கோவிந்தன் என்ற சொற்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவிந்தன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 187-வது, 539-வது பெயர்களாக வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் நான்காவது பெயர்.இந்து சமயத்தில் கடவுளின் பெயர்களுக்குள் ஆன்மிகச் சிறப்பு மிக்க பெயர்களில் முக்கியமான ஒன்று. பிறப்பு இறப்பு என்ற கோரமான விஷத் தீண்டலைப் போக்கவல்ல பெயர் என்பன புராணங்கள்.

பல பொருட்கள்[தொகு]

 • கோ என்றால் பூமி என்று ஒரு பொருள். படைப்பின் தொடக்கத்தில் சென்ற இடமறியாதபடி கடலில் ஆழ்ந்து மறைந்துவிட்ட பூமியை வராஹமாகச் (பன்றியாக) சென்று தேடிப் பெற்றவர். விந்த என்றால் ஒன்றைத்தேடி, நாடிப்போய் அடைவது.
 • கோ என்றால் பசு. பசுக்களுக்குத் தலைவர். (முல்லை நிலத்தவர் - ஆயர்)
 • கோ என்றால் துதிக்கும் சொற்கள்.தேவர்களால் துதிக்கப்பட்டவர்.
 • கோ என்றால் புலன்கள். புலன்களை அடக்கி ஆள்பவன் கோவிந்தன். 'பார்ப்பார் அகத்துப் பாற்பசு ஐந்து' என்று திருமூலர் கூறிய இந்திரியப்பசு தான் கோ.
 • வேதமோதுவதால் அடையக்கூடியவர்; மந்திரங்களால் உணரத்தக்கவர்; உபநிடத வாக்கியங்களால் அறியப்படுபவர், அல்லது அடையப்படுபவர்.
 • பக்தியுடன் பெயரிட்டுக் கூப்பிடுதலால் அடையக்கூடியவர்.
 • கூப்பிடுதூரத்தில் இருப்பவர்.

பெயரின் பெருமைகள்[தொகு]

திருப்பாற்கடலில் இருந்த மகாவிஷ்ணு கண்ணனாக அவதரித்த கதை ஸ்ரீமத் பாகவதத்திலும் விஷ்ணு புராணத்திலும் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கண்ணன் சிறுவனாக இருந்தபோதே தேவலோகத்து அரசனான இந்திரனுடைய கர்வத்தை அடக்குவதற்காக கோபர்களிடம், அவர்கள் வழக்கமாகச் செய்யும் இந்திரபூஜையை நிறுத்திவிட்டு கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்யச் சொன்னார். அப்படி அவர்கள் செய்தவுடன் இந்திரனுக்குக் கோபம் வந்து கோகுலத்தையே அடித்துக் கொண்டுபோகும் அளவில் மழையை உண்டுபண்ணிவிட்டான். அப்பொழுது கண்ணன் கோவர்த்தனமலையைத் தூக்கி, மக்களையும் பசு முதலிய பிராணிகளையும் காப்பாற்றினார். பிறகு தேவேந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, எல்லா உயிர்களையும் காப்பாற்றுபவர் என்று பொருள் படும் 'கோவிந்தன்' என்ற பெயரை கண்ணனுக்குப் பட்டம் சூட்டி அபிஷேகமும் பண்ணிவைத்தான். இதற்கு 'கோவிந்த பட்டாபிஷேகம்' என்றே பெயர் [1].

கலாச்சாரத்தில் 'கோவிந்தா'[தொகு]

 • திருப்பதி மலைஏறுபவர்கள் கோஷம் போட்டுக்கொண்டே செல்வது 'கோவிந்தா, கோவிந்தா' என்று தான்.
 • ஆசமனம் என்ற ஒரு அரைநிமிட வைதிக சடங்கு எல்லா இந்துமத வைதிக கருமங்களிலும் பலமுறை திருப்பித் திருப்பிச் செய்யப்படும் ஒன்று. அதில் விஷ்ணுவின் பன்னிருநாமங்கள் ஒரு முறையும், அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று ஒரு முறையும் சொல்லவேண்டி வரும். இதில் விசேஷம் என்னவென்றால், பன்னிருநாமங்களிலும் 'கோவிந்தா' ஒரு முறை வருவதால், இங்கு எல்லா நாமங்களிலும் கோவிந்தநாமம் ஒன்றே இரண்டு முறை வரும் நாமம் ஆகின்றது.
 • ஆதி சங்கரருடைய 'பஜ கோவிந்தம்' மிக்க புகழ் பெற்ற ஓர் எளிய வேதாந்த தோத்திரம். இதில் ஆண்டவன் பெயராக 'கோவிந்த'நாமம் எடுத்தாளப்பட்டது ஒருக்கால் சங்கரரின் குருவின் பெயர் கோவிந்தர் என்று இருந்ததால்தான் என்று சிலர் கூறினாலும், கோவிந்த நாமத்தின் பெருமைதான் அவரை அப்படி எடுத்தாளச் செய்தது என்றும் மற்றும் சிலர் சொல்லலாம்.
 • ஆன்மிக சொற்பொழிவாளர்களில் பலரும் தெய்வபஜனைச் சடங்குகள்போதும் தொடக்கத்திலும் முடிவிலும் மேடையிலிருப்பவர் ஸர்வத்ர கோவிந்தநாமசங்கீர்த்தனம் என்று எடுத்துக் கொடுப்பதும் சபையில் கேட்போரனைவரும் ஒன்று சேர்ந்து 'கோவிந்தா, கோவிந்தா' என்று முழங்குவதும் நாட்டின் தென்பிராந்தியங்களில் தொன்றுதொட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கம்.
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா
குறைவொன்றுமில்லாத கோவிந்தா
இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

மேற்கோள்கள்[தொகு]

 1. தெய்வத்தின் குரல், ரா. கணபதி. நான்காம் பகுதி, வானதி பதிப்பகம்,1994, பக்கம் 1019.