உள்ளடக்கத்துக்குச் செல்

கத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பாரம்பரியக் கத்தி

கத்தி (ஒலிப்பு) (knife) என்பது வெட்டுவதற்குப் பயன்படும் கருவி ஆகும். வெட்டும் கூர்மையான பாகமும் பிடியும் கொண்டதாகக் கத்திகள் அமைந்திருக்கும். கற்காலத்திலிருந்து கத்திகள் ஆயுதங்களாகவும் பயன்பட்டு வருகிறது. நவீன கருவிகளின் வரவால், கத்தியின் ஆயுதப் பயன்பாடு குறைந்து வருகிறது. இது சமையலில் முக்கிய இடம் பெறுகிறது. தேவைகளைப் பொறுத்துப் பல அளவுகளிலும் கத்திகள் தயாரிக்கப்படுகின்றன. கத்தி தயாரிக்கும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

முற்காலத்தில், பாறை, எலும்பு, தீக்கல் உள்ளிட்டவற்றால் கத்தி செய்யப்பட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், வெண்கலம், செப்பு, இரும்பு, எஃகு, பீங்கான், தைட்டானியம் ஆகியவற்றிலும் கத்தி செய்யப்படுகிறது. பல்வேறு பண்பாடுகளில் கத்தியின் பயன்பாடு காணப்படுகிறது. மனிதன் முதன்மை கண்டுபிடிப்புகளில் கத்தியும் ஒன்று. இதனால், பண்பாடு, சடங்குகளில் கத்தி முக்கிய இடம் பிடிக்கிறது.[1]

கத்தியின் பாகங்கள்

[தொகு]
கத்தியின் பாகங்கள்

தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள கத்தியில்

  1. வெட்டும் பகுதி (கூர்முனை, தடித்த பகுதி)
  2. கைப்பிடி
  3. கைப்பிடியின் மழுங்கிய பகுதி

கத்தியில் இரண்டு வகை உண்டு. ஒன்று, சாதாரணமானது. மற்றொன்று மடிக்கக் கூடிய வகையைச் சார்ந்தது. கைப்பிடிக்கும் வெட்டும் பகுதிக்கும் இடையில், பாதுகாப்பான வளைவும் இருக்கும். இது கை நழுவி கூர்முனையில் படாமல் இருக்க உதவுகிறது.

கூர்முனை/பிளேடு

[தொகு]
கத்தி தயாரிக்கும் நிறுவனம்

பிளேடுகளை விதவிதமான பொருட்களில் செய்யலாம். கார்பன் ஸ்டீலில் செய்தால் மிகக் கூர்மையாகவும், கூர்ப்படுத்த எளிதாகவும் இருக்கும். ஆனால், விரைவில் துரு பிடிக்கக் கூடியது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், குறைந்த அளவு கூர்மையானதாக இருந்தாலும், துரு பிடிப்பதில்லை. இவை இரண்டையும் கலந்து செய்யப்படும் பிளேடுகளும் உண்டு. தைட்டானியம் பிளேடுகள் எடை குறைந்தவை, எளிதில் வளையும் தன்மை கொண்டவை. எனினும், குறைந்த அளவு கூர்மை கொண்டவை. பீங்கான் பிளேடுகள் குறைந்த எடையுடன், அதிக கூர்மையும் கொண்டவை, ஆனால், கீழே விழுந்தால் உடைந்துவிடக் கூடியன. பிளாஸ்டிக் பிளேடுகள் குறைந்த அளவு கூர்மையைக் கொண்டவை. இவற்றை எளிதில் அகற்றிவிடலாம்.[2]

நிலையான கத்தி

[தொகு]
நிலையான கத்தி

நிலையான கத்தியில், பிடிமானம் பலமானதாக இருக்கும். பிளேடு நகர முடியாதபடி பிணைக்கப்பட்டிருக்கும்.

மடிக்கக்கூடிய கத்தி

[தொகு]
மடிக்கக் கூடிய கத்தி

மடிக்கக் கூடிய கத்தியில், பிளேடு உள்ளே மறைத்து வைக்கும்படி அமைப்பிருக்கும். இவற்றைத் தவறுதலாகக் கையாண்டால், பிளேடால் ஆபத்து நேரும் என்பதால், பிளேடை வெளியில் எடுக்க உத்திகள் இருக்கும். இவற்றில் சில:

  • பொத்தானை அழுத்தினால் ஸ்பிரிங் செயல்பட்டு பிளேடு வெளியே வரும்.
  • பட்டையை ஒரு புறம் தள்ளினால் பிளேடு வெளியே வரும் [2]
  • பிளேடின் பிடியை வெளியே இழுத்தால் பிளேடு வெளிவரும்.

கைப்பிடி

[தொகு]

கைப்பிடிகள் வெவ்வேறு மூலப் பொருள்களில் இருந்து செய்யப்படுகின்றன. இறுக்கமான பிடிமானத்திற்கு ஏற்ப அமைக்கப்படுகின்றன.

