பிள்ளையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிள்ளையார்
Ganesha Basohli miniature circa 1730 Dubost p73.jpg
அதிபதி அனைத்திற்கும்,பூதகணங்களுக்கும்
வேறு பெயர்கள் விநாயகர், சர்வாயுதர், மயூரேசர், கபிலர், விகடர்..
தேவநாகரி गणेश
சமசுகிருதம் கணேஷா
மந்திரம் ஓம் கணேசாய நமஹ
துணை சித்தி, புத்தி
பெற்றோர்கள் சிவபெருமான், பார்வதி அம்மை
சகோதரன்/சகோதரி முருகப்பெருமான்
வாகனம் சுண்டெலி (மூஞ்சுறு)
நூல்கள் கணேச புராணம், விநாயக கவசம், விநாயகர் அகவல்
சமயம் காணாதிபத்தியம்
விழாக்கள் விநாயகர் சதுர்த்தி

பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா; இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.[1] விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் (சமசுகிருதம்: गाणपत्य; IAST: gāṇapatya) எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது.[2]

பெயர்க்காரணம் மற்றும் பிற பெயர்கள்[தொகு]

இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும்[3][4], யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

விநாயகரின் வேறு பெயர்கள்[தொகு]

வித்தியாசமான விநாயகர் சிலை
 • பிள்ளையார்
 • கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
 • ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
 • கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
 • விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

காணபத்தியம்[தொகு]

இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம்.

இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .

’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.

கிருத யுகம்[தொகு]

காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.

திரேதா யுகம்[தொகு]

அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்

துவாபர யுகம்[தொகு]

கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.

கலி யுகம்[தொகு]

சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது

புராணங்களும் வரலாறும்[தொகு]

’வேத காலம்’ என்று கூறப்படும் தொன்மையான காலகட்டத்திற்கும் முன்பிருந்தே விநாயகர் வழிபாடு உலகின் பலபகுதிகளிலும் இருந்து வந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.[5]

’கணேச புராணம்’ விநாயகர் அவதாரத்தை யுகத்திற்கொன்றாக நான்கு அவதாரமாகக் கூறுகின்றது.

விநாயகரின் தோற்றம் பற்றி பலவிதமான கருத்துக்கள் வழங்கப்படுகின்றன.

 • கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார்.(உமையம்மை மஞ்சளைத் திரட்டி விநாயகர் செய்தார் என்றும் கூறுவர் ) யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அதன் பின்னர் தாம் காவல் காக்கும்போது உள்ளே நுழைய அங்கே வந்த சிவபெருமானைத் தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான், தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்ட வைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.
 • கயிலாய மலையின் மந்திர சித்திர மண்டபத்தில் சிவபெருமான் உமையம்மையோடு எழுந்தருளினார். அங்கு ஏழு கோடி மந்திர சித்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே சமஷ்டிப் பிரணவம் என்ற இரு மந்திரங்கள் அமைந்திருந்தன. சிவபெருமானும் உமையம்மையும் அவற்றை நோக்க அவ்விரு மந்திரங்கள் வடிவாய் யானை முகத்துடன் விநாயகர் அவதரித்தார்.[6]
 • சிவபெருமான் மற்றும் பார்வதி தம்பதியினர் யானைகளாக உருவம் தரித்து விநாயகரை பெற்றெடுத்தனர் என மகாபுராணங்களில் ஒன்றான இலிங்க புராணம் கூறுகிறது.[7]

சிவபெருமான், உமையம்மைக்கு யானை முகம் மனித உடலும் உடைய ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தையை எடுத்து மகிழ்ந்தார் பார்வதி தேவி. அக்குழந்தை தாயின் மடிவிட்டு இறங்கி கைகொட்டி தாண்டவம் ஆடியது. ஐந்து கைகளை உடைய குழந்தை என்பதால் ஐங்கரன் என்று அழைக்கப்பட்டார்.

தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு[தொகு]

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.[8]

திருவுருவ விளக்கம்[தொகு]

திருவடி[தொகு]

ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

பெருவயிறு[தொகு]

ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

ஐந்துகரங்கள்[தொகு]

பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்

கொம்புகள்[தொகு]

மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.[9]

தாழ்செவி[தொகு]

விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.[10]

விநாயகர் மூர்த்தங்கள்[தொகு]

பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாக காட்சியளிக்கும் விநாயகர், பல்வேறு வடிவங்களிலும் கோவில்களில் காட்சியளிக்கிறார்.

