எம்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம்பார்
பிறப்புகோவிந்த பட்டர்
மதுரமங்கலம், தமிழ்நாடு
இறப்புதிருவரங்கம், தமிழ்நாடு
மற்ற பெயர்கள்எம்பார்

வைணவ பெரியோர்களில் மிக்கப்புகழுடைய எம்பார் என்பவர் திருப்பெரும்பூதூரின் அருகில் உள்ள மழலைமங்கலத்தில் (தற்போதைய மதுரமங்கலம்) கிபி 1026 ஆம் ஆண்டு தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் கமலநயன பட்டர் என்பவருக்கும் ஸ்ரீதேவி அம்மாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார். ஸ்ரீதேவி அம்மாள் வைணவ மகாசாரியனாகிய இராமானுசருக்கு சிற்றன்னையாவார். தாய் மாமனான திருமலை நம்பி இவருக்கு இட்ட பெயர் கோவிந்தபட்டர். திருப்புட்குழியில் தன் அண்ணனாகிய இராமானுசருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றார். பின்னாளில் எம்பார் என வைணவர்களால் புகழ்பெற்றவர் இவரே.[1]

உளங்கைக் கொணர்ந்த நாயனார்[தொகு]

யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றபோது குருவின் கருத்துக்களோடு இராமானுசருக்கு பலமுறை கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் விளைவு குருவுக்கு எதிரியானார். அதன் தொடர்ச்சியாக யாதவ பிரகாசர் தன் சீடர்குழாமோடு இராமானுசரை கொலைபுரியும் திட்டத்தோடு கங்கை யாத்திரை மேற்கொண்டபோது அக்குழுவில் இருந்த கோவிந்தபட்டரால் உண்மை அறியப்பட்டு இராமானுசர் காப்பற்றப்பட்டார். பின்னர் கங்கை கரையில் நீராடுகையில் கோவிந்தப்பட்டரின் கையில் சிவலிங்கம் எதிர்படவே அதனை திருக்காளத்தி (தற்போதைய காளஹஸ்தி) தலத்தில் நிலைபெறச் செய்தார். இச்சம்பவத்தால் "உளங்கைக் கொணர்ந்த நாயனார்" என சைவர்களால் அழைக்கப்பட்டார்.

மீண்டு(ம்) வந்தார்[தொகு]

பெரிய திருமலை நம்பிகள் மூலம் வைணவத்திற்கு திரும்பிய இவர், இராமானுசர் திருமலைக்கு வரும்வரை நம்பிகளுக்கு சீடராயிருந்தார். இராமாயணம் பயில்வதற்காக இரண்டாம் முறை திருமலைக்கு வந்த இராமானுசருக்கு திருமலை நம்பிகளின் பரிசாக கோவிந்தபட்டர் உடன் அனுப்பட்டார். அப்போதிருந்து தன் இறுதிமூச்சுவரை எம்பெருமானாருக்காகவே தன்னைப் பணித்துக்கொண்டார்.

பெயர்க்காரணம்[தொகு]

இவரின் குண நலத்தால் "எம்பெருமானார்" என்ற இராமானுசரின் பெயரையே அடியார்கள் இவருக்கு இட்ட போதும், ஆச்சாரியன் மீது கொண்ட அளவுக்கடந்த பக்தியினால் ஏற்பட்ட அடக்கத்தின்பால் எம்பார் என தன் பெயரை சுருக்கிக்கொண்டார்.

பிற பெயர்கள்[தொகு]

  • கோவிந்த பெருமாள்
  • கோவிந்த தாசர்
  • இராமானுச பாத சாயையார்
  • எம்பெருமானார்
  • உளங்கைக் கொணர்ந்த நாயனார்

இயற்றிய நூல்கள்[தொகு]

  • விஞ்ஞான ஸ்துதி
  • எம்பெருமானார் வடிவழகு பாசுரம்
  • சரமகுரு விசயம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Embar
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்பார்&oldid=2769458" இருந்து மீள்விக்கப்பட்டது