திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவியலூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பண்டாரவாடை, திருவியலூர்
அமைவிடம்
ஊர்:திருவிசநல்லூர்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர்
தாயார்:சவுந்தரநாயகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:எட்டு தீர்த்தங்கள்
ஆகமம்:காரண ஆகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞான சம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

யோகநந்தீசுவரர் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் யோகநந்தீஸ்வரர், தாயார் சவுந்தரநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 43வது சிவத்தலமாகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]. மகான் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள், உய்யவந்த தேவநாயனார் ஆகியோர் அவதரித்த தலம்.

தலத்தைப் பாடியோர்[தொகு]

திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பின்வருமாறு பாடியுள்ளார்.

அரவும்மலை புனலும்மிள
மதியும்நகு தலையும்
விரவுஞ்சடை யடிகட்கிடம்
விரிநீர்விய லூரே.

அமைவிடம்[தொகு]

கும்பகோணத்திற்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் இவ்வூர் உள்ளது. திருவிடைமருதூர்-வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். திருவியலூர், திருவிசலூர், திருவிசநல்லூர் என்ற பல பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பெறுகிறது. திருவிசலூர் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்கள் காணப்படுவதால் இவ்வூரை பண்டாரவாடை திருவிசநல்லூர் என்றும் அழைக்கின்றனர்.

தல சிறப்பு[தொகு]

இத்தலம் நந்தியுடன் தொடர்புடைய ரிசப ராசி தலமாக விளங்குகிறது. பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடி மரம் முதலில் இருக்கும். பின்னர் பலிபீடம், நந்தி என்று இருக்கும். ஆனால் இத்தலத்தில் நந்தி முதலில் இருக்கும். ஒரு கால் எடுத்து எழுந்த பாவனையிலும், திரும்பி வாசலைப் பார்த்த நிலையிலும் இருக்கும். இறைவன் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் அவருடைய லிங்கத் திருமேனியில் எழு சடைகள் இருக்கின்றன. இவரை வழிபட குரு தோஷம் நீங்கும். குருவின் அருள் கிடைக்கும்.[1]

அகத்தியர், ஜடாயு ஆகியோர் வழிபட்ட தலம். பெண் பாவம் சம்பந்தப்பட்ட பழிகளை போக்கும் தலம். கேரள நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன், பல பெண்களுடன் கூட நட்பு கொண்டு பெரும் தவறிழைத்து வந்தான். ஏராளமான பெண்களை ஏமாற்றியும் வஞ்சித்தும் ஈன வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் பாவ வாழ்க்கையில் இருந்து மீள வழி தேடிய இந்த அரசனுக்கு, திருவிசநல்லூரின் பெருமைகள் பற்றி ஒரு மகான் கூறினார். அதன்படி இங்கு வந்த அரசன் காவிரியில் நீராடி, இந்தத் தலத்தில் உறையும் இறைவனை தரிசித்து பெண் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்று தல வரலாறு கூறுகிறது. தெரிந்தோ, தெரியாமலோ பெண்களின் பாவத்திற்கும் பழிக்கும் ஆளாகி இருப்பவர்கள் இந்த ஆலயம் வந்து வழிபட்டால் நலம் பெறலாம்.

இங்கு வாழ்ந்து வந்த சிவனடியார் ஒருவரின் உயிரைப் பறிக்க எமதர்மன் தன் எருமை வாகனத்தின் மீதேறி வந்தான். நந்திதேவர் எமனை எதிர்கொண்டு விரட்டி அடித்தார். அதன்பின், சிவனடியாரின் உயிரைப் பறிக்க வந்த தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு எமதர்மனே சிவயோகிநாதரையும், நந்திதேவரையும் வணங்கினான் என்பது புராணம். எனவே இந்த இறைவனை வணங்கினால் மரண பயம் விலகும்.

மகான் ஸ்ரீதர ஐயாவாள் அவதரித்து, பல அற்புதங்களை நிகழ்த்திய தலம் திருவிசநல்லூர். தன் இல்லத்து சிராத்த தினத்தன்று உணவளிப்பதற்காக அந்தணர்களை எதிர்பார்த்து ஸ்ரீதர ஐயாவாள் தன் வீட்டு வாசலில் காத்திருக்கிறார். அப்போது தாழ்த்தப்பட்டவர் ஒருவர் அவர் இல்லம் வந்து பசியால் துடிப்பதாக சொன்னார். உடனே அந்தணர்கள் உண்பதற்காக தயாராக வைத்திருந்த உணவை அந்த தாழ்த்தப்பட்டவருக்கு அளித்து மகிழ்ந்தார். இதனைக் கண்டு வெகுண்டனர் அந்த அக்கிரஹாரத்தில் வசித்த அந்தணர்கள். 'நீ தூய்மையானவன் என்பதை எங்களுக்கு நிரூபித்தால் தான் இங்கே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும். நீ தூய்மையானவன் என்பதை நிரூபிக்க விரும்பினால் உடனே, கங்கை நதியை இங்கே வரவழைத்து அதில் நீ நீராட வேண்டும். இதுதான் பரிகாரம்' என்று கட்டளை இட்டனர். 'ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்' என்பதே ஐயாவாளின் கொள்கை. பக்தியில் சிறந்த ஸ்ரீதர ஐயாவாள் இறைவனை உருகி வேண்ட, அவர் வீட்டுக் கிணற்றில் கங்கை கொப்பளித்து வந்தது. கிணற்றின் நீர்மட்டம் விறுவிறுவென ஏறி, வழிந்து, அந்தத் தெரு முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது தான் அந்த தெருவில் வாழ்ந்த அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர். மன்னிப்பும் கேட்டனர். இப்பொழுதும் கார்த்திகை அமாவசை தினத்தில் ஐயாவாள் வசித்த வீட்டின் கிணற்றில் கங்கை எழுந்தருளுகிறாள். ஏராளமான பக்தர்கள் அன்றைய தினம் அங்கு சென்று நீராடி புண்ணியம் பெறுகின்றனர்.

இறைவன், இறைவி[தொகு]

இத்தலத்து இறைவன் சிவயோகிநாதர், புராதனேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்து இறைவி சௌந்தரநாயகி, சாந்தநாயகி என அழைக்கப்படுகிறார்.

தேவஸ்தான கோயில்[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு  உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 திருவிசநல்லூர் ஸ்தல புராணம், திருமதி உமாஜோதிராமன், திருபுவனம், 2004
  2. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997