உள்ளடக்கத்துக்குச் செல்

விமானம் (கோயில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரிசாவின், புவனேஸ்வரில் அமைந்துள்ள லிங்கராஜர் கோயிலின் விமானம்.

இந்துக் கோயில்கள் தொடர்பில் விமானம் எனப்படுவது, இறைவனின் உருவம் வைக்கப்படுகின்ற கருவறைக்கு மேல் அமைக்கப்படுகின்ற பட்டைக்கூம்பு வடிவக் கட்டிடக்கூறு ஆகும். இதனைச் சிகரம் என்னும் சொல்லாலும் குறிப்பிடுவது உண்டு. பல சமயங்களில் கருவறை அமைப்பையும், மேலுள்ள கூரைப் பகுதியையும் சேர்த்தே விமானம் அல்லது சிகரம் என்று குறிப்பிடுவது உண்டு. இது முறையாக அமைக்கப்படும் கோயில் கட்டிடமொன்றின் முக்கிய அமைப்பாக விளங்குகிறது. கோயில் ஒன்றின் மிக அடிப்படையான பகுதி என்பதால், இந்த விமான அமைப்பும் அதன் வடிவமும் மிகப் பழைய காலத்திலேயே தோற்றம் பெற்றுவிட்டது. வட இந்தியக் கோயில்களிலும், 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்னிந்தியக் கோயில்களிலும் காணப்படும் மிக உயரமான அமைப்பும் இதுவே. ஒரிசாவின் லிங்கராஜர் கோயில் விமானம், தமிழ் நாட்டின் தஞ்சைப் பெரிய கோயில் விமானம் என்பன முறையே வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் அமைக்கப்பட்ட மிகப்பெரிய விமானங்களுக்கான எடுத்துக் காட்டுகளாக இன்றும் விளங்குகின்றன. எனினும் தென்னிந்தியாவில் 11 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வாயில் கோபுரங்கள் கட்டிடக்கலை அடிப்படையில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியபோது, விமான அமைப்பு பெருமளவு முக்கியத்துவத்தை இழந்தது.

சொற்பொருள்

[தொகு]

விமானம் என்பது சமஸ்கிருத மொழியில் இருந்து பெறப்பட்டது. சமஸ்கிருதத்தில் விமானம் என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. மானம் என்பது அளவீடு. விமானம் என்ற சொல்லுக்கு அளத்தல், அளக்கப்பட்டது என்ற பொருள் கொள்ளப்படுகின்றது[1]. நுண் அளவுகள் கொண்டு இயற்றியது ஆதலால் இந்த அமைப்பை விமானம் என்கின்றனர்[2].

பாணிகள்

[தொகு]
தஞ்சைப் பெரிய கோயில் விமானம். திராவிடப் பாணியில் அமைந்தது.

விமானங்களின் கருத்துருவும், பயன்பாடும், அடிப்படைத் தள அமைப்பும் ஒன்றாகவே இருந்தாலும் இதன் அமைப்பு முறையிலும், அழகூட்டலிலும் வேறுபாடுகளைக் காணமுடியும். சிறப்பாக மூன்று வகைகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவை, நாகரப் பாணியில் அமைந்தவை, திராவிடப் பாணியில் அமைந்தவை, வேசரப் பாணியில் அமைந்தவை என்பனவாகும். நாகரப் பாணி விமானங்கள் அல்லது சிகரங்கள் வட இந்தியப் பகுதிகளில் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தவை. திராவிடப் பாணி விமானங்கள் தென்னிந்தியாவுக்கு உரியது. வேசரம், முதலில் குறிப்பிட்ட இரண்டு பாணிகளினதும் இயல்புகள் கலந்து காணப்படும் ஒரு பாணியாகும். இப் பாணியில் அமைந்த விமானங்கள் பெரும்பாலும் கர்நாடகப் பகுதிகளில் உள்ளன. பொதுவாக ஹொய்சாலக் கோயில்களிலும், சாளுக்கியக் கோயில்களிலும் இவற்றைக் காணலாம். நாகர விமானங்கள் பொதுவாக எளிமையானவையாக அமைந்துள்ளன. திராவிட விமானங்கள் கூடிய அழகூட்டல்களுடன் அமைக்கப்படுகின்றன. மேல் குறிப்பிட்ட மூன்று பாணிகளை விடவும், இந்தியாவின் சில பகுதிகளில், கருவறைக் கூரைகள் வேறுவிதமாக அமைக்கப்படுவது உண்டு. கேரளக் கோயில்களில் இவ்வாறான வேறுபாட்டைக் காணலாம்.

