மணற்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல மில்லியன் ஆண்டுகளாக வெள்ள நீரினால் அரிக்கப்பட்ட சிவப்பு நிற மணற்கற் பாறை

'மணற்கல் (Sandstone) என்பது, மணல் அளவுள்ள கனிமம் அல்லது பாறைத் துகள்களினால் உருவான படிவுப் பாறை ஆகும். புவியோட்டில் படிகப்பாறை (quartz), ஃபெல்ஸ்பார் (feldspar) ஆகிய கனிமங்கள் அதிகமாகக் காணப்படுவதால் பெரும்பாலான மணற்கற்கள் இவ்விரு கனிமங்களில் ஒன்றாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ ஆனவையாக இருக்கின்றன. மணலைப் போலவே மணற்கல்லும் பல நிறங்களில் உள்ளனவாயினும், பொதுவாக இவை பழுப்பு, மண்ணிறம், மஞ்சள், சிவப்பு, சாம்பல், வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. மணற்கற் படிவுகள் குத்துப் பாறைகளாகவும், பிற நிலவுருவியல் அம்சங்களாகவும் வெளியே தெரியும்படி அமைந்திருப்பதால், மணற்கற்களின் சில நிறங்கள் குறிப்பிட்ட புவியியற் பகுதிகளோடு தொடர்பு படுத்தப்படுகின்றன.

சிலவகை மணற்கற்கள் காலநிலைத் தாக்கங்களுக்கு நிலைத்து நிற்கும் தன்மையைக் கொண்டிருப்பினும், அவற்றில் வெட்டுதல், செதுக்குதல் போன்ற வேலைகளைச் செய்வது இலகுவானது. இவ்வியல்பு மணற்கற்களைக் கட்டுமானம், பாவுதல் (paving) போன்றவற்றுக்கு உகந்தவையாக ஆக்குகின்றது. மணற்கல்லிலுள்ள தனித்தனித் துகள்கள் கடினமானவையாகவும், ஒருசீரான பருமன் உடையவையாகவும் இருப்பதால், இக்கல் கத்தி முதலிய ஆயுதங்களைத் தீட்டுவதற்கு உரிய சாணைக்கற்கள் செய்வதற்கு உதவுகிறது.

மணற்கற்களைப் பெரும்பாலும் கொண்டிருக்கும் பாறைப் படைகள் நீரை ஊடுசெல்ல விடுவதாலும், அவற்றில் உள்ள துளைகள் அதிக நீரைச் சேமிக்கக்கூடியவையாக இருப்பதாலும் இவை சிறந்த நீர்கொள்படுகைகளாக அமைகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணற்கல்&oldid=3679635" இலிருந்து மீள்விக்கப்பட்டது