திருமழபாடி வைத்தியநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேவாரம் பாடல் பெற்ற
திருமழபாடி வைத்தியநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்: திருமழபாடி
மாவட்டம்: அரியலூர் மாவட்டம்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: வைத்தியநாதர்
தாயார்: சுந்தராம்பிகை
தல விருட்சம்: பனை மரம்
தீர்த்தம்: கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை
ஆகமம்: காமிகய ஆகமம்
சிறப்பு திருவிழாக்கள்: மகாசிவராத்திரி, கார்த்திகை, அன்னாபிஷேகம்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
திருமழபாடி பல்லக்கு, திருவையாறு சப்தஸ்தான விழா, ஏப்ரல் 2008

திருமழபாடி வைத்தியநாதர் கோயில் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றது. இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை. தல விருட்சமாக பனை மரம் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 54வது சிவத்தலமாகும்.

சிறப்பு[தொகு]

இத்தலம் புருஷாமிருகம் மகரிஷியால் பூஜிக்கப் பெற்றதும் திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபடப் பெற்ற பெருமையும் உடையதாகும். சந்திரனுக்குள்ள கய நோயை போக்கியதால் இறைவன் வைத்தியநாதர் எனப் பெறுகிறார்.புருஷாமிருக முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற சிவலிங்கத்தைப் பிரம்மன் பெயர்த்தெடுக்க முயன்றபோது வச்சிரத்தம்பமாக இறைவன் விளங்கிய காரணத்தால் "வச்சிரதம்பேசுவரர்' எனவும் அழைக்கப்படுகின்றார். இத்தல அம்பிகைக்கு சுந்தரராம்பிகை, அழகம்மை, பாலாம்பிகை என்ற திருநாமங்கள் உண்டு. இத்தல தீர்த்தம் இலக்குமியின் பெயரால் "இலக்குமி தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. சோமாஸ்கந்த வடிவம் ஒரே கற்சிலையில் அமையப் பெற்றுள்ள அற்புதமான தலம்.[1]

நந்திதேவர் விழா[தொகு]

சிலாதமுனிவரின் புதல்வராய்த் தோன்றியவர் திருநந்தி தேவராவார். நந்தீஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடந்த இத்தலத்தில் அதனைக் குறிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்திதேவர் விழா பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது. அன்றைய நாளில் திருவையாற்று இறைவன் ஐயாறப்பர் இங்கு எழுந்தருளுவதும் திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தான விழாவிற்கு இங்கிருந்து நந்திதேவர் புறப்பட்டுச் செல்லுவதும் மரபாக இருந்து வருகின்றது. இந்த திருமண வைபவத்தை நேரில் காணும் கல்யாணமாகாத வரன்களுக்கு உடனடியாக திருமண பிராப்தி வாய்க்கும் என்பதும் அக்காரணத்தில்தான் இப்பகுதியில் "நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்ற சொல் வழக்கும் நிலவி வருகிறது என்பதும் சிறப்புத் தகவலாகும்.[1]

கும்பாபிஷேகம்[தொகு]

இக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி 5.2.2015 காலை விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நடந்தன. 8.2.2015 காலை 5.00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி பரிவார பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை சுற்றி வந்து ராஜகோபுர கலசங்கள், வைத்தியநாத சுவாமி, அம்பாள் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4.00 மணிக்கு மஹா அபிஷேகம், 6.00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]