வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாசுதேவன் என்பது இந்து சமயக் கடவுளான விஷ்ணு வின் பெயர்களில் முக்கியமான ஒன்று. பகவத்கீதை ஏழாவது அத்தியாயம் 19-வது சுலோகத்தில் 'வாசுதேவன்தான் எல்லாம்' என்று எவன் அறிகிறானோ அவன் மஹாத்மா என்றும், கிடைத்ததற்கரியவன் என்றும் சொல்லப்படுகிறது. வசுதேவருக்குத் தேவகியிடம் தோன்றிய மைந்தன் என்பது எளிய பொருள். விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைப் பட்டியலிட்டுப் பாடும் புகழ்பெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற தோத்திரத்தில் வாசுதேவன் என்ற பெயர் மூன்று முறை வருகிறது. உரையாசிரியர்கள் இம்மூன்றுக்கும் மூன்று விதமாகப் பொருள் பகல்கின்றனர். மூன்றென்ன, பல பொருள் கொண்டது வாசுதேவ என்ற சொல். அதனில் 'வாசு', 'தேவ' என்று இரண்டு பகுதிகள் உள்ளன.இரண்டு பகுதியில்

வாசு என்ற பகுதி[தொகு]

இப்பகுதி 'வஸ்' என்ற வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து முளைக்கின்றது. அதற்கு 'இருக்க', 'வசிக்க', 'குடியிருக்க', 'தங்க', '(நேரத்தை) கழிக்க அல்லது செலவிட' என்றெல்லாம் பொருள் சொல்லலாம். இவ்வேர்ச்சொல் 'வஸதி' என்று செயப்படுபொருள் குன்றிய வினைவிகற்பமாகவும், 'வாஸயதி' என்று செயப்படுபொருள் குன்றாவினைவிகற்பமாகவும் மாறும்.

எல்லாப்பொருட்களிலும் தான் நிலை பெற்றிருக்கிறார்; எங்கும் இருக்கிறார்; எல்லாவற்றினுள்ளும் உள்ளுறைபவராக இருக்கிறார். இவையெல்லாம் 'வஸதி' என்ற வினைவிகற்பத்திலிருந்து வரும் பொருள்கள்.

எல்லாவற்றையும் மறைக்கிறார் ("ஈஶாவாஸ்யமிதம் ஸ்ர்வம்") [1]; எல்லாமாயிருக்கும் தன்னை ஒருவரும் உணராதபடி தான் மறைந்திருந்து பல பல பொருள்களாகப் பார்க்கும்படி செய்கிறார்; தன் தன் வினைப்பயனுக் கேற்றவாறு அமைந்த உடல்களில் குடியிருக்கச் செய்கிறார்; நிலைத்த இருக்கையற்ற வான், மண் முதலிய ஐம்பூதங்களிடத்தில் தன் இருக்கையைப் பரவச் செய்து அவைகளுக்கு நிலைத்த தோற்றத்தை அளிக்கிறார்; தன்னைத் தாயாக ஆக்கிக்கொண்டு தன் மடிமேல் உலகனைத்தையும் வைத்துப் பரிவுடன் அணைத்துப் பாதுகாக்கிறார்; ஆதவன் தன் கதிர்களால் புவியனைத்தையும் சூழ்வதுபோல் தன் பெருமையால் உலகமுழுமையும் மூடி நிற்கிறார். இவை யெல்லாம் 'வாஸயதி' என்ற விகற்பத்திலிருந்து வரும் பொருள்கள்.

தேவ என்ற பகுதி[தொகு]

இப்பகுதி 'திவ்' என்ற வடமொழி வேர்ச்சொல்லிலிருந்து வருகிறது. அதற்கு 'விளங்க', 'பளபளக்க' 'எறிய', 'சூதாட', 'சொக்கட்டான் ஆட', 'விளையாட', 'பந்தயம் போட', 'வியாபாரம் செய்ய', 'விற்க', 'புகழ', 'விரும்ப' என்றெல்லாம் பொருள் சொல்லலாம்.

