சுமார்த்தருக்கும், பார்ப்பனர் அல்லாத சைவர்க்கும் இடையே சந்நியாசம் கொள்வதில் கருத்து வேறுபாடுகள் முற்றி வாக்குவாதம் நிகழ்ந்தது. சைவர்கள் சந்நியாசம் மேற்கொள்ளக்கூடாது எனச் சுமர்த்தர்கள் கூறினர். இல்லை, சைவர்களும் மேற்கொள்ளலாம் என அரசன் முன்னிலையில் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி சிவாக்கிர யோகிகள் நிறுவினார். அரசன் வேண்டுகோளின்படி அவரது நிருபனங்கள் சைவ சந்நியாச பத்ததி என்னும் நூலாக உருவாயிற்று.

சந்நியாச ஆசிரம (துறவறம்) கடமைகள்

[தொகு]

கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத் துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள், செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். துறவி கௌபீனம் (கோவணம்) அணிந்து கொண்டு, கையில் கமண்டலம், தண்டு வைத்து கொள்ளலாம். சத்தியமான சொற்களை பேச வேண்டும்.

மௌனம் வாக்கின் தண்டம்; பலனில் பற்றுக்கொண்டு செயல்களைச் செய்யாமல் இருப்பது, உடலின் தண்டம்; பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம். இந்த மூன்று தண்டங்களைக் (திரி தண்டி) கைக் கொள்ளாத துறவி, வெறும் மூங்கில் தடியைச் சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக மாட்டான். நான்கு வர்ணத்தவர்களின் ஏழு வீடுகளில் மட்டுமே சமைத்த உணவை பிட்சை எடுத்து, அதில் கிடைப்பதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். துறவிக்கு, உரிய காலத்தில் பிட்சை உணவு கிடைக்கா விட்டாலும் வருத்தப்பட மாட்டான். அதேபோல், நல்ல உணவு கிடைத்தாலும் மகிழ்ச்சி அடையமாட்டான்.

துறவி எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை அடக்கி, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மனநிறைவு அடைந்தவனாக), எல்லா சீவராசிகளையும் சமமாகப் பார்த்து, தனியாகப் பூவுலகில் ஒரிடத்தில் தொடர்ந்து தங்காமல், நிலையின்றி திரிந்து வாழவேண்டும்.

மோட்சத்தில் விருப்பு-வெறுப்பற்ற துறவி, ஆத்மாவில் நிலைகொண்டவன் (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், ஆசிரம நியமங்களுக்கு (விதிகள்) கட்டுப்பட்டவன் அல்லன். தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட செய்யத் தக்கவை, தகாதவை என்ற விதிகளை கடந்து, சந்நியாசி (துறவி) சுதந்திரமாக உலகம் சுற்றலாம்.

துறவி அனைத்தையும் அறிந்தவனானாலும், சிறுவனைப் போல் விளையாடுவான்; ஆற்றல் உள்ளவனானாலும், ஏதும் அறியாதவன் போல் இருப்பான்; பண்டிதனானாலும் பைத்தியம் போல் பேசுவான்; வேதாந்தங்கள் கற்றறிந்தவனானாலும் ஆசார – ஆசிரம நியமங்களை கடைப்பிடிக்காதவனாக இருப்பான். துறவிக்கு வேதம் கூறியுள்ள அக்னி காரியம் கிடையாது; யார் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வான்; எவரையும் அவமதிக்க மாட்டான்; மற்றவர்களிடம் விரோதம் கொள்ள மாட்டான்.

ஞானத்தில் நிலை பெற்ற துறவியிடம் இருமை (இன்ப- துன்பம், மான-அவமானம், குளிர்-வெப்பம்) போன்ற உணர்வுகள் காண முடியாது.

எந்தத் துறவிடம், ஞானமும் வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்டத்தை சுமந்து வயிற்றை நிரப்பிக் கொள்பவனாக இருப்பானே தவிர, உண்மையான துறவியாக மாட்டான். துறவியின் முதன்மையான தர்மம் – அமைதியும், அகிம்சைமே.

இவ்வாறாக ஒருவன் தன்னுடைய தர்மங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அந்தக்கரணம் (மனம்) தூய்மை அடைந்து, பட்டறிவு - மெய்யறிவு (ஞான-விக்ஞானம்) பெற்று இறுதியில் பிரம்மத்தை அடைகிறான்.

இவற்றையும் காண்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. S. Radhakrishnan (1922), The Hindu Dharma, International Journal of Ethics, 33(1): 1-22
  2. DP Bhawuk (2011), The Paths of Bondage and Liberation, in Spirituality and Indian Psychology, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-8109-7, pages 93-110
  3. Alessandro Monti (2002). Hindu Masculinities Across the Ages: Updating the Past. L'Harmattan Italia. pp. 41, 101–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-88684-03-1. Archived from the original on 1 March 2017. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்நியாசம்&oldid=3913637" இலிருந்து மீள்விக்கப்பட்டது