தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் | |
---|---|
மூலவர் சன்னதிக்கு முன்பாக கொடி மரம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
ஏற்றம்: | 91 m (299 அடி) |
ஆள்கூறுகள்: | 10°48′19″N 79°08′25″E / 10.8053°N 79.1404°E[1] |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வசிஷ்டேஸ்வரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் கருந்தட்டாங்குடியில் அமைந்துள்ளது. வைப்புத்தலமான இத்தலம் சுந்தரர் பாடியதாகும்.[1]
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [2] [3]
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி, கருவேலநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி, திரிபுரசுந்தரி என்றழைக்கப்படுகிறார்.
அமைப்பு
[தொகு]கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது.கிழக்கு வாயிலை ஒட்டி அமிர்த புஷ்கரணி என்றும் சூரிய புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகின்ற குளம் காணப்படுகிறது. மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. இவ்வாயிலின் வழியாக உள்ளே வந்தால் முதலில் கொடி மரமும் பலிபீடமும் காணப்படுகின்றன. அடுத்துள்ள மண்டபத்தில் வலது புறம் நர்த்தன கணபதி, முருகன், விநாயகர் ஆகியோரும், இடது புறம் சனீஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக வெளியில் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் உள்ளனர். இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. மூலவர் கருவறை கோஷ்டத்தில் ஞானசம்பந்தர், ஆடலரசர், அப்பர், கங்காளர், ரிஷிபத்தினி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, வசிஷ்டர் எனப்படும் அகஸ்தியர், அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், கங்காளதேவர், கங்காதரர், பிரம்மா, வீணாதரர், காலசம்காரர், பிட்சாடனர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. வடமேற்கே தல மரமான வன்னி மரம் உள்ளது. மரத்தின் முன்பாக பைரவரையும் நாகத்தையும் காணலாம். திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஏழு லிங்கங்கள், தொடர்ந்து ஜுரகரேஸ்வரரைக் குறிக்கும் லிங்கம், கஜலட்சுமி ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் நான்கு புறமும் விநாயகர் சன்னதிகள் உள்ளன. மேற்கே வாயிலில் பாலதண்டாயுதபாணி சன்னதி உள்ளது.
மூலவர் சன்னதியின் இடது புறமாக உள்ள அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது.சன்னதியின் முன்புறம் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கோயிலின் வெளிச்சுற்றில் நான்கு பக்கங்களிலும் வாயில்கள் காணப்பட்டபோதிலும் இந்தத் தென்புற கோயில் வாயில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இந்த கோபுரத்தின் முன்பாக நந்தி மண்டபம் கோயிலின் வெளியே உள்ளது.
குடமுழுக்கு
[தொகு]இக்கோயிலில் 1.4.1991இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது. 2 பிப்ரவரி 2017இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.[4]
உறைகிணறுகள்
[தொகு]இக்கோயில் குளத்தைத் தூர் வாரும்போது முற்காலச்சோழர் காலத்தைச் சேர்ந்த ஏழு உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. [5] [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, வ.எண்.38, ப.224
- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 வ.எண்.58
- ↑ J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur, Sl.No.58
- ↑ கரந்தை கருணா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா, தினமணி, 3 பிப்ரவரி 2017
- ↑ தஞ்சாவூர் குளத்தில் சோழர் கால ஏழு உறைகிணறுகள் கண்டுபிடிப்பு, தினமணி, 21 மே 2022
- ↑ தஞ்சையில் கரிகாலன் குஷ்டம் தீர்த்த கோவில் குளம், திடீரென வெளிப்பட்ட உறைகிணறுகள், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், 21 மே 2022
வெளி இணைப்புகள்
[தொகு]புகைப்படத்தொகுப்பு
[தொகு]-
நந்தி மண்டபம்
-
தென்புறவாயில் ராஜகோபுரம்
-
மூலவர் விமானம்
-
இறைவி விமானம்
-
இறைவி சன்னதி நுழைவாயில்
-
மூலவர் சன்னதி நுழைவாயில்
-
கோஷ்டத்தில் சிற்பங்கள்