திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
ஊர்: | திருவைகாவூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வில்வவனநாதர் |
தாயார்: | வளைக்கைநாயகி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்த வேடன் வில்வ மரத்திலிருந்து தூங்காமல் வில்வத்தைப் பறித்துப்போட இறைவன் காலையில் தோன்றி அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 48வது சிவத்தலமாகும்.
தல வரலாறு
[தொகு]கோயில்களின் மாநகரான கும்பகோணத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் உள்ள கிராமம் திருவைகாவூர். இது பாபநாசம் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நதியோரத்து கிராமம். பரந்து விரிந்து கிடக்கும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் புகழ் வாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம் இது. மிகப் பழமையான இக்கோயில் இப்போதும் பார்வைக்குப் பழசாகவே காட்சியளிக்கிறது. இக் கோயிலின் ஒரு வேளைப் பூசைக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.
வில்வ வனத்து சிவபெருமான்
[தொகு]இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை கூட்டம் கூடுகிறது. அதாவது மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகா சிவராத்திரியன்று பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து வழிபடுகிறார்கள். மூன்று நாள்கள் கோயிலில் மகாசிவராத்திரி விழா களை கட்டி விடுகிறது.
வில்வநாத சுவாமி என்பது இங்கு உறையும் இறைவனின் பெயர். இறைவி மங்களாம்பிகை. வில்வ வனங்களுக்கு நடுவே கோயில் கொண்டிருந்ததால் இறைவனுக்கு இப்பெயர். தல விருட்சமாக வில்வமரம்.
சோழர் காலப் பாணியில் இக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள் நுழைந்தால் மிகவும் விசாலமான பிரகாரச் சுற்று. உயர்ந்து நீண்ட மதில் சுவர். அதனையடுத்து மிகச் சிறிய ஆனால் கலையழகுடன் கூடிய கோபுரம்.
எமனை விரட்டிய நந்தி
[தொகு]முன்னாலிருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ நுழைவாயிலை நோக்கிக் கொண்டு படுத்திருக்கிறது.
அதற்கொரு கதையும் சொல்லப்படுகிறது. எமன் ஒரு முறை சிவபெருமானோடு மோதி, விரட்டிக் கொண்டு வர, அதனால் கோபமுற்ற நந்தி தேவர் எமனை விரட்டிக் கொண்டு ஓடி வந்து சீறிய வேகத்தில் எமன் பாய்ந்து கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் எமன் கோயிலுக்குள் நுழையாமல் பாதுகாப்பாக நந்தி இன்னமும் திரும்பிப் படுத்துக் கொண்டிருக்கிறது. எமன் விழுந்த குளம் எம குளம் என்ற பெயரில் இன்றளவும் வழங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பட்டீஸ்வரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி சந்நதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறாரே தவிர திரும்பியிருக்கவில்லை.[1]
வேடனுக்கும் உண்டு மோட்சம்
[தொகு]இக் கோயிலில் மகாசிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இரவு முழுதும் கண்விழித்து உபன்யாசங்கள் நிகழ்த்தப்படுகின்றன. சிவராத்திரியின் சிறப்பைக் குறிக்கும் விதமாகவும் மற்றொரு கதையும் வழக்கில் உண்டு.
ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வர அதனிடமிருந்து தப்பித்து ஓடி வந்தவன், உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். மதியம் வந்தது, மாலையும் வந்தது. இருள் சூழ, இரவும் வந்தது. புலியோ மரத்தடியில் படுத்துக் கொண்டு நகர்வதாயில்லை. வேடனுக்கோ பசி, தாகம், உறக்கம். தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது. நெடுநேரமாகியது. கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம்.
பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது எனும் கதை சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சிவராத்திரியன்றும் வேடனுக்கு மோட்சமளித்த புராணக் கதை சொல்லப்படுகிறது. கோயிலின் கோபுர வாசலில் சிறிய சிற்பமாகவும், பழைய பாணி ஓவியமாகவும் இந்தக் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது.
புதர் மண்டிய புராதனக் கோயில்
[தொகு]மற்ற சிவாலயங்களைப் போலவே, விநாயகர், முருகன், துர்க்கை, சன்னிதிகளும் உள்ளன. கோயில் திருச்சுவர்களில் கல்வெட்டுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன. முருகன், துர்க்கை சன்னதிகளை ஒட்டியும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாந்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே
.
அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே.
ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார்
வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.
இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவுந்
தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.
வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே.
நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.
நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.
கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.
அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ்
சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.
ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடந்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.
முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச்
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.
அமைவிடம்
[தொகு]அருகில் உள்ள தொடருந்து நிலையம் கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து எண் 30, 12, 57, 69 குறிப்பிட்ட பேருந்துகளில் செல்லலாம். 18 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்று அங்கிருந்தும் செல்லலாம் (8 கிமீ).
அல்லது கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை வழியே திருவலஞ்சுழி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து சுவாமிமலை வழியாகவும் செல்லலாம்.
படத்தொகுப்பு
[தொகு]-
பலிபீடம், நம்மை எதிர்கொள்ளும் நந்தி
-
சுதை சிற்பம்
-
விமானம்
-
முதல் வாயில் கோபுரம்
-
பிரகாரம்
-
பிரகாரத்தில் சுப்ரமணியர் சன்னதி
-
பிரகாரத்தில் சப்தமாதர் விநாயகர் சன்னதிகள்
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- திருவைகாவூர் வில்வநாதசாமி பரணிடப்பட்டது 2008-12-19 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்
[தொகு]- ↑ திருவைகாவூர் அருள்மிகு வில்வவனேச்வரர் கோயில் மான்மியம், ஏ.எஸ்.ரங்காச்சாரி, பிப்ரவரி 2001
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 48 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 48 |