லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லிங்கராஜர் கோயில், புவனேசுவரம், ஒடிசா

லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர், இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றான இக் கோயில் இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்டது. இது இந்துக்களின் புனித யாத்திரைத் தலமும் ஆகும். லிங்கராஜர் என்பது லிங்கங்களின் அரசர் என்ற பொருள் தருகிறது. லிங்கம் சிவனை வழிபடுவதற்கான ஒரு வடிவம் ஆகும். இது சிவனின், உருவம் உள்ளதும் இல்லாததுமான அருவுருவம் எனப்படுகின்ற திருமேனியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.

வரலாறு[தொகு]

இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இதன் தற்போதைய அமைப்பில், 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால், இக் கோவிலின் பகுதிகள் கி.பி ஆறாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சில சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. லிங்கராஜர் கோயில் கட்டப்பட்ட காலத்தில் விஷ்ணுவின் ஒரு வடிவமான ஜகந்நாதர் வழிபாடும் வளர்ச்சியடைந்து வந்தது. லிங்கராஜர் கோயிலில் விஷ்ணு சிவன் ஆகிய இரு கடவுளரதும் வழிபாடுகள் ஒன்றாக அமைந்திருப்பது இதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதிகிறார்கள்.

இக்கோயில், 11 ஆம் நூற்றாண்டில் சந்திர குல மன்னரான ஜஜதி கேசரி என்பவனால் கட்டப்பட்டது என மரபுவழியாக நம்பப்படுகின்றது. எனினும் இதற்கான நம்பத்தகுந்த வரலாற்றுச் சான்றுகள் இல்லை. 11 ஆம் நூற்றாண்டில் ஜஜதி கேசரி தனது தலை நகரத்தை ஜெய்ப்பூரில் இருந்து ஏகம்ரா சேத்திரம் என பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு மாற்றினான் கோவிலில் காணப்படும் குறிப்புகள் கி.பி.1114-1115இல் ஆண்ட அனந்தவர்மன் சோடகங்கா என்பவனுடைய காலத்தில் இந்தக் கோவில் கட்டுவதற்காக நிலம் மான்யமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோயிலின் மற்ற பகுதிகளான ஜக்மோகனா (வழிபாட்டுக் கூடம்), போக மண்டபம் (காணிக்கை மண்டபம்), நாட்டிய மண்டபம் ஆகியவை அதன் பிறகு கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.[1]

கோயி்ல் அமைப்பு[தொகு]

இதுதான் இந்த ஊரில் மிகப் பெரிய கோவில் இக் கோயில் விமானமானது 55 மீட்டர்கள் உயரத்துடன் மிகப் பெரியதாகத் திகழ்கிறது. 25000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோயிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150 க்கு மேற்பட்ட சிறிய கோயில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.[2]

கோயிலின் முதன்மை வாயில் கிழக்கிலும் மற்ற வாயில்கள் வடக்கு, தெற்கில் உள்ளன. கோயிலில் உள்ள 54 மீட்டர் உயரமுள்ள துயூலாவும் (பிரதான கோபுரம்) 29 மீட்டர் உயரமுள்ள ஜக்மோகனாவின் மேலுள்ள பிரமிட் கோபுரமும் (பீதா துயூலா) முழுவதும் சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளன. லிங்கராஜர் கோயிலானது கருவறை, வேள்வி மண்டபம், கோக மண்டபம், நாட்டிய சாலை ஆகிய நான்கு பகுதிகளாக பிரிக்கும் விதத்தில் உள்ளது. கருவறையின் ஒரு பக்கக் கதவில் சூலமும் மற்றதில் சக்கரமும் உள்ளன. கருவறையிலுள்ள பிரம்மாண்ட சிவலிங்கமானது சுயம்புலிங்கம் எனப்படுகிறது. இது ஹரிஹர ரூபம் என்கின்றனர். அதாவது திருமாலும் இந்த லிங்கத்தில் உறைந்திருப்பதாக நம்பிக்கை. அதனால் இங்கு அர்ச்சனைக்காக விற்கும் பூக்குடலையில் வில்வ தளங்களும் துளசி இலைகளும் சேர்ந்தே காணப்படுகின்றன. ஆலயம் கட்டி முடிக்கப்படும்போது கலிங்க நாட்டில் ஜகன்னாதர் பக்தியும் பரவத் தொடங்கியது. இந்த லிங்கத்திலேயே திருமாலும் எழுந்தருளி இருக்கிறார் என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். கோயில் வளாகத்தில் பார்வதி, கார்த்திகேயர், கணேசர் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனியாக கோவில்கள் உள்ளன. கோயிலின் வெளிப் பிரகாரத்தில் சாவித்ரி மாதாவுக்கும் ஜமராஜாவுக்கு (எமதர்மன்தான்) சன்னிதிகள் உள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு சன்னிதிக்கும் மிக உயரமான விமானங்கள் உள்ளன என்றாலும், தாரிணி தேவிக்கு மட்டும் தனி விமானம் கிடையாது. அவர் மரத்தின் கீழேதான் காட்சியளிக்கிறார்.

ஒட்டுமொத்த கோயிலையும் காண வசதியாக, கோயிலின் எல்லைப்புறச் சுவருக்கு அருகே ஓர் உயர்ந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதால், பிற சமயங்களைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட இந்த மேடையின் மீது நின்று கோயிலைக் கண்டு களிக்கிறனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிருந்தா கணேசன் (2014 சூன் 5). "ஏகாமர க்ஷேத்ரம் திருபுவனேஸ்வர்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 20 சூலை 2018.
  2. Lingaraj Temple
  3. ஜி.எஸ்.எஸ் (2018 சூலை 20). "வில்வமும் துளசியும் இணைந்த பூக்குடலை". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 20 சூலை 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2532&id1=50&id2=18&issue=20150316