புரிசை அகத்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரிசை அகத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1] இக்கோயிலின் தலமரமாக வில்வம் உள்ளது.[2]

வைப்புத் தலம்[தொகு]

சுந்தரர் தேவாரத்தில் இத்தலம் வைப்புத் தலமாக இடப்பட்டுள்ளது. அப்பாடல் பின்வருமாறு

தென்னூர் கைம்மைத் திருச்சுழி

யல்திருக் கானப்பேர்

பன்னூர் புக்குறை யும்பர

மர்க்கிடம் பாய்நலம்

என்னூர் எங்கள் பிரான்உறை

யுந்திருத் தேவனூர்

பொன்னூர் நாட்டுப் பொன்னூர்

புரிசைநாட்டுப் புரிசையே[3]

அமைப்பு[தொகு]

இந்தக் கோயில் மூன்று நிலையும், ஐந்து கலசங்களும் கொண்ட இராசகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் அகத்தீசுவரர் மேற்கு நோக்கி சுயம்புலிங்கமாக உள்ளார். கருவறையில் சிவனை அகத்தியர் வழிபடும் சிற்பம் உள்ளது. கருவறையின் கோட்ட தெய்வங்களாக துர்கை, பிரம்மன், மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். இக்கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன. அகத்தியர் தீர்த்தம் என்னும் திருக்குளம் உள்ளது.[2]

கருவறையின் முன் உள்ள மகாமண்டபச் சுவரில் நாயன்மார்களின் வரலாறு புடைப்புச் சிற்பங்களாக செதுக்கபட்டுள்ளன. அதில் மனுநீதிச் சோழன் தேர்க்காலில் இளவரசன், ஆனாய நாயனார் குழலூதுதல், கண்ணப்ப நாயனார் பன்றி வேட்டையாடுதல்- சிவலிங்கத்தில் காலூன்றி தன் கண்ணை எடுத்தல், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் துணியைப் பெறுதல்- பாறையில் தலையை முட்டிக்கொள்ளுதல், சுந்தரமூர்த்தி நாயனார் யானை மீதும், சேரமான் பெருமான் நாயனார் குதிரை மீது செல்லுதல், சண்டேசுவர நாயனாருக்கு அருளுதல், தில்லை வாழ் அந்தணர்கள், மாணிக்கவாசகர்-இறைவன், குதிரைகள், பின்னால் நரிகள் போன்ற புடைப்புச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. [2]

அம்மை அகிலாண்டேசுவரிக்கு கிழக்கு நோக்கி தனி சந்நிதி உள்ளது. அம்மை நான்கு கைகளுடன் உள்ளார். முன்னிரு கைகள் அபய வரத முத்திரைகளுடனும், பின்னிரு கைகளில் அங்குசம், பாசம் ஆகியவற்றை ஏந்தியவாறும் உள்ளார்.[2]

தெற்கில் நடராச சபையை உள்ளது. அதை அடுத்து பைரவர், சூரியன், நவக்கிரகங்கள், நால்வர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.[1]

அமைவிடம்[தொகு]

புரிசை என்னும் பெயரில் வந்தவாசிக்கும் செய்யாற்றுக்கும் இடையே ஓர் ஊரும், தக்கோலம் அருகில் ஓர் ஊரும் உள்ளன. இவ்வூர் வந்தவாசிக்கும் செய்யாற்றுக்கும் இடையே உள்ளதாகும். அங்கு இக்கோயில் உள்ளது. [1] இத்தலம் செய்யாறில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

திருவிழாக்கள்[தொகு]

இங்கு பங்குனி மாதத்தில் தேர்த் திருவிழா நடக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "திருமண வரம் அருளும் புரிசை அகத்தீசுவரர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-25.
  3. shaivam.org https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/sundarar-thevaram-thirunattuththogai-vizhakkaalanaik/#gsc.tab=0. பார்க்கப்பட்ட நாள் 2023-02-25. {{cite web}}: Missing or empty |title= (help)