உள்ளடக்கத்துக்குச் செல்

வழுவூர் வீரட்டானேசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 11°02′41″N 79°38′15″E / 11.0446°N 79.6376°E / 11.0446; 79.6376
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரட்டானேசுவரர் கோயில்
கஜசம்காரமூர்த்தி-வீரட்டானேசுவரர் கோயில்
வீரட்டானேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
வீரட்டானேசுவரர் கோயில்
வீரட்டானேசுவரர் கோயில்
வழுவூர் வீரட்டானேசுவரர் கோயில், மயிலாடுதுறை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°02′41″N 79°38′15″E / 11.0446°N 79.6376°E / 11.0446; 79.6376
பெயர்
வேறு பெயர்(கள்):பர கைலாசம்
ஞானபூமி
பெயர்:வீரட்டானேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை
அமைவு:வழுவூர் மயிலாடுதுறை அருகில்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை

வழுவூர் வீரட்டானேசுவரர் கோயில் என்பது அட்டவீரட்டானக் கோயில் தலங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள வழுவூரில்[1][2] அமைந்துள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [3]

ஊர்ப்பெயரின் காரணம்

[தொகு]

பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது.

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் வீரட்டானேசுவரர் ஆவார். இறைவி பால குஜாம்பிகை ஆவார். [3]

கோயில் அமைப்பு

[தொகு]

இந்தக் கோயில் ஒரு பெரிய கோயில் ஆகும். கோயில் வாயிலை நூற்று ஐம்பதடிவரை உயர்ந்த கோபுரம் அழகு செய்கிறது. கோபுரத்தைக் கடந்து சென்றால், ஈசான தீர்த்தம் என்னும் திருக்குளம் இருக்கிறது. தென் வடல் 342 அடியும் கிழமேல் 380 அடியும் உள்ள மதிலால் கோயில் சூழப்பட்டிருக்கிறது. கோயிலின் மூன்றாவது வாயிலையும் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். இந்த மண்டபத்தைக் கடந்து அடுத்த கட்டுக்குச் சென்றால் அங்குள்ள ஞானசபையிலே கஜசம்ஹாரர் காட்சியளிக்கிறார். ஒரு காலத்தில் யானை வடிவு கொண்ட கஜாசுரன் என்பவன் பிரமனை நோக்கித் தவஞ்செய்து அரிய வரங்களைப் பெற்றுத் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தியிருக்கிறான். தேவர்களும் முனிவர்களும் முறையிட இறைவன் கஜாசுரனுடன் போர் ஏற்று, அவன் உடல் கிழித்து, அந்த யானையின் தோலையே போர்வையாகப் போர்த்துக் கொண்டிருக்கிறார். இங்குள்ள கஜசம்ஹாரர் சிலையானது மூன்று நான்கு அடி உயரத்தில் அற்புதமாக உருவாகபட்டுள்ளது. யானையின் உள்ளே புகுந்து திருகிக்கொண்டு வரும் மூர்த்தியின் முன்பாகமும் பின்பாகமும் தெரியும்படி சிற்பம் சிறப்பாக வடிக்கபட்டுள்ளது. இச்சிற்பத்தில் பக்கத்திலே அஞ்சி ஒடுங்கும் அன்னை. அந்த அன்னையின் கரத்திலே தந்தையின் வெற்றி கண்டு மகிழும் குழந்தை முருகன். எல்லோருமே உருவாகியிருக்கிறார்கள்.

லிங்க உருவில் இருக்கும் மூலமூர்த்தி விரட்டேசுவரர். வடமொழியில் கிருத்திவாஸேசுவரர் என்பர். அதற்கு யானையின் தோலைப் போர்த்தி அருளியவர் என்றுதான் பொருள். இங்கு அம்மன் சந்நிதி கோயிலின் வட பக்கத்தில் தனித்திருக்கிறது. இவளையே பாலகுராம்பிகை என்றும் இளங்கிளைநாயகி என்றும் கூறுவார்கள். இளங்கிளை எவ்விதம் அழகு வாய்ந்ததாகவும், வளர்ச்சி உடையதாகவும் காணப்படுகிறதோ அவ்வாறே உலகத்தில் உயிர்களைத் தோன்றச் செய்து அவை வளர்ச்சி அடைய அருளுகிறாள் என்பது பொருள். இவளுக்கே கிருபாவதி என்ற பெயரும் உண்டு. இன்னும் இத்தலம் தீர்த்த விசேசத்தாலும் சிறப்புற்றது. சிவனுக்கு ஐந்து முகங்கள் என்பார்கள். ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியயோசாதம் என்பவை அவை என்றும் விளக்குவார்கள். இந்த ஐந்து முகங்களின் பேராலும், ஐந்து தீர்த்தங்கள் இக்கோயிலையொட்டி உருவாகியிருக்கின்றன.

கலவெட்டுகள்

[தொகு]

இக்கோயிலில் பதினைந்து கல்வெட்டுக்கள் உண்டு. கல்வெட்டுக்களில் இவ்வூர் வழுகூர் என்று இருக்கிறது. திருவழுதூர் நாடு என்றும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்தைச் சேர்ந்ததென்றும் குறிக்கப் பெற்றிருக்கிறது. இத்தலத்து இறைவனை வீரட்டானாம் உடையார், வழுவூர் நாயனார் என்றெல்லாம் கல்வெட்டுகள் கூறுகின்றன. கோயிலில் விளக்கிட, திரும்வெம்பாவை ஓத எல்லாம் நிபந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மதில், கோபுரம் முதலியவற்றை அழகப் பெருமாள் பிள்ளை கட்டியது என்றும் அறியவருகிறது. இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பல நிபந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தான் அம்பிகையின் கோயில் கட்டப்பட்டது என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. விஜய நகர மன்னன் வீரபொக்கண்ண உடையார் காலத்தில் 1324ல் காவிரி வெள்ளத்தால் சேதம் அடைந்த நிலங்களுக்குத் தீர்வை வஜா ஆகியிருக்கிறது.

விழாக்கள்

[தொகு]

மாசி மகத்தன்று இக்கோயிலில் பெரிய விழா நடைபெறுகிறது. அன்று உதயத்தில்தான் கஜசம்ஹார விழா நடனக்காட்சி. மார்கழித் திருவாதிரை அன்றுமே கஜசம்ஹார நடனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரைக்கு முந்திய நாள் புனர்பூசத்தில் கஜசம்ஹாரரை வெண்மையாக அலங்காரம் செயவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14.
  3. 3.0 3.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்

[தொகு]