மகாரி நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒடிசாவின் முக்கியமான நடன வடிவங்களில் ஒன்றான மகாரி நடனம் ஒடிசியின் நவீன செவ்வியல் நடன வடிவத்தின் தாயாகும்.

மகாரி அலது மஹாரி என்பது கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவிலிருந்து வந்த ஒரு வழிபாட்டு நடன வடிவமாகும், இது பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலில் மகாரிகள் என்று அழைக்கப்படும் தேவதாசி நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது . தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜகந்நாதர் கோயிலில் நடனம் நிறுத்தப்பட்டது, ஆனால் இப்போது பல இடங்களில் மேடையில் நிகழ்த்தப்படுகிறது. மகாரி நடனம் ஒடிஸி மற்றும் ஒடிசாவின் கோட்டிபுவா நடனக்கலை வடிவங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்த நடனக்கலையாகும்.[1] [2]

மகாரி நடனம் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையானது, உத்கலாநாட்டின் கீழைக்கங்க ஆட்சியாளர்களின் காலத்திலிருந்தே பூரியின் ஜகந்நாத் கோவிலில் மகரி நடனம் தினசரி வழிபாடுகளின் ஒரு பகுதியாக இருந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில், சோதகங்க தேவா மகரி நடனத்திற்கு ஒரு சட்டபூர்வமான அந்தஸ்தைக் கொடுத்தார். மகாரிகள் தங்குவதற்கு புதிய இடங்களை நிறுவி, தெய்வத்திற்காக புதிய விழாக்களை அறிமுகப்படுத்தினார். [3] ஒடிசியின் செவ்வியல் நடன வடிவம் மகாரி நடனத்தின் வேர்களைக் கொண்டுள்ளது, பதினைந்தாம் மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் மகாரி நடனம் வீழ்ச்சியடைந்தபோது மகரி பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கோட்டிபுவா நடனம்உருவானது. குர்தா மன்னரான இராமச்சந்திர ராஜா என்பவரால் மகாரி மற்றும் கோட்டிபுவா நடனங்கள் ஆதரிக்கப்பட்டன. இவரது காலத்தில் அதுவரை கோவில்களில் மட்டுமே வழிபாடுகளில் இணைக்கப்பட்டிருந்த தேவதாசிகள் அரசவைக்கு வரவழைக்கப்பட்டனர். சுதந்திர இந்தியாவில் தேவதாசி முறையை ஒழித்ததன் மூலம், மகாரி நடனம் நிலையான சரிவை நோக்கிச் சென்றது. அதற்கு புத்துயிர்தந்து மேடை நிகழ்ச்சிகளுக்காக அதனைத் தழுவிய ஒரு நடனவடிவமாக மாற்றிய பெருமை மறைந்த ஒடிசிக் கலைஞர் குரு பங்கஜ் சரண் தாஸ் என்பவரையேச் சாரும். பங்கஜ் தாஸின் சீடரான ஒடிசி நடனக் கலைஞர் ரூபாஸ்ரீ மொஹாபத்ராவும் மகாரிக்கு புத்துயிர் அளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளார். இந்த நடனம் ஒரு காலத்தில் ஜெகந்நாதர் கோயிலின் மகாரிகளுக்கு பிரத்தியேகமாகக் கற்பிக்கப்பட்டது. தொழில்முறை மகாரிகளில் கடைசியாக இருந்தவர் சஷிமானி தேவி ஆவார்.

மகாரிகள்[தொகு]

பூரியில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயிலின் நடனக் கலைஞர்கள் அல்லது தேவதாசிகளாக மகாரிகள் இருந்தனர். புராணத்தின் படி, பகவான் ஜெகந்நாதர் இரவு படுக்கையில் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒரு மகரி நடனத்தைக் காண்கிறார். மேலும் நடனக் கலைஞர்கள் இறைவனது திருப்திக்காக நடனத்தை நிகழ்த்தினர். மகரிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக நிலங்கள் வழங்கப்பட்டன, மேலும் அவர்கள் தெய்வத்தின் துணைவராக நடந்து கொண்டனர். அவரைப் பிரியப்படுத்த ஜெயதேவரின் கீத கோவிந்தம் பாடி நடனமாடினர். தெய்வமே கோவிந்தரின் வசனங்களைக் கொண்ட விசேஷமாக நெய்யப்பட்ட புடவைகளை அணிந்துகொண்டு, சிறப்பு நகைகளை அணிந்து பூக்களால் அலங்கரித்துக் கொள்வர். இது தெய்வத்திற்காக பிரத்தியேகமாக நிகழ்த்தப்பட்டது. மகரி என்ற சொல் மஹா-நாரி என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் 'பெரிய பெண்' என்பதாகும். மகாரிகள் கோவிலில் தினசரி வழிபாடுகளின் ஒரு பகுதியாகவும், எப்போதாவது கோவில் ஊர்வலங்களிலலும், கருவறைக்குள் தெய்வத்திற்காகவும் பிரத்தியேகமாக இந்த நடனத்தை நிகழ்த்தினர். முந்தைய காலங்களில் மகாரிகள் சமுதாயத்தில் மதிப்பிற்குரிய இடத்தைப் பெற்றிருந்தனர். மேலும் உயரடுக்குக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இதை ஒரு மரியாதைக்குரிய தொழிலாக எடுத்துக் கொண்டனர். மகாரகள் பிதாரா காவுனி, பஹாரா காவுனி, நாச்சுவானி, பதூவரி, ராஜ் அங்கிலா, கஹானா மஹாரி மற்றும் ருத்ரா கணிகா ஆகிய ஆறு குழுக்களைச் சேர்ந்தவர்கள்.[3] தேவதாசி முறையை ஒழித்ததிலிருந்து, ஜெகந்நாத் கோவிலில் மகாரி நடனம் நிறுத்தப்பட்டுள்ளது.

மகாரி விருது[தொகு]

மஹாரி விருது என்பது குரு பங்கஜ் சரண் ஒடிஸி ஆராய்ச்சி அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு விருது. 2012 ஆம் ஆண்டில், மகரி விருது ஒடிஸி நடனக் கலைஞர் மினாட்டி பிரதனுக்கு வழங்கப்பட்டது. [4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாரி_நடனம்&oldid=3252867" இருந்து மீள்விக்கப்பட்டது