மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாகாலேஸ்வரர் கோயில் உஜ்ஜைன்

மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது சிப்ரா ஆற்றாங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]


சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.

சோதிலிங்கம் தோன்றியது குறித்த தொன்மம்[தொகு]

புராண காலத்தில் அவந்தியின் அருகில் இருந்த மலைக்காட்டில் ஒரு சாபத்தால் வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் இருந்தான். அவன் அவ்வப்போது நகருக்கு வந்து சூறையாடி மக்களுக்கு பெரும் துன்பத்தை இழைத்துவந்தான். அப்போது அவந்தி நகரில் வாழ்ந்துவந்த அந்தணரான விலாசனை நகர மக்கள் அணுகி வேதாளத்திடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். அவரும் அதற்கு சம்மதித்து வேத விற்பன்னர்களையும், துறவிகளையும் அழைத்துவந்து சிவனை நோக்கி பெரும் வேள்வி ஒன்றை செய்தனர். வேள்வியின் முடிவில் வேள்வி குண்டத் தரைவெடித்து அதிலிருந்து ஒரு லிங்கம் தோன்றியது. அந்த லிங்கத்தை இரண்டாக பிளந்துகொண்டு ஆவேசத்துடன் மாகாளர் தோன்றி வேதாளத்தை அழித்தார். அதன்பிறகு மக்கள் மாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்குமாறு வேண்டினர். மாகாலரும் ஆவேசம் தணிந்தார். பிளந்த லிங்கம் ஒன்றுசேர மாகாளர் சோதிவடிவில் அதில்கலந்து சோதிலிங்கமானார்.

கோயில் அமைப்பு[தொகு]

மாகாளர் கோயிலானது உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலத்தானமானது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள்வழியாக சென்று தரிசிக்கவேண்டும். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்டியளிக்கிறார்.

மகாகாலேஸ்வரர் கருவறைக்கு மேலுள்ள அடுத்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலே செல்ல படிக்கப்படுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்த மூன்றாவது தளத்தில் நாகசந்திரேஸ்வரர் சிலை உள்ளது. அங்கு வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் பைரவர் ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் நந்தி சிலை உண்டு.

அருகில் உள்ள கோயில்கள்[தொகு]

  • காலபைரவர் கோயில்
  • ஹரஸித்தி மாதா கோயில் {உச்சினி மாகாளி}
  • சாந்திபனி முனிவர் ஆசிரமம
  • சிந்தாமணி விநாயகர் கோயில்
  • திரிவேணி நவக்கிரகக் கோயில்
  • மங்கள்நாத் கோயில்
  • சித்தர் கோயில்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://dic.mp.nic.in/Ujjain/mahakal/default.aspx
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்[தொகு]