உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமயத்தில் பத்மநாபன் என்ற பெயர் காத்தல் கடவுளான விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் பதினொன்றாவது பெயராக வழங்கிவரும் சொல். பாரதப்போருக்குப் பின் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்துகொண்டு அரசன் யுதிஷ்டிரனுக்காக பற்பல நீதிகளையும் சாத்திரங்களையும் சொல்லி முடித்து முடிந்த முடிவாக கடவுளின் ஆயிரம் பெயர்களைப் பட்டியலிடும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற தோத்திரத்தை உபதேசித்தார். அதனில் 48-வது, 196-வது, 346-வது பெயராக மூன்று முறை வரும் சொல்தான் 'பத்மநாபன்'. இதற்கு நான்கு பொருள்கள் கூறப்பட்டிருக்கின்றன.பத்ம என்றால் தாமரை; நாபி என்றால் தொப்புள்.

தாமரையைத் தொப்புளில் கொண்டவர்

[தொகு]
பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன், நாபிக் கமலத்தில் பிரம்மனுடன் கூடிய மகாவிஷ்ணுவின் பஞ்சலோக சிலை

பத்மநாபன் என்றால் உந்தித்தாமரையன் எனப்பொருள். உலகில் நாமறிந்த உந்தி தாயுடன் பிணைந்திருந்தமையை அடையாளம் காட்டும். இதற்கு மாறான ஓர் அற்புதத்தை உலகத் தோற்றமாக இந்து சமயப் புராணங்கள் நமக்கு அறிவிக்கின்றன. இறைவன் தன் உந்தியிலிருந்து ஒரு கொடியைத் தோற்றுவித்து அதன் காம்பில் ஒரு தாமரையைப் பொருத்தி அத்தாமரையைத் தன்னிடமிருந்து ஊட்டம் பெறச் செய்கிறார். உலகம் மூலப் பொருளாக இருந்த நிலையில் இயக்க மிகுதியால் நீண்ட வட்டவடிவில் கூம்பிய தாமரை மலராகக் காட்சி தந்தது. அதுவே இறைவனின் உந்தியிலிருந்து கிளம்பிய கொடியில் காணும் தாமரை. அதுவே காலச்சுழலில் விரிவடையவிருக்கும் உலகம்.

தாமரையின் வடிவிலுள்ள தொப்புள் கொண்டவர்

[தொகு]

தாமரையின் உட்புறம்போல் சிவந்ததும் ஆழ்ந்ததும் வட்டவடிவிலிருப்பதுமான உந்தியுடையவர்.

தாமரையின் நடுவில் உள்ளவர்

[தொகு]

தாமரையின் நடுவில் பிரம்மாவாக வீற்றிருப்பவர். பகவத் கீதையில் பிரம்மாணம் ஈஶம் கமலாஸனஸ்தம் என்ற தொடருக்கு ஆதி சங்கரர் 'பூமியாகிற தாமரையின் மொட்டு போன்றுள்ள மேருவின்மேல் வீற்றிருக்கின்ற நான்முகனாயிருப்பவர்' என்று உரை எழுதுகின்றார் [1].

இதையே வேறுவிதமாகவும் சொல்லலாம்: தொப்புள் போன்று பூமியாகிற தாமரைக்கு மைய முளையாக இருப்பவர் [2].

இன்னும் இதே சொற்பொருளை வேதாந்தக் கருத்துச் செறிவுடன் பொருள் கொள்ளலாம். 'இதயத் தாமரையின் நடுவில் உள்ளவர்'. இது உபநிடதத்தைத் தழுவிய பொருள். மகா நாராயண உபநிடதம் [3] 'கவிழ்ந்த தாமரையைப்போல் அது (பரம்பொருள்) இதயத்திற்குக் கீழே உந்திக்கு சற்று மேல் வரை படரும் கொடியுடன் நிற்கின்றது' என்று சொல்லும்.

காலத் தோற்றத்திற்கே காரணமானவர்

[தொகு]

பத்மம் என்றால் லட்சம்-கோடி, அதாவது 1012.பிரம்மாவின் ஒரு பகல் 432 கோடி மனித ஆண்டுகள். பிரம்மாவின் ஒரு பகலும் ஓர் இரவும் சேர்ந்து 824 x 107 ஆண்டுகள். ஒவ்வொரு பகலிலும் அவர் படைப்பு தொடங்கி, அவருடைய இரவு நெருங்கும்போது எல்லா படைப்புகளும் அவரிடம் ஒடுங்குகின்றன. இதனால் முன் படைப்பில் இருந்தவை, நடந்தவை யாருக்கும் தெரியவோ நினைவில் வரவோ வாய்ப்பில்லை; சில ரிஷிகளுக்கு சில சமயம் ஓரிரண்டு சம்பவங்கள் தெரியவருகின்றன; இப்படி நினைவு கூர்ந்து முன் கல்பங்களில் நடந்து முடிந்த சம்பவங்கள் சில புராணங்களில் சொல்லப்படுகின்றன என்பது நம்பிக்கை. பிரம்மாவின் நீண்ட ஆயுளில் இப்படி சில கல்பங்களைப் பற்றி சொல்லப்பட்டாலும் அதிகப்படியாக பத்து அல்லது பதினைந்து பழைய கல்பங்களைத் தாண்டி ஒரு புராணமும் பேசுவதில்லை. இந்தக் கணக்கீட்டின்படி 1012 ஆண்டுகள் என்ற காலவரையறையைத்தொட்டவர் இறைவனைத்தவிர வேறு யாருமே இருக்கமுடியாது. பத்மம் ஆகிற காலவரையறைக்கும் காரணமாகி, காலம் என்ற கமலத்தையே தன் உந்தியில் வைத்திருப்பவர், -- என்ற பொருள் 'பத்மநாபன்' என்ற சொல்லிற்கு ஒரு பொருத்தமான பொருள்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. சதுர்முகம் ஈஶம் ஈஶிதாரம் ப்ரஜானாம் கமலாஸனஸ்தம் ப்ருதிவீ-பத்ம மத்யே மேருகர்ணிகாஸனஸ்தம் - பகவத் கீதை 11-15, சங்கர பாஷ்யம்
  2. விஶ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபி:-- யஜுர் வேதம், தைத்திரீய ஆரண்யகம், 10 - 1.
  3. பத்ம கோஶப்ரதீகாஶம் ஹ்ருதயம் சாப்யதோமுகம்
    அதோ நிஷ்ட்யாவிதஸ்த்யாந்தே நாப்யாமுபரி திஷ்டதி .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மநாபன்&oldid=2928936" இலிருந்து மீள்விக்கப்பட்டது