நரமுக விநாயகர் - மனித முகத்துடன் காட்சியப்பவர். சிதலப்பதி முத்தீசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் தும்பிக்கையின்றி மனித உருவில் உள்ளார்[11]

நடன கணபதி, நர்ததன கணபதி - நடனமாடும் விநாயகர். சித்தி, புத்தி கணபதி - மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.

முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்[தொகு]

 1. உச்சிட்ட கணபதி
 2. உத்தண்ட கணபதி
 3. ஊர்த்துவ கணபதி
 4. ஏகதந்த கணபதி
 5. ஏகாட்சர கணபதி
 6. ஏரம்ப கணபதி
 7. சக்தி கணபதி
 8. சங்கடஹர கணபதி
 9. சிங்க கணபதி
 10. சித்தி கணபதி
 11. சிருஷ்டி கணபதி
 12. தருண கணபதி
 13. திரயாக்ஷர கணபதி
 14. துண்டி கணபதி
 15. துர்க்கா கணபதி
 16. துவிமுக கணபதி
 17. துவிஜ கணபதி
 18. நிருத்த கணபதி
 19. பக்தி கணபதி
 20. பால கணபதி
 21. மஹா கணபதி
 22. மும்முக கணபதி
 23. யோக கணபதி
 24. ரணமோசன கணபதி
 25. லட்சுமி கணபதி
 26. வர கணபதி
 27. விக்ன கணபதி
 28. விஜய கணபதி
 29. வீர கணபதி
 30. ஹரித்திரா கணபதி
 31. க்ஷிப்ர கணபதி
 32. க்ஷிப்ரபிரசாத கணபதி

விநாயக சதுர்த்தி[தொகு]

விநாயக சதுர்த்தி குறித்த நிகழ்படம்

வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.

துர்வா கணபதி விரதம் துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லைக் குறிப்பதாகும். விநாயகருக்கு விரதம் இருந்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும், மாலையிடுவதும் இந்நாளில் செய்யப்படுகிறது. [12]

விநாயகர் அகவல்[தொகு]

ஔவையார் விநாயகர் மேல் பாடிய அகவல் ’சீதக்களப செந்தாமரை.." எனத்துவங்கும் விநாயகர் அகவல்.விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்துவருவோரைத் தீவினை நெருங்காது, நல்லதே நடக்கும் என்பது தொன்நம்பிக்கை

கணேச பஞ்சரத்னம்[தொகு]

கணேச பஞ்சரத்னம் ஆதிசங்கரர் இயற்றிய, விநாயகப்பெருமானை வழிபடும் சுலோகம்.

தமிழ் நாட்டின் சிறப்பு[தொகு]

மூஞ்சூறு வாகனத்தில் பிள்ளையார்.

தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூறையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.

ரூபாய் நோட்டில்[தொகு]

இந்தோனேஷியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது.[13]

விநாயகர் படத்தொகுப்பு[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. Rao, p. 1.
 2. வைணவத்தில் தும்பிக்கை ஆழ்வார் என்று அறியப்பெறுகிறார்
 3. (ரிக் வேதம்:2.23.1)
 4. [1] பக்கம் 24
 5. குமுதம் ஜோதிடம்; 21.09.2012; பக்கம் 2
 6. ரஜன பந்தன மகா கும்பாபிஷேக மலர்;4.6.1990;ஈச்சனாரி; விநாயகர் சதுர்த்தி
 7. http://temple.dinamalar.com/news_detail.php?id=10975 இலிங்க புராணம் - தினமலர் கோயில்கள் தளம்
 8. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 167. 
 9. ரஜன பந்தன மகா கும்பாபிஷேக மலர்; ஈச்சனாரி; 4.6.1990; விநாயகர் பெருமை ; அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்
 10. பொதிகை தொலைக்காட்சி; விநாயகர் சதுர்த்தி நேரடி வர்ணனை நிகழ்ச்சி; 29.08.2014
 11. http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2014/08/28/ஆதிவிநாயகப்-பெருமான்/article2402787.ece
 12. தினமலர் பக்திமலர் 13.08.2015 பக்கம் 3
 13. குமுதம் ஜோதிடம்; 21.9.2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளையார்&oldid=2243514" இருந்து மீள்விக்கப்பட்டது