அளப்பூர் என்ற பெயரில் அழைக்கப்படும் இக்கோயில் அப்பர், சுந்தரர் பாடிய தேவார வைப்புத்தலமாகும்.[1] இக்கோயில் திருக்கடையூருக்குத் தென்கிழக்கில் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் அலைகள் இசை பாடுவதுபோல இருப்பதால் தரங்கம்பாடி என்று பெயர் பெற்றதாகக் கூறுவர்.[2]
இக்கோயிலில் உள்ள மூலவர் மாசிலாமணிநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேஸ்வரி ஆவார். கடல் அலைகள் மோதி மூலவர் கருவறையைத் தவிர அனைத்தும் இடிபாடான நிலையில் இருந்த கோயில் தற்போது திருப்பணி பெற்றுள்ளது.[2] மூலவரை மாசிலாமணீசுவரர் என்றும், மாசிலாநாதர் என்றும் கூறுகின்றனர்.
பழைய கோயில் கடலையொட்டி அமைந்துள்ளது. கடல் அலைகள் கோயிலுக்கு நெருக்கமாக வந்து செல்கின்றன. பழைய கோயிலின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல் உள்ளனர். விநாயகர் சன்னதி உள்ளது. மூலவர் கருவறை பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன.
பழைய கோயிலுக்கு சற்று முன்பாக, 1 செப்டம்படர் 2013இல் குடமுழுக்கு நடைபெற்ற புதிய கோயில் அமைந்துள்ளது. கருவறையில் மாசிலாநாதர் மூலவர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. மூலவரின் இடது புறம் தனிச்சன்னதியில் இறைவி உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரமன் ஆகியோர் உள்ளனர். திருச்ற்றில் விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், பாலமுருகன் (மயில் பலிபீடம் முன்பு), அகிலாண்டேஸ்வரி, கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகளும், சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. அடுத்து நவக்கிரக சன்னதி உள்ளது. சந்திரன், சூரியன், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.
குலசேகரன்பட்டினம், சடகன்பாடி என்ற பெயர்களில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. குரா மரத்தைத் தல மரமாகக் கொண்டதால் திருக்குராச்சேரி என்று அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் திருக்களாச்சேரி என்ற பெயரை இந்த ஊர் பெற்றது. திருமால், பாரத்வாஜர், ஆபஸ்தம்பர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். நாகப்பாம்பு உருவில் திருமால் சிவனை வழிபட்டதால் மூலவர் நாகநாதர் என்றழைக்கப்படுகிறார்.[2] 1 செப்டம்பர் 2013, விஜய வருடம் ஆவணி 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு ஆனதற்கான இரு கல்வெட்டுகள் புதிய கோயிலில் உள்ளன.