படைப்பு முதலியவற்றில் எல்லையில்லாதபடி விளையாடுபவர்; எதனையும் வெல்லும் எண்ணம் கொண்டவர்; ஒளிமிக்கவராக விளங்குபவர்; ஆனந்தப்படுபவர்; பெருமிதத்துடனிருப்பவர்; அழகுடன் துலங்குபவர்; எங்கும் செல்லும் திறமையுள்ளவர்; புகழப்படுபவர்; விரும்பப்படுபவர்; செயலாற்றுபவர்; ஜீவனாக ஒவ்வொரு உடலிலும் இருந்துகொண்டு உலக விவகாரங்களில் ஈடுபடுபவர். இவையெல்லாம் 'திவ்' என்ற வடமொழி வினைமூலத்தினின்று உண்டான 'தேவ' என்ற சொல்லினால் ஏற்படும் பொருள்கள்.

சிறுமையையே பெருமையாக மனிதனை நினைக்கும்படி செய்வதே அவரது பெரும் விளையாட்டு. விளையாடுவதால தேவன்.

திரண்ட பொருள்[தொகு]

'வாசு', 'தேவ' ஆகிய இருபகுதிகளும் சேர்ந்து 'வாசுதேவர்' என்று ஆவதால் திரண்ட பொருளாக ' எங்கும் உறைபவராக இருந்து எல்லோரையும் எப்பொழுதும் விளையாட்டாகவே காப்பவர்' என்று சொல்லலாம்.

மாயையால் மறைப்பவர்[தொகு]

சாதயாமி ஜகத் விஶ்வம் பூத்யா ஸூர்ய இவாம்ஶுபிஹி"[2]ஆதவன் உலகைத் தன் ஒளிக்கதிர்களால் வியாபித்து மூடுகின்றான். அவ்விதம் மூடுகின்ற ஒளிக்கதிர்களை அறியாமல் ஒளிக்கதிர்களால் விளக்கம் பெறும் உலகை மட்டுமே காண்கிறோம். ஆண்டவன் தன் பெரும் சக்தியான மாயையாகிய பெருமையால் உலகை மூடுகிறார்.

வாசுதேவ வியூகம்[தொகு]

சங்கர்ஷணர்[3] (அழித்தல்), அனிருத்தன் (காத்தல்), பிரத்யுமனன் (படைத்தல்) என்ற வியூக நிலையிலுள்ள மூவருக்கும் மேம்பட்டவராயும் தலைவராகவும் உள்ள வாசுதேவர் என்பவர் பரம்பொருளே, என்கிறார் ஆதி சங்கரர்.வைணவ மரபில், வாசுதேவரை பரவாசுதேவர் என்று வழங்குவர்.பரவாசுதேவர், சங்கர்ஷணர், அனிருத்தர், பிரத்யும்னர் என்ற பெயர்களில், நாராயணனாகிய பரம்பொருள் தன்னையே இந்நால்வராக்கிக்கொண்டு படைப்பு முதலிய தொழில்களில் ஈடுபடுகிறார்; பரவாசுதேவர் மற்ற மூவருடைய பணிகளுக்கு தலைவராக இருக்கிறார். ஆகமத்தை ஒட்டி நடக்கும் வைணவ ஆலய வழிபாட்டில் இந்த வியூக நிலைக்கும் பெயர்களுக்கும் அதிக இடம் உள்ளது.

இன்னும், இந்த வியூகமே பன்னிரண்டாக விரிந்து கேசவ, நாரயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஶ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்ற பெயர்களுடன் விளங்குகிறது.

இதனையும் காண்க[தொகு]

துணை நூல்கள்[தொகு]

* சி.வெ. ராதாகிருஷ்ண சாஸ்திரி. ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.
  • Shri Vishnu Sahasranama, with the Bhashya of Parasara Bhattar. Trans.Prof. A. Srinivasa Raghavan. Sri Vishishtadvaita Pracharini Sabha, Mylapore, Madras. 1983.
  • Complete Works of Sri Sankaracharya, in the Original Sanskrit. Vol.V: Laghu Bhashyas. Samata Books. Madras. 1982
  • A Learner's Sanskrit-Hindi-Tamil-English Dictionary. The Samskrit Education Society, Mylapore, Madras. 1982.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஈஶாவாஸ்யோபநிஷத்: முதல் மந்திரத்தின் தொடக்கம்
  2. மஹாபாரதம் சாந்தி பர்வம் 350.41
  3. SANKARSHANA – "THE BEHOLDER OF THE UNIVERSE”
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுதேவன்&oldid=2928933" இருந்து மீள்விக்கப்பட்டது