உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்

ஆள்கூறுகள்: 12°50′32″N 79°41′23″E / 12.8422°N 79.6897°E / 12.8422; 79.6897
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
அமைவிடம்காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூற்றுகள்12°50′32″N 79°41′23″E / 12.8422°N 79.6897°E / 12.8422; 79.6897
ஏற்றம்131
கட்டப்பட்டதுபொ.ஊ. 685–705
கட்டிடக்கலைஞர்unknown, but commissioned by இராஜசிம்மன்
கட்டிட முறைதென்னிந்திய சிற்பக்கலை (பல்லவர்)
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் is located in தமிழ் நாடு
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்ற, சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள, காஞ்சிபுரத்தில், நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. பெரிய காஞ்சிபுரம் புத்தேரி தெரு வழியாக சென்று சற்றுத் தொலைவிலுள்ள இக்கோயிலை அடையலாம்.[1] இக்கோயில் காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.[2]

வரலாற்றுப் பின்னணி

[தொகு]
அழகிய சிற்பங்களோடுகூடிய உட்சுற்றின் தோற்றம்

தென்னிந்திய கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற்கோயில்களை அமைத்துத் தென்னிந்திய கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது பல்லவர்கள் ஆவர். தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும் முன்னோடிகளாக அமைந்தார்கள். இக்கோயில் பொ.ஊ. 700ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டது.

இங்கே அமைந்துள்ள பல கால கட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் தென்னிந்திய கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்பு முனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது காஞ்சிபுரத்திலுள்ள மிக்க பழைமை மிக்க கோயிலாகும். இதைக் கல்வெட்டுக்கள் ’இராஜசிம்மேச்சரம்’ எனக் கூறுகின்றன. தொடக்கத்தில் இக்கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால் சூழப்பட்டிருந்தன.

கட்டுமானக் கோயில்கள் கட்டும் தொழில் நுட்பம், பல்லவ மன்னனான இராஜசிம்மனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது பாறையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட கோயிலாகும்.[3] இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட இக்கோயில் சிற்பக் கலையழகு வாய்ந்ததாகும்.[1] தான் மட்டுமின்றி தன் மகனையும், தன் மனைவியையும்கூட இந்த கட்டிடப்பணியில் இராஜசிம்மன் ஈடுபடுத்தியுள்ளார்.[4] பொ.ஊ. 14ஆம் நூற்றாண்டளவில், விஜயநகர பேரரசின் காலத்தில், இக்கோயில் மீண்டும் சிறப்பு பெற்றது.[5]

கட்டிட அமைப்பு

[தொகு]

காஞ்சிபுரம் நகரத்தின் மேல் கோடியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை நெருங்கும்போது ஓர் அழகிய கந்தர்வ விமானம் தரையில் இறங்கி நிற்கிறதோ என்ற பிரமிப்பினை உணர முடியும். பூவுலகில் கைலாசம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது.[4] இக்கோயில் வெளிச்சுற்று, உள்சுற்று, மூலவர் கட்டடப்பகுதி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.[2]

விமானம்

[தொகு]

இறைவனது கருவறை மீதுள்ள விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது.

துணைக் கோயில்கள்

[தொகு]

பிரதான கோயிலைச் சுற்றிப் பல சிறு துணைக் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. வாயிலில் அமைந்துள்ள கோயில் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி ரங்கபதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும்.[4] சுற்றியுள்ள 58 சிறு கோயில்களில் ஒரு புறம் சிவனின் சம்கார மூர்த்திகளையும், மற்றொரு புறம் அனுக்கிரக மூர்த்திகளையும் காணமுடியும். இக்கோயிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோயில் உள்ளது. மகேந்திரவர்மேச்வரகிரகம் என்றழைக்கப்படுகிறது.[5]

புனர் ஜனனி

[தொகு]

கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்கத்திருமேனியாக உள்ளார்.[1] கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது. அதன் உள் மற்றும் வெளி வாயில்கள் குறுகலாக இருந்து தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று மீளும்போது புனர்ஜென்மம் எடுத்த நினைவு மேலோங்கி நிற்கும். இதனைச் சுற்றி வந்தால் மறு பிறவி இல்லை என்று பொருளாகும்.[4] மூலவர் சன்னதி கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது.[2]

பல்லவர் கால ஓவியங்கள்

[தொகு]

பிரதான கோயிலிலும், அதைச் சுற்றிலும் உள்ள துணைக் கோயில்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன.

பட்டடக்கல்

[தொகு]

இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (பொ.ஊ. 740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் கர்நாடகாவில் உள்ள பட்டடக்கலுக்கு கொண்டு சென்றார். அங்கு விருப்பாட்ஷா கோயிலைக் கட்டினார். அரசி லோகமாதேவியின் தெய்வமான விருப்பாட்ஷாவை அங்கு அமைத்தார். அக்கோயில், கைலாசநாதர் கோயிலுக்கும், அதைக்கட்டிய ராஜசிம்மனுக்கு அவருடைய எதிரி உருவாக்கிய நினைவுச்சின்னமாக இப்போதும் திகழ்கிறது.[3] அக்கோயில் லோகமாதேவிசபுரம் என்றும் விருபார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.[5]

விழாக்கள்

[தொகு]

தொல்பொருள் ஆய்வுத்துறையின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன. மகாசிவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 2.2 "கட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில், மாலை மலர், 10 செப்டம்பர் 2019". Archived from the original on 2019-10-01. பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.
  3. 3.0 3.1 காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கு ஒரு டூப்ளிகேட் கோவிலா?, டாப் தமிழ்நியூஸ், 18 ஏப்ரல் 2019[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 4.2 4.3 அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  5. 5.0 5.1 5.2 நயமிக்க காஞ்சி கைலாசநாதர் கோயில், தினமணி, 2 சூன் 2017[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணைகள்

[தொகு]
  • சந்திரமூர்த்தி. மா., தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் தொகுதி-1, மணிவாசகர் பதிப்பகம், 2003
  • Percy Brown, Indian Architecture (Buddhist and Hindu), D.B.Taraporevala & co. Private Ltd.,Bombay, 1971
  • தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006

வெளியிணைப்புகள்

[தொகு]

படத்தொகுப்பு

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]