வருணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருணன்
வருணன் மகர வாகனத்தில்
அதிபதிநீர்
தேவநாகரிवरुण
சமசுகிருதம்Varuṇa
வகைஆதித்யர், அசுரர் பிற்காலத்தில் தேவர்,
திக்பாலர்
இடம்ரசா
கிரகம்சுக்கிரன்
மந்திரம்ஓம் வம் வருணாய நம:
ஆயுதம்பாசம் அல்லது வருணாஸ்திரம்
துணைவாருணி

வருணன் அல்லது வருண தேவன் வேதகாலத்தில் மிகச் சிறப்புப் பெற்றிருந்த தேவர்களில் ஒருவன். வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த ஆதித்தர்கள் எனப்படும் பன்னிருவரில் ஒருவன். உலகம் முழுவதும் பரந்து இருப்பவன் இவன் என்று கூறப்படுகிறவன். வருணன் ஆகாயத்தைக் குறிப்பவனாகவும், மேகம், மழை, ஆறு, கடல் போன்ற நீர் சார்பான அம்சங்களுடன் தொடர்பு படுத்தப்படுபவனாகவும் உள்ளான்.

அளவற்ற அறிவுத்திறனும், வலுவும் உள்ளவனாகப் புகழப்படும் இவன், உலகம் முழுவதையும் மேற்பார்வை செய்து வருவதாக அக்கால இந்துக்கள் கருதினார்கள். இதனால் வருணனை ஆயிரம் கண்கள் உடையவனாக இந்து சமய நூல்கள் சித்தரிக்கின்றன.

ஆரம்பகாலத்தில் இப் பிரபஞ்சம் முழுமையையும் ஆள்பவன் இவனே என்றும் கருதப்பட்டது. எனினும் வேதகாலத்தின் பிற்பகுதிகளில் இந்திரன் சிறப்புப் பெறத் தொடங்கியபோது, வருணனின் முக்கியத்துவம் குறைந்து விட்டது எனலாம்.

வருணன் தமிழர் தெய்வம்[தொகு]

நெய்தல் எனப்படும் கடல் சார்ந்த நில மக்களின் தெய்வம் வருணன் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1]

பழையர் பரதவர் எனப்படும் குடிமக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் கடல் தெய்வத்துக்குக் காணிக்கையாகச் சொரிந்து வழிபட்டனர்.

யாழிசை கூட்டிக் கானல் வரி பாடிய மாதவி கோவலன் அல்லாத வேறொருவன் மேல் தான் காதல் கொண்டது போல் பாடிய பொய்ச்சூளைப் பொருத்தருளவேண்டும் எனக் கடல்தெய்வத்தை வேண்டித் தன் பாடலை முடிக்கிறாள்.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. வருணன் மேய பெருமணல் உலகம் – தொல்காப்பியம், அகத்திணையியல் நூற்பா 5
  2. துயர் எஞ்சு கிளவியால் பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடல் தெய்வம் நின் மலரடி வணங்குதும். – சிலப்பதிகாரம், கானல் வரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருணன்&oldid=3754504" இலிருந்து மீள்விக்கப்பட்டது