உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லை வாழ் அந்தணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்லைச் சிற்றம்பலவாணர்க்குப் பூசனை புரிதற்குரிய புண்ணியர்கள் தில்லைவாழந்தணர்கள். திருவடிமறவாச் சீருடையாளராகிய இவர்கள் பெருகிய அன்போடு பூசனைத்திரவியங்கள் ஏந்திச் சென்று, மங்கலகரமான பூசைக் கருமங்களையெல்லாம் முறைப்படி புரிவர். வேத மந்திரங்களால் பெருமானைப் போற்றித் துதிப்பர். மூவாயிரவர் என்னும் தொகையினரான இவர்கள் தில்லைப் பதியிலே வாழ்ந்து தத்தமக்குரிய அகம்படி தொழும்பினைக் குறைவறச் செய்வர்.[1]

இச்செம்மை வேதியர் மறுவற்ற குடும்பத்திற் பிறந்தவர்கள்; மாசிலா ஒழுக்கத்தினையுடையவர்கள்; செம்மனப் புனிதர்கள். தணிந்த சிந்தையர். தமக்கு அணிகலன் திருநீறும் உருத்திராக்கமுமாகிய சிவசாதனங்கள் எனக் கொள்பவர். தாம் பெறுவதற்குரிய பேறொன்றுமில்லை என்றெண்ணும் பெருமையினர். இதனால் தமக்குத் தாமே ஒப்பாகும் தலைமையினர்.

நான்கு வேதமும் ஆறங்கமும் கற்றவர்; முத்தீ வளர்த்து வேள்வி செய்பவர்; ஓதுதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழில் ஆட்சியால் கலியின் தீமையை பொருளாக்கொண்டு தத்துவ நெறியில் நிற்பவர். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகை நெறியையும் நன்கு தெரிந்து மேம்பட்டவர்கள். தானமும் தவமும் வல்லவர்கள், ஊனம் சிறிதுமில்லாதவர்கள். உலகெல்லாம் புகழும் வண்ணம் மானமும் பொறையும் [2] தாங்கி மனையறம் புரிவர்.

'இவ் இருடிகளுள் நாம் ஒருவர்' என்று இறைவனால் அருளிச் செய்யப் பெற்ற பெருமையை உடையவர்கள் இவர்கள். இவர் தம் பெருமையை எம்மால் எடுத்துரைக்க இயலாது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுவதற்கு "தில்லைவாழந்தணதம் அடியார்க்கும் அடியேன்" என்று சிவபெருமானே முதலாவதாகக் கூறிய திருக்கூட்டத்தினர் அன்றோ இவர்கள்!

பெருமைக்கு எல்லையாய தில்லை வாழந்தணர்கள் என்றும் தில்லைச் சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி வாழ்வர்.

நுண்பொருள்

[தொகு]
  1. தில்லைப் பொதுநடம் போற்றுதல் சிவபெருமான் ஞானப் பெருவெளியில் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தை மண்ணுலகோரும் கண்டு உய்யும் வண்ணமாக உலகத்தின் இருதயத்தானமான சிதம்பரத்தில் நின்று ஆடல் செய்கின்றார். இச் சிதம்பர நடனத்தைத் தரிசிக்க முத்தி சித்திக்கும். அதலால் சிதம்பர தரிசனம் சிவநெறிச் செல்வோருக்குப் பெரும் பேறாகும். இப்பெரும் பேற்றினை உணர்த்தும் பொருட்டே சேக்கிழார் பெருமான் ஆதியாய் நடுவுமாகி, கற்பனைக் கடந்தசோதி எனும் திருப்புராணங்களுடன் தில்லைவாழந்தணர் புராணத்தையும் ஆரம்பித்தனர்.
  2. அகப்படித்தொண்டுசெய்யும் முதற்பொருளாவார் சிதம்பர நடராசருக்கு அகம்படித் தொண்டு (பூசனை) செய்யும் திருவுடை அந்தணர்கள் தில்லைவாழந்தணர்கள். அவர்கள் பூசையன்றிப் பிறதொழில் புரியாதவர். தம்மில் யாரேனும் பிறதொழில் செய்யப் புகுவரேல் அவரைப் பூசனை புரிவதற்கு அனுமதியளியாத வழமையைப் பேணுபவர்கள். இவ்வண்ணம் பூசனை புரிந்து உலகோம்புதற் பொருட்டு தில்லையின் பதியில் வாழும் தனிச்சிறப்பே அவர்தம் முதன்மையாகும்.
  3. கணநாதர் திருஞானசம்ந்தப் பிள்ளையார் தில்லை வாழந்தணர்களைக் கணநாதர்களாகக் கண்டனர். தாம் கண்ட காட்சியை திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு காட்டியும் வைத்தனர்.
  4. சிவனையும் தம்முள் ஒருவராகக் கொண்டவர் சிவபெருமான் தில்லை மூவாயிரருள் தாமும் ஒருவர் என அருளியவர்.
  5. திருத்தொண்டர் கூட்டத்து முதற்பொருளாயுள்ளவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுவதற்கு சிவபெருமான் தில்லைவாழ் அந்தணர்களையே முதற்பொருளாகக் கொண்டு அடியெடுத்துத் கொடுத்தமை இவர் தம் தலையாய தன்மையைத் தெளிவுறக் காட்டுவதாகும். சிற்றம்பலவரைப் பூசிக்கும் தில்லைவாழந்தணரின் முதன்மையையும் இவர்களையே முதற்பொருளாகக் கொண்டு திருத்தொண்டர் சீர் பரவப்படுவதும் ஆதிய இவையெல்லாம் அரம் பூசை நேரத்தையே உணர்த்தும் குறிக்கோளுடையன.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தில் தில்லைவாழ் அந்தணர் சருக்கம்
  2. பொறை: மற்றவர்கள் செய்யும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுதல், பொறுத்தல் என்னும் சொல்லில் இருந்து வருவது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லை_வாழ்_அந்தணர்&oldid=3347690" இலிருந்து மீள்விக்கப்பட்டது