திருவாய்மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tiruvaai Mozhi, book.jpg

திருவாய்மொழி தமிழ் வேதம் எனப் போற்றப்படும் நூல்.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இதனைப் பாடியுள்ளார்.
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகிய வேறு மூன்று நூல்களையும் இவர் பாடியுள்ளார்.
இவர் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால்.
இவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு பாடல்களைப் பாடினாலும் பிற சமயக் கோட்பாடுகளையும் மதித்துப் போற்றியவர்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் (பாடல்களைக்) கொண்டது.
இதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன.
இவற்றிற்கு ஈடு உரை என்று போற்றப்படும் ஐந்து உரைகள் உள்ளன.
இது பாடலின் பொருளாழத்தை நுட்பமாக விளக்குகிறது.

இந்நூலின் பாடல்களில் பல அகத்திணைத் துறைகளாக உள்ளன.

பாடல்கள்[தொகு]

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

என்பது இந்நூலின் முதல் பாடல். இறைவன் நல்லவன். நல்லறிவை அருளினன். அமரர்க்கும் தலைவன். துயரை அறுக்கும் சுடர். அவனை உள்ளத்தால் வழிபடுகிறேன் – என்கிறார்

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே (1-1-5)

ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு எட்டிய இறைவன் திருவடிகளை அடைவார்கள். எந்த இறைவனும் குறையில்லாதவன். அவரவர் விதிப்படி அவரவர் இறைவனை அடைவார்கள்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே. (1-1-9)

இறைவன் உள்ளான் என்றால் உள்ளான். உளனலன் (இல்லை) என்றால் இல்லை. உள்ளவனாகவும், இல்லாதவனாகவும் ஒழிவில்லாமல் எங்கும் பரந்துகிடக்கிறான்.

இல்லதும் உள்ளதும்
அல்லது அவன் உரு
எல்லை இல் அந் நலம் [1]
புல்கு பற்று அற்றே [2] (1-2-4)

ஒளியே அவன் எல்லை. பற்றற்று அவனைப் பற்றிக்கொள்க.
  • நாரை, குயில், அன்னம் முதலானவற்றைத் தூது விடும் பாடல்கள் நான்றாம் திருவாய்மொழியில் உள்ளன.

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?
நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ? (1-4-6)

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ஓ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே (10-10-10)

அவன் பாழோ, சோதியோ, இனபமோ தெரியவில்லை. என் ஆசையெல்லாம் அவனாகவே சூழ்ந்து கிடக்கிறான் – என்று கூறும் பாடலோடு.

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி

அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன

அவாவிலந் தந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த

அவாவிலந் தாதி பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே. (10-10-11)

அவா நீங்கும் படி சூந்து வரும் திருமாலை, நான்முகனை, சிவபெருமானைப் போற்றிப் பாடி, அவா நீங்கி வீடு பெற்ற குருகூரின் சடகோபனாகிய நான் சொன்ன அவா நீக்கும் அந்தாதித் தொடையால் அமைந்த இந்த ஆயிரம் பாடல்களை நிறைவு செய்த அவா நீக்கும் அந்தாதியான இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்கள் வீடு பேறு பெற்று உயர்ந்தார்கள் என்று கூறும் பாடலோடு நூல் நிறைவு பெறுகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. ‘எல்லே இலக்கம்’ – தொல்காப்பியம் உரியியல்
  2. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு – திருக்குறள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாய்மொழி&oldid=2812540" இருந்து மீள்விக்கப்பட்டது