தமிழகக் கோயில் விமானம்

[தொகு]
மயிலம்பாவெளி மீனாட்சி அம்மன் ஆலய விமானம் (சிகரம்)

தமிழகத்துக் கோயில் விமானம் என்பது பொதுவாக ஆறு அங்கங்களைக் கொண்டிருக்கும். எனவே அது ஷடங்க விமானம் என அழைக்கப்படும். விமானத்தின் ஆறு அங்கங்கள்

  1. அதிட்டானம்
  2. பித்தி
  3. பிரஸ்தரம்
  4. கிரீவம்
  5. சிகரம்
  6. கலசம்

இந்த ஆறு அங்கங்களும் மனிதனுடைய பாதம், கால், தோள், கழுத்து, தலை, முடி (கிரீடம்) ஆகிய உறுப்புகளுக்கு இணையாகக் கொள்ளப்படுகின்றன. [3]

அமைப்பு

[தொகு]
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சோமநாதபுரத்தில் அமைந்துள்ள சென்னகேசவர் கோயில் விமானம்

விமானத்தைத் தாங்கிய கருவறை பெரும்பாலும் சதுர வடிவான தள அமைப்பைக் கொண்டது. இதனால் பெரும்பாலான விமானங்களின் வெட்டுமுக வடிவமும் சதுரமாகவே அமைந்திருப்பதைக் காணலாம். ஆனாலும், செவ்வகம், வட்டம், பல்கோணம், நட்சத்திர வடிவம் ஆகிய வெட்டு முகங்களைக் கொண்ட விமானங்களும் உள்ளன. எல்லாப் பாணிகளைச் சேர்ந்த விமானங்களிலும் நிலைக் குத்தான சுவர்களைக் கொண்ட கருவறைப் பகுதி, அதன்மேல் அமைந்த நாற்புறமும் ஒடுங்கிச் செல்லும் பகுதி, சற்று ஒடுங்கிய கழுத்துப் பகுதி, குமிழ் வடிவத் தலைப் பகுதி, கலசம் என்பன அடங்கி உள்ளன.

இமய மலைப் பகுதிகளில் இருந்து தெற்கே கிருஷ்ணா ஆறு, மல்ராபா ஆறு என்பன வரையான பரந்த வட இந்தியப் பகுதிகளில் வளர்ச்சியடைந்த விமானங்களின் தோற்றத்தில் நிலைக்குத்துக் கோடுகளே கிடைக் கோடுகளிலும் கூடுதலாக முதன்மை பெற்று அமைந்துள்ளன. இவற்றின் தலைப் பகுதி நெல்லிக்கனி வடிவில் அமைந்திருக்கும்.

தென்னிந்திய விமானங்களின் ஒடுங்கிச் செல்லும் பகுதி, ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த நுண்ணளவு மண்டபங்களைக் கொண்ட தளங்கள் போல் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தளமும் அதற்குக் கீழுள்ள தளத்திலும் குறுகியதாக அமைவதால் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் வடிவம் பெறப்படுகின்றது. இதனால், தென்னிந்திய விமானங்களில் கிடைக் கோடுகள், நிலைக் குத்துக் கோடுகளிலும் முதன்மை பெற்று அமைந்துள்ளதைக் காணலாம்.

குறிப்புகள்

[தொகு]
  1. Monier-Williams Sanskrit-English Dictionary: v0.3 RC1; பக். 951. [1] பரணிடப்பட்டது 2016-07-22 at the வந்தவழி இயந்திரம்
  2. கணபதி, வி.; விமானம் - கோபுரம் ஆகிய கலைக் கட்டிடங்களின் நுண்பொருள்; தக்ஷினா பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை-41; 2002. பக். 32.
  3. டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் நூல் பக்கம் 89 -90
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமானம்_(கோயில்)&oldid=3629895" இலிருந்து மீள்விக்கப்பட்டது