இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில்
இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் (திருஇன்னம்பர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 45வது சிவத்தலமாகும் ஆகும். இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன.
பொருளடக்கம்
தல வரலாறு[தொகு]
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சூரியன் மேலும் ஆற்றல் பெற வழிபட்ட தலம் (இனன் என்றால் சூரியன்). துர்வாசரின் சாபத்தால் மதம்கொண்ட காட்டு யானையாகி ஐராவதம் இத்தல இறைவனை வணங்கி சாபம் நீங்கப்பெற்றது. இங்கு உள்ள விமானம் கஜப்ருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. ஐராவத யானையால் உருவாக்கப்பட்ட ஐராவதத்தீர்த்தம் ஆலயத்தின் எதிரில் உள்ளது. அகத்தியமுனிவர் இங்கு வழிபட்டு இலக்கணங்களை கற்றார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் எழுதுகோல், குறிப்பேடு, புத்தகங்ளை இறைவனிடம் வைத்து எடுத்து செல்வதுண்டு. சுதன்மன் என்ற ஆதி சைவர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட மன்னனிடம் இக்கோவிலின் கணக்கு வழக்குகளை துள்ளியமாக ஒப்படைத்து வந்தார். நேர்மையான தன் மீது சந்தேகம் அடைந்த மன்னனுக்கு விளக்க இயலாமால் இவ்வாலய இறைவனிடம் முறையிட்டார். மறு நாள் இறைவனே சுதன்மன் வடிவில் மன்னனிடம் சென்று முறையாக கணக்குகளை தெளிவுப் படுத்தினார். சுதன்மன் கனவில் தோன்றிய இறைவன் மன்னனிடம் கணக்குகளை சொல்லிவிட்டதாக கூறினார். மகிழ்ந்த சுதன்மன் இறைவனை போற்றித் தொழுதார். விரித்த ஜடாமுடியும், இடபக்கம் கங்காதேவியும், வலப் பக்கம் நாகமும் கொண்ட நடராஜர் விக்கிரகம் சிறப்பு வாய்ந்தது. சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி செய்ய சிறப்பான இடம்.
அமைவிடம்[தொகு]
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம் என்பது தொன்நம்பிக்கை.
இறைவன், இறைவி[தொகு]
இக்கோயிலிலுள்ள இறைவன் எழுத்தறிநாதேஸ்வரர், அட்சரபுரீசுவரர், தாந்தோன்றிஸ்வரர், ஐராவதேஸ்வரர். இறைவி பூங்குழல் அம்மை, சுகந்த குந்தளாம்பிகை, நித்தியகல்யாணி [1]
அமைப்பு[தொகு]
கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக பூங்கொம்பு நாயகி, நித்தியகல்யாணி என்ற இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் நர்த்தன விநாயகர், சூரியன், பைரவர், கால பைரவர், சந்திரன் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறங்களிலும் டிண்டியும், முண்டியும் உள்ளனர். கருவறையைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் விநாயகர், பிட்சாண்டவர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, காட்சி கொடுத்த நாதர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் நால்வர், கன்னிமூல கணபதி, பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. சிவலிங்கம், கைலாயலிங்கம், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலிங்கம், மகாலட்சுமி, விஷ்ணுதுர்க்கை, நடராஜர் ஆகியோர் திருச்சுற்றில் உள்ளனர்.
குடமுழுக்கு[தொகு]
21.6.2000இல் குடமுழுக்கு ஆனதாக கல்வெட்டு காணப்படுகிறது.16/09/2013 ல் குடமுழுக்கு நடைபெற்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
இவற்றையும் பார்க்க[தொகு]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 45 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 45 |