கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
ஸ்ரீ கங்கா ஜடேஸ்வரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°01′50″N 79°17′52″E / 11.030499°N 79.297731°E / 11.030499; 79.297731
பெயர்
புராண பெயர்(கள்):திருவிசயமங்கை
பெயர்:ஸ்ரீ கங்கா ஜடேஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:கோவிந்தபுத்தூர்
மாவட்டம்:அரியலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:விசயநாதர் (ஸ்ரீ கங்கா ஜடேஸ்வரர்)
தாயார்:மங்கள நாயகி, மங்கைநாயகி, மங்களாம்பிகை
தீர்த்தம்:அர்ஜுன தீர்த்தம், கொள்ளிடம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:தமிழ் கல்வெட்டுகள்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில் அல்லது விசயமங்கை, சம்பந்தர், அப்பர் ஆகிய சமயக் குரவர்களால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சைவ இலக்கியங்களில் விசயமங்கை என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. விசயமங்கை என்பது கோவில் பெயரே ஊரின் பெயர் கோவிந்தபுத்தூர்(கோ கறந்த புத்தூர்). இத்தலம் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுத்தூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவதலம் ஆகும். தற்பொழுது உள்ள கோயில் கட்டடம் கி.பி 980-ல் உத்தம சோழனால் கட்டப்பட்டது.[1] [2]

அமைவிடம்[தொகு]

ஜெயங்கொண்டம்-மதனத்தூர் சாலையில், தா.பழூர், காரைக்குறிச்சி, திருபுரந்தன் அடுத்து இவ்வூர் உள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் கங்காஜடேஸ்வரர் ஆவார். இறைவி மங்களநாயகி ஆவார். [2]

பிற சன்னதிகள்[தொகு]

தட்சிணாமூர்த்தி, இறைவி, ராஜராஜன், மனைவி, ராஜேந்திரன், சம்பந்தர், சப்தமாதர்ள், விநாயகர், மூலத்திருமேனிகள் உள் மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. [2]

திருத்தலப் பாடல்கள்[தொகு]

இத்தலம் பற்றிய இரண்டு தேவாரப் பதிகங்கள் உள்ளன.

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்[தொகு]

குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே. 1
ஆதி நாத னடல்விடை மேலமர்
பூத நாதன் புலியத ளாடையன்
வேத நாதன் விசயமங் கையுளான்
பாத மோதவல் லார்க்கில்லை பாவமே. 2
கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
உள்ளி டத்துறை கின்ற வுருத்திரன்
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே. 3
திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம்
அசைய அங்கெய்திட் டாரழ லூட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே. 4
பொள்ள லாக்கை யகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான்
உள்ளல் நோக்கியென் னுள்ளுள் உறையுமே. 5
கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச்
செல்வ போற்றியென் பாருக்குத் தென்திசை
எல்லை யேற்றலு மின்சொலு மாகுமே. 6
கண்பல் உக்க கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழ லுத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே. 7
பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டும் நல்வரங் கொள்விச யமங்கை
ஆண்ட வன்னடி யேநினைந் தாசையால்
காண்ட லேகருத் தாகி யிருப்பனே. 8
வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்
பந்து வாக்கி உய்யக்கொளுங் காண்மினே.9
இலங்கை வேந்த னிருபது தோளிற
விலங்கல் சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும்
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே.10

திருஞானசம்பந்தர் பாடிய கதிகம்[தொகு]

மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாங்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே. 1
கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே. 2
அக்கர வரையினர் அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்
தக்கநல் வானவர் தலைவர் நாடொறும்
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே. 3
தொடைமலி இதழியுந் துன்எ ருக்கொடு
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல் விசய மங்கையே. 4
தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோ டினித மர்விடங்
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
வேடம துடையணல் விசய மங்கையே. 5
மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்
ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே. 6
இரும்பொனின் மலைவிலின் எரிச ரத்தினால்
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையுந் தூய மத்தமும்
விரும்பிய சடையணல் விசய மங்கையே. 7
உளங்கையி லிருபதோ டொருப துங்கொடாங்
களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத்
தளர்ந்துடல் நெரிதர அடர்த்த தன்மையன்
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே. 8
மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர்
தண்ணறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே. 9
கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே. 10
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே. 11

கல்வெட்டு[தொகு]

முதலாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டில், வடகரை ராஜேந்திர சிங்க வளநாட்டுப் பெரியவானவன் மாதேவி சதுர்வேதிமங்கலத்து விசயமங்கை என்றும், திரிபுவனச் சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டில் விக்கிரம சோழன் நாட்டு இன்னம்பர் நாட்டு விசயங்கை எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

மதுரை கொண்டு கோப்பரகேசரி வர்மன், பரகேசரி உத்தமச் சோழன், முதலாம் ராஜராஜசோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதல் குலோத்துங்கச் சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜதேவன் ஆகியோர் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இங்கு காணப்பெறுகின்றன. அதோடு இக்கல்வெட்டுகளில் விஜயமங்கலமுடைய மகாதேவர், விஜயமங்கலத்து மகாதேவர் மற்றும் விஜயமங்கலமுடைய பரமசாமி என இறைவனது திருப்பெயர்கள் குறிப்பிடப்பெற்றள்ளது. இவ்வூரில் திருத்தொண்டத் தொகையன் திருமடம் ஒன்று இருந்ததை திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜ தேவரின் 32வது ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகிறது.

திருஞானசம்பந்தர் பாடிய, வாழ்க அந்தணர் வாணவர் ஆயினம் என்னும் பாடல் இக்கோயிலில் கி.பி. 1248ல் எழுதப்படடுள்ள மூன்றாம் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டின் தொடக்கத்தில் எழுதப் பட்டுள்ளது. பாடல் பெற்ற க்ஷேத்திரங்கள் பலவற்றிலும் பூஜையின்போது தேவாரம் ஓதப்பட்டன. அதுபோல இந்த கோவிந்தபுத்தூர் கோயிலிலும் தேவாரப் பதிகங்கள் ஓதப்பட்டன. கி.பி. 984ல் வடிக்கப்பட்ட உத்தமச் சோழரின் கல்வெட்டு இக்கோயிலில் தேவார திருப்பதிகம் விண்ணப்பம் செய்ததைப் பற்றி கூறுகின்றது.

இத்திருமறை ஓதலுக்காக இவ்வூர் சபையினரால் நெல் வழங்கப்பட்டதையும், முதலாம் ராஜராஜனின் கி.பி. 1014ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று செய்தி சொல்கிறது. பாண்டியர் மற்றும் விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகளும் இங்கு பரவிக் கிடக்கின்றன. இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் ஆறு கல்வெட்டுகள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1426-ம் ஆண்டு விஜயநகர மன்னர்கள் காலத்தில் வடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இன்னம்பூரில் கி.பி. 1372ம் ஆண்டு விஜயநகர மன்னன் கம்பண்ணரின் கல்வெட்டில் இவ்வூர் கோவிந்தப்புத்தூர் என்றும், இவ்வூர் இந்நாட்டின் தலைநகரமாக விளங்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

படத்தொகுப்பு[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

திருவிசயமங்கை கோயில் கானொளி

அரியலூர் சுற்றுலா தலம்

திருஞானசம்பந்தர் பாடிய கதிகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tourist places in Ariyalur District". Government of India. மூல முகவரியிலிருந்து 2012-12-09 அன்று பரணிடப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

ஆள்கூறுகள்: 11°01′50″N 79°17′52″E / 11.030499°N 79.297731°E / 11.030499; 79.297731