உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்குரக்குக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருக்குரக்குக்கா, திருக்குரக்காவல்
பெயர்:திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில்[2]
அமைவிடம்
ஊர்:வடவாஞ்சார்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:குந்தளேசுவரர்,குண்டலகர்னேஸ்வரர்
தாயார்:குந்தளநாயகி,குந்தளாம்பிகை
தீர்த்தம்:பழவாறு (கணபதி நதி)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:ஆலய ராஜகோபுரம் அற்றது
மூலவர் விமானம்

திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல் குந்தளேஸ்வரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களுள் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 28வது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்றது. இச்சிவாலயம் இந்தியாவில் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.

தொன்மம்

[தொகு]

இத்தலம் குறித்து நிவும் ஒரு தொன்படி இராமாயண காலத்தில், இராவணனை வென்ற பின்னர் இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூஜை செய்யத் தீர்மானித்தபோது, இலிங்கம் கொண்டு வர ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் திரும்பி வருவதற்குள், சீதாதேவி கடல் மணலால் ஒரு லிங்கத்தை உருவாக்கிவிட, இராமன் அந்த மணல் லிங்கத்திற்கே பூஜை செய்துவிட்டார். இலிங்கத்துடன் திரும்பிய ஆஞ்சநேயர், இராமரின் செயலைக் கண்டு சினந்து, மணல் லிங்கத்தைத் தன் வாலால் பெயர்க்க முயன்றார். ஆனால், சிவநிந்தனை செய்ததால் மனம் வருந்திய அவர், மன அமைதிக்காக இத்தலத்தில் சிவபூஜை செய்து வழிபட்டார். அப்போது, மலர்களுடன் தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் சிவலிங்கத்திற்குப் படைத்து வணங்கினார். இதனால், இங்குள்ள சிவபெருமான் குண்டலகேஸ்வரர் என்று பெயர் பெற்றார் எனப்படுகிறது.

சிவபக்த ஆஞ்சநேயர்

[தொகு]

இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தியாக சிவபக்த ஆஞ்சநேயர் திகழ்கிறார். மூலவர் குந்தளேசுவரர் சன்னதிக்கு எதிரில், கூப்பிய கரங்களுடனும், ருத்ராட்ச மாலையணிந்தும் அடக்கத்தின் உருவமாக ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார். திருமாலின் அம்சமாக இருந்தபோதும், சிவனே ஆஞ்சநேயராக வந்து தன்னை வழிபடும் கோலம் இது என்றும் கூறுவர்.

திருக்கோயில் அமைப்பும் சிறப்பம்சங்களும்

[தொகு]

இங்குள்ள சிவலிங்கம் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறது, இது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். அம்பாள் குந்தளநாயகி தனிச் சன்னதியில் தெற்கு நோக்கி அருள்கிறார். மேலும், தட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாகத் திரும்பி இருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இக்கோயிலின் தல விருட்சம் வில்வம் ஆகும். மிகவும் ஆச்சரியமான ஒரு நிகழ்வாக, சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது இன்றும் கலியுக அதிசயமாகக் கருதப்பட்டு, ஊர் மக்களால் பார்க்கப்படுவதாக நம்பப்படுகிறது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குந்தளநாயகி அம்பாளுக்கு வளையல் அணிவித்து வேண்டிக்கொண்டால் நற்பலன் கிடைக்கும் என்றும், கால்நடைகள் வைத்திருப்போர் செல்லியம்மனை (கோஷ்டத்தில் உள்ள கிராம தேவதை) வேண்டிக்கொண்டால் அவை நோயின்றி இருக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோயில் பொதுவாக காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இறைவன் இறைவி

[தொகு]

இக்கோயிலிலுள்ள இறைவன் குந்தளேஸ்வரர், இறைவி குந்தலாம்பிகை.[3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 131
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 131
  3. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014

வெளி இணைப்புகள்

[தொகு]