உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருப்பைஞ்ஞீலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:10°56′09″N 78°38′31″E / 10.935893°N 78.641838°E / 10.935893; 78.641838
பெயர்
புராண பெயர்(கள்):ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச்சிதம்பரம், வாழைவனநாதர், சுவேத கிரி, லாலிகெடி
அமைவிடம்
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேசுவரர், வாழைவனநாதர், சுவேத கிரி
தாயார்:விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி
தல விருட்சம்:கல்வாழை
ஆகமம்:காமீகம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், சுந்தரர், அப்பர்

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேசுவரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் உள்ளது. 61வது சிவத்தலமாகிய இக்கோவிலில் கல்வாழை (பைஞ்ஞீலி) தலவிருட்சமாக உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். [1]

பெயர்ச்சிறப்பு

[தொகு]
 • ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இக்கோவிலில் தலமரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது.
 • நீலகண்டனார் சிதம்பரத்தில் தாம் கொண்டிருந்த ஆடலரசன் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இத்தலத்திலேயே காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் எனலானது.

தல வரலாறு

[தொகு]

ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவ்ர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றென்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார்.

தென்கைலாயம்

[தொகு]

முன்னொருகாலத்தில் வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்ற அகந்தைக் கூடியது. அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கொண்டார். அதைத்தளர்த்த சண்ட மாருதத்தை (கடுமையான சூராவளிக் காற்று) உண்டு பண்ணினார். சண்ட மாருதம் கடுமையாக வீசியதால் கைலாயத்திலிருந்து எட்டு கொடுமுடிகள் (சிகரங்கள்) பெயர்ந்து விழுந்தன.அவை

என்பனவாகும். இவற்றுள் சுவேதகிரி என்பதே இத்தலமான திருப்பைஞ்ஞீலி. ஆகவே இது தென்கைலாயம் எனவும் வழங்கப்படுகிறது.

தலச் சிறப்பு

[தொகு]
 • திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்தத் தலம். குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.
 • எமனுக்கான சிறப்புச் சந்நிதி உள்ளமையால், இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.
 • நித்தமும் இரவில் நடராசப் பெருமானை வணங்கும் வசிட்ட மாமுனி, ஒரு முறை இங்கு வந்து இரவில் இங்கு தங்க நேர்ந்தமையால், இறைவனார் அவருக்கு தமது ஆடலரசன் தோற்றத்தினை இவ்விடத்திலேயே காட்டியருளினார்.
 • அப்பர் பெருமான் இத்தலத்துக்கு வர விரும்பி நடக்கையில் வழி தவறி நிற்கையில், சிவனே அந்தணர் வடிவில் அவரது பசியாற்ற கட்டுச்சோறு அளித்து இத்தலத்திற்கு வழிகாட்டுவித்தார்.[2] "சோற்றுடைய ஈஸ்வரன்" என்னும் பெயர் கொண்டு அவருக்கு இத்தலத்தில் ஒரு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.
 • திரு ஆனைக்காவினைப் போன்று ஐந்து பிரகாரங்கள் கொண்ட இத்தலத்தில், ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை விசாலாட்சி, எமன், கல்யாணி, அக்னி, தேவ, அப்பர் மற்றும் மணியங்கருணை என்பனவாகும்.
 • இத்தலம், சம்பந்தர், சுந்தரர் மற்றும் அப்பர் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமாகும்.
 • இது காவேரி நதியின் வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 61ஆம் தலமாக விளங்குகிறது.
 • ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில், சுயம்பு லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படர்வதைக் காண்பது மெய்யனுபவமாக விளங்கும்.

இறைவன் பொதிசோறு கொடுத்த நிகழ்வு

[தொகு]

திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களையடுத்து, திருநாவுக்கரசர் இத்தலம் நோக்கிவந்தபோது தண்ணீரின் தாகமும், பசியும் அவரை வாட்டின. அவருடைய களைப்பைப் போக்க எண்ணிய சிவபெருமான் அவர் வரும் வழியில் ஒரு குளத்தையும், தங்கி இளைப்பாறுவதற்காக ஒரு மண்டபத்தையும் உருவாக்கி கட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் வடிவில் காத்துக்கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி இறைவன் கூற, அப்பரும் அவ்வாறே செய்தார். அந்தணரிடம் அவர் எங்கு செல்கின்றார் என்று அப்பர் கேட்க, தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூறவே இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி கோயிலின் அருகில் வந்தவுடன் அந்தணர் மறைந்தார். அப்போதுதான் இறைவனே அந்தணராக வந்து, உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார். [3][2] ஞானசம்பந்தருக்கு இறைவன் பொதிசோற்றினை திருக்குருகாவூர் கோயிலில் கொடுத்தார்.

வரலாற்றுச் சிறப்பு

[தொகு]
 • இது பல்லவர் காலக் கோயிற்கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது.
 • பைஞ்ஞீலி மகாதேவர் மற்றும் பைஞ்ஞீலி உடையார் ஆகிய பெயர்களில் இது சோழர் காலக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

திருத்தலப் பாடல்கள்

[தொகு]

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

தூயவன் தூயவெண் நீறு மேனிமேல் பாயவன்
பாயபைஞ் ஞீலி கோயிலா மேயவன் வேய்புரை
தோளி பாகமா ஏயவன் எனைச் செயுந் தன்மை என்கொலோ.

காரு லாவிய நஞ்சை யுண்டிருள்
கண்டர் வெண்டலை யோடுகொண்
டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி
ஓரி டத்திலே கொள்ளும் நீர்
பாரெ லாம்பணிந் தும்மை யேபர
விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
ஆர மாவது நாக மோசொலும்
ஆர ணீய விடங்கரே.

கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி
வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள்
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று
அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார் Block quote

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. திருமணத்தடைகளை நீக்கும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில்
 2. 2.0 2.1 "ஆலயம் ஆயிரம்: அப்பருக்குஅன்னம் பலித்த சோற்றுடை ஈஸ்வரர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-10-17.
 3. "ஞீலிவனேஸ்வரர் கோவில், திருப்பைஞ்ஞீலி". Archived from the original on 2019-04-23. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.

வெளி இணைப்புகள்

[தொகு]