காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் கருடேசம் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 12°49′42″N 79°42′28″E / 12.828280°N 79.707680°E |
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் கருடேசம் |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முத்தீசுவரர் |
தீர்த்தம்: | சிவதீர்த்தம் |
வரலாறு | |
தொன்மை: | 1000 - 2000 ஆண்டுகள்.[1] |
காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (கருடேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் சிவனடியாரைப்போல் வந்த இறைவனின் ஆடையை திருக்குறிப்புத் தொண்டர் துவைத்தளித்த திருக்குளம், கோயிலின் அகத்திலுள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[2]
இறைவர், வழிபட்டோர்
[தொகு]- இறைவர்: முத்தீஸ்வரர்.
- வழிபட்டோர்: கருடன், திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.
தல வரலாறு
[தொகு]கருடன் இவ்விறைவனை வழிபட்டு, தன்னை வருத்திய சத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளை அழிக்கும் வரத்தைப் பெற்றதாக சொல்லப்படுகிறது.[3]
- கருடன் வழிபட்ட கருடேசுவரர் எனும் தனி சந்நிதி இக்கோயில் உட்புறத்தில் உள்ளது.
- கருடன் வழிபட்டமையால் இக்கோயில் கருடேசம் எனவும் வழங்கப்படுகிறது.
- திருக்குறிப்புத் தொண்டர் முத்திபேறடைந்த பெரும்பதியாகவும் குறிப்பிடப்படுகிறது.
தல விளக்கம்
[தொகு]முத்தீச தல விளக்கம் என்பது, காசிப முனிவரின் மனைவியாகிய கத்துரு, சுபருணை ஆகியோர் தத்தம் அழகைப் பாராட்ட நடுநின்ற கணவர் கத்துரு அழகின் மிக்கவள் என்றமையின், தோற்ற சுபருணை, தங்களுள் ஒட்டியவாறு சிறையிடைப் பட்டனள். தேவ அமுதம் கொடுப்பின் விடுதலை பெறுவை என்ற கத்துருவின் விருப்பத்தை நிறைவு செய்யச்சுபருணை காஞ்சியில் முத்தீசரை வணங்கி வரம்பெற்றுக் காசிப முனிவர் அருளால் கருடனை ஈன்று வளர்த்து அவனுக்குக் குறையைக் கூறினள். கருடன் தேவலோகம் சென்று இந்திரனைப் புறங்காணச் செய்து அமுதத்தைக் கைப்பற்றி வருங்கால் தடுத்த திருமாலொடு இருபத்தொரு நாள் நிகழ்ந்த கடும்போரில் வெற்றி தோல்வி கண்டிலன்.
திருமால் வியந்து ‘வேண்டுவகேள் தருதும்’ என்றனர். கருடன் கேட்டு, ‘நினக்கு யாது வேண்டும் அதனை என்பாற் பெறுக’ எனத் திருமாலை நோக்கிக் கூறினன். ‘எனக்கு வாகனமாம் வரத்தைத் தருக’ என்ற திருமாலுக்கு வருந்தியும் சொல் தவறாது ‘அவ்வாறாகுக’ என்று பின் இசைவு பெற்றுச் சென்று, அமுதத்தைக் கத்துருவிற்குக் கொடுத்துத் தாயைச் சிறைவீடு செய்தனன் கருடன். கருடன் தனது தாய் அருச்சித்த முத்தீசரை வணங்கிக் கத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளைக் கொல்லும் வரத்தைப் பெற்றனன். ஏகாலியர் குலத்திற் பிறந்த திருக்குறிப்புத் தொண்ட நாயனாரும் முத்திபெற்றனர். கருடன் வழிபட்ட கருடேசர், முத்தீசர்க்கும் பின்புறம் கோயில் கொண்டுள்ளனர். இக்கோயில் காந்திரோடில் உள்ளது.[4]
அமைவிடம்
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியில் அடிசன் பேட்டை காந்தி சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையின் 2-வது கிலோமீட்டர் தொலைவில் இத்தலமுள்ளது.[5]
இவற்றையும் காண்க
[தொகு]- காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) (கம்மாளத் தெரு)
- காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் (திருமேற்றளித் தெரு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ valaitamil.com அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில்
- ↑ Project Madurai, 1998-2008|சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2|16. முத்தீசப் படலம் 798 - 814
- ↑ tamilvu.org | சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த | காஞ்சிப் புராணம் | முத்தீசப் படலம் 244-249
- ↑ Tamilvu.org | காஞ்சிப் புராணம் | முத்தீசம் | திருத்தல விளக்கம் | பக்கம்: 807 - 808
- ↑ "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | முத்தீசம்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-25.