திருவத்திபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செய்யாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவத்திபுரம் (அ) செய்யாறு (அ) திருவோத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் ஏ. ஞானசேகரன் இ. ஆ. ப. [3]
நகராட்சித் தலைவர் R.PAVAI RAVICHANDRAN
சட்டமன்றத் தொகுதி செய்யாறு
சட்டமன்ற உறுப்பினர்

முக்கூர் சுப்பிரமணியன் (அதிமுக)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

திருவத்திபுரம் (Thiruvathipuram) அல்லது செய்யாறு (Cheyyaru) அல்லது திருவோத்தூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது திருவண்ணாமலை மாவட்டத்தின் வடமேற்கு மூலையில் செய்யாறு நதிக்கரையில் அமைந்துள்ள ஓர் அழகிய நகரமாகும். இது திருவண்ணாமலை மாவட்டத்தின் மூன்றாம் பெரிய நகரமாகும். இங்கு துணை மாவட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்கள் உள்ளன. இந்நகரம் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கும், வரலாற்று சிறப்புமிக்க காஞ்சிபுரத்திற்கும் அருகாமையில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 39201 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். திருவத்திபுரம் மக்களிள் கல்வியறிவு பெற்றோர் 62.55% ஆகும்.

தொழில்வளம்:[தொகு]

2008 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொன்றுதொட்டு செய்யாறு மக்களுக்கு வேளாண்மை சார்ந்த தொழிலும் நெசவுத் தொழிலும் மட்டுமே முக்கிய தொழில்களாக இருந்தன. செழிப்பான கிராமங்களால் சூழப்பட்டதால், செய்யாறு முக்கிய வேளாண் நகரமாக விளங்குகிறது. நகருக்கு வெளியே செய்யாறு-வந்தவாசி சாலையில் 5கிமீ தொலைவில் தமிழ்நாட்டின் முக்கிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்றான செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையும், ஆவின் பால் பதனிடு நிலையமும் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமங்களிருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் பால் குளிரூட்டப்பட்டு சென்னைக்கு செல்கிறது. இவை தவிர தனியாருக்கு சொந்தமான பெரிய பால்கோவா தயாரிப்பகமும் உள்ளது. இங்கு நாள்தோறும் தயாராகும் பால்கோவா சென்னை, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அனுப்பபடுகின்றது. அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையமும் உழவர்சந்தையும் சுற்றுப்புற கிராமங்களிருந்து வரும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கின்றன. நெசவு இங்கு பாரம்பரிய தொழிலாக உள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறிகளின் மூலம் பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் நெய்யப்படுகின்றன.

செய்யாறு ஐந்து கிலோ மிட்டர் அருகில் உள்ள ஜடேரி என்னும் கிராமத்தில் இருந்து வைணவர் நெற்றிகளில் இடும் திருமண் என்னும் நாம கட்டி இந்த கிராம மண்ணில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் நாம கட்டி திருப்பதி, ஸ்ரீரங்கம் என எல்லா வைணவ தளத்துக்கும் கடல் கடந்தும் விற்பனைக்கு அனுப்ப படுகிறது

2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் செய்யாறு மிக பெரிய தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செய்யாறுக்கு அருகில், செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் மாங்கால் கூட்டு சாலை அருகே செய்யாறு தொழிற்பேட்டை (Cheyyaru SIPCOT) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமும் (SEZ) அமைக்கப்பெற்று வருகின்றன. சென்னைக்கு அருகில் உள்ளதாலும் திருபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டைகளின் இடப்பற்றாக் குறையை நீக்க மாற்று இடம் தேவைப்படுவதாலும் செய்யாறு தேர்ந்தெடுக்கப்படுள்ளது. ஆரம்பிக்கப்பெற்று இரு ஆண்டுகளில் தைவான் நாட்டின் Nike & Lotus காலணி தயாரிப்பகம், அசோக் லே-லாண்டின் அலுமினிய வார்ப்பகம், Llyods ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. தானியங்கி உதிரிபாகங்கள், கார் தொழிற்சாலைகள், எலெக்ட்ரானிக் தொழிற்சாலைகளும் அமைவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலய தல வரலாறு[தொகு]

ஆற்றங்கரை பலத்தின் மேலிருந்து பார்க்கும்போது வேதபுரீஸ்வரர் ஆலயம்


அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் ஆலயம் தொண்டை மண்டலத்தின் 32 பாடல்பெற்ற தலங்களுள் எட்டாவது தலமாகும் . இங்கு சிவன் வேதங்களை புரிபவனாக மேற்கு நோக்கி அமைந்துள்ளார்.

திருவோத்தூர் பெயர் காரணம்: தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி. இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். ஓத்து என்றால் வேதம். மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான். நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர் என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர் என்று வழங்கப்படுகிறது. சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் "செய்யாறு' என்றும் அழைக்கப்படுகிறது.தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம். ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும். ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம், வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பம்சம் இது. அதாவது கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், நர்த்தன கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க முடியும் என்பது இத்தலத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று.
சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதப்பொருளை விளக்கி அருளிய காரணத்தால் இத்தலம் திருவோத்தூர் எனப்பட்டது. தற்போது "திருவத்திபுரம்' என அழைக்கப்படுகிறது. இத்தலத்தை சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப்பாடலில் பாடியுள்ளார்கள். இங்குள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார். விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். இங்கு சிவன் வீர நடனம் புரிந்துள்ளார்.
இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

தலபெருமை: சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலத்தில் 9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும். சுவாமி மீது சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம். ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் சுவாமி மீது படும். பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பதால் பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேர தரிசிக்க முடியும். 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும். திருஞானசம்பந்தரால் 11 தேவாரப்பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலம். அருணகிர நாதரால் பாடல் பெற்ற தலம். அம்பாள் கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார்.

பனை மரம் : இத்தலம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோயிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை பனைமரங்களை வளர்த்து சிவனை வணங்கி வந்தார். அப்பனை மரங்கள் அனைத்தும் கனி தராத ஆண் பனைகளாகின. இதைக்கண்ட சமணர் சிலர் சிவனடியார்களிடம், எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ? என அச்சிவனடியாரை கேலி செய்தனர். இதனால் வருத்தமடைந்தர் சிவனடியார், இதனைச் செவியுற்ற திருஞானசம்பந்தர் சமணர்களோடு சொற்போரில் ஈடுபட்டார். இருவரும் தத்தம் இறைவனை வேண்டி தமிழ் செய்யுள் ஏற்றி செய்யாற்றில் விட்டனர். திருஞானசம்பந்தரின் செய்யுள் எதிர் நீந்தி செய்யாறைவென்றான் என்னும் ஊரில் கரை ஒதுங்கியது. சமணர்களின் செய்யுள் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அனகப்பதூர் எனுமிடத்தில் ஒதுங்கியது. திருஞானசம்பந்தர் சிவனை வேண்டி பத்து பதிகங்களைப் பாடி ஆண் பனைகளை பெண்பனையாக கனி காய்க்க. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர். தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர். அப்போது சம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக கனி காய்க்க. இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிவபதம் பெற்றன என தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இன்றும் இத்தல விருட்சமான பனை மரங்கள் கார்த்திகை மாதத்தில் ஆண் பனைகளாக பனை பூக்களையும், சித்திரை மாதத்தில் பெண் பனைகளாக பனை கனிகளையும் ஒரே மரத்தில் விளைவிக்கின்றன. இது வேறு எங்கும் இல்லாத தாவரவியல் விந்தை ஆகும். சிவனை நோக்காது வாயிலை நோக்கி அமர்ந்துள்ள நந்தி இக்கோவிலின் இன்னொரு சிறப்பாகும்.ஈசன் தேவர்களுக்கு வேதம் ஓதிக்கொண்டிருந்தாராம்.அப்போது தக்கவர்களைத் (அதாவது பாடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது வேறு யாராவது வந்து இடைஞ்சல் செய்துவிடக்கூடாது என்பதுபோல்) தவிர வேறு யாரையும் உள்ளே நுழைய விடாது பார்த்துக் கொள் நந்தியை பணித்தார் என்று புராணம் சொல்லுகிறது. இது இவ்வாறிருக்க இன்னொரு வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.அதாவது தொண்டைமான் எதிரிகளுடன் போர் புரியச் செல்ல தயக்கம் காட்டி இறைவனை வேண்ட,பயப்படாதே உனக்கு துணையாக நம் நந்தியை அனுப்புகிறேன் என்று ஈசன் கூறியதால் நந்தி வாயில் நோக்கி செல்வது போல் அமைந்துள்ளது என்று செவி வழி கதையும் சொல்லப்படுகிறது.

ஒரே இடத்தில ஐம்பூத(பஞ்ச)தலங்கள், ஆறடி உயரத்தில் தென்முகக் கடவுள் ஆகியவையும் இத்தலத்தின் சிறப்புகளாகும். தொண்டை மன்னர்கள், பல்லவர்கள், விஜய நகர மன்னர்கள் மற்றும் சோழர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்தனர். கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள கன்னட, தெலுங்கு மொழி கல்வெட்டுகள் விஜயநகர மன்னர்களின் பங்களிப்பையும், 11 ஆம் மற்றும் 13 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் குறிப்புகளும் இக்கோவிலின் வரலாற்றை பறைசாற்றுகின்றன. இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிசேகம் செய்தால் திருமணத்தடை நீங்கும். இத்தலத்தில் தலமரமாக உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் குழந்தைபாக்கியம் கண்டிப்பாக கிடைக்கிறது. வெளிநாட்டிலிருக்கும் பக்தர்கள் எல்லாம் கூட இந்த மரத்தின் பனம் பழத்தை வேண்டிக் கேட்டுப் பெறுகின்றதால் பல வெளிநாடுகளுக்கும்கூட அனுப்பப்பட்டு வருகிறது.

நாகநாதர்: திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர்.சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 11 தலையுள்ள இதை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை . நாகலிங்கம் அபிசேகம் : கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது. சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ராகு காலத்தில் பூஜை செய்து வழிபட்டால் நாக தோசம் நிவர்த்தி ஆகும். ஆமை தோசமும் நிவர்த்தி ஆகிறது.

திருவிழா: தை மாதம் - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் நடைபெறும் - அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றி காமதேனு கற்பக விருட்சம் - வாகனங்கள் வீதி உலா - ஆறாவது நாள் திருகல்யாணம் நடக்கும் - ஏழாவது நாள் ரத சப்தமி அன்று திருதேர் -கடைசி நாளில் ராவணேசுவரன் கயிலாய காட்சி - மிகவும் அதிக அளவில் பக்தர்கள் திரள்வது வழக்கம். ஆடி மாதம் - லட்ச தீபம் - ஆடி விசாகம் - ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம்- சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம், மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா பிரதோசம் சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி (வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிசேகம்), நர்த்தன கணபதிக்கு சதுர்த்தி அபிசேகம் உண்டு ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் தலமரமான பனைமரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்கு சகஸ்ரநாமம் -விளக்கு பூஜை - ஆடி தை மாதங்களுக்கு 108 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.வருடத்தின் விசேச நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினத்தின் போது சுவாமிக்கு விசேச பூஜைகள் அபிசேகங்கள் செய்யப்படும்.

திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருக்கோயில் திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு, திருவோத்தூர்-604 407 திருவத்திபுரம், திருவண்ணாமலை மாவட்டம்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவத்திபுரம்&oldid=1793501" இருந்து மீள்விக்கப்பட்டது