  • மரம் - நல்ல பிடிமானம் கொண்டவை. நீரின் பாதிப்புகளால் விரைவில் உடையக்கூடிய நிலையை அடையக் கூடியன.
  • பிளாஸ்டிக் - நீண்ட காலம் உழைக்கக் கூடியன. வழுக்கும் தன்மையும், உடையும் தன்மையும் இதன் குறைகள்.
  • லெதர் - வேட்டையாடும் கத்திகளில் இவை காணப்படுகின்றன.
எருமை கொம்பில் செய்யப்பட்ட கத்தியின் கைப்பிடி

கல், யானை தந்தம், விலங்குகளின் கொம்பு, ஆகியவற்றில் இருந்து கைப்பிடி செய்யப்படுவதுண்டு.

ஆயுதப் பயன்பாடு

[தொகு]
பழமையான கத்தி

கத்தி, ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. கத்திச் சண்டையில் முக்கியமான ஆயுதம் இதுவே.

  • எறி கத்தி: விசையை அழுத்தினால் தொலைவில் உள்ள குறியைத் தாக்கும் ஆற்றல் கொண்ட கத்தி.
  • துப்பாக்கிமுனை கத்தி: சில துப்பாக்கிகளின் முனையின் கத்தி செருகப்பட்டிருக்கும்.
  • படைவீரர் கத்தி: போரின் போது வீரர்கள் பயன்படுத்தும் கத்தி வகை இது.

விளையாட்டு

[தொகு]
  • கத்தி எறிதல் : எறிந்து விளையாடுவதற்கு ஏற்ப செய்யப்பட்ட கத்தி

வீட்டுப் பயன்பாடு

[தொகு]
மேசைக் கத்தி

சமையலுக்காக, பொருட்களை அருக்கக் கத்தி பயன்படும்.

  • சமையல் கத்தி: பன், கேக் போன்றவற்றை வெட்டுவதற்கான கத்தி
  • பன்றி இறைச்சி, இறைச்சி, மீன் ஆகியவற்றை வெட்டுவதற்கு தனிக் கத்திகள் உண்டு.
  • மின் கத்தி: மின்சார இயக்கத்தை தூண்டினால், விரைந்து வெட்டும் வகையைச் சார்ந்தது.
  • ஆளி கத்தி: சிப்பியைக் கொண்டிருக்கும் மூடியைப் பிரிக்க உதவும்.

கருவி

[தொகு]

கத்தி, கருவிகளுள் ஒன்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2]\

டைவர் கத்தி
  • குரூக்குடு கத்தி: பொருட்களை செதுக்க உதவும்.
  • மின்பணியாளர் கத்தி: மின்கம்பிகளை வெட்ட உதவும்.
  • லினோலியம்கத்தி: லினோலியம் போன்ற தாள்களை வெட்ட உதவும் கத்தி.
  • மசேடி: கரும்பு போன்ற பயிர்வகைகள வெட்ட உதவும்.
  • பேப்பர் கத்தி: கடிதங்களை பிரிக்க உதவும்
  • சிகிச்சைக் கத்தி: அறுவை சிகிச்சைகளின் போது பயன்படும்.
  • ரேசர் கத்தி: முடியை மழிக்கப் பயன்படும்.
  • இழைப்பு கத்தி: மரம் போன்ற பொருட்களை இழைத்து செய்ய உதவும்>
பேப்பர் கத்தி

பண்பாட்டு அடையாளம்

[தொகு]
  • கிர்பான்: சீக்கிய மதத்தின் அடையாளமாக சீக்கியர்கள் வைத்திருக்கும் ஐந்து சின்னங்களில் ஒன்று>
  • கிலையா: திபெத்திய புத்த சமயத்தினர் பயன்படுத்தும் கத்தி.
  • கிரிஸ் கத்தி: மலாயர் பண்பாட்டில் இடம்பெற்ய்ம் கத்தி
  • குக்குரி: நேபாளத்தில் கருவியாகவும், ஆயுதமாகவும் பயன்படும்.
  • பூக்கோ - பின்லாந்து பண்பாட்டில் இடம்பெற்றது.
  • சியக்சு - செருமானிய கத்தி

சடங்குகள்

[தொகு]

மூடநம்பிக்கையிலும், சடங்குகளிலும் கத்திக்கு முக்கியத்துவம் உள்ளது.[3] குழந்தை பிறக்கும்போது கட்டிலுக்கு அடியில் கத்தியை வைத்தால், குழந்தை பிறக்கும்போது ஏற்படும் வலி குறையும் என நம்புகின்றனர். [4]. கத்தியை படுக்கைக்கு அருகில் வைத்தால் பேய், பிசாசு அண்டாது என நம்புவோரும் உளர். விலங்குகளை பலிகொடுக்கும்போதும், கத்தியை வைத்து வணங்குவர்.[5] கிரேக்கத்தில், கத்தியை தலையணைக்கு அருகில் வைத்தால், கெட்ட கனவுகள் தவிர்க்கப்படும் என்றும் நம்புகின்றனர். [6] கத்தியை பரிசுப் பொருளாக வழங்கினால், உறவு முறியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. [4] இரும்பால ஆன கத்தியை பிடித்தால், தற்காலிகமாக வாதம் நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உடலில் கத்தியால் கீறிக் கொண்டால், கடவுளின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

சட்டங்கள்

[தொகு]

கத்தியைப் பயன்படுத்துவதற்கு வெவ்வேறு நாடுகள் சட்டங்களைக் கொண்டுள்ளன. கத்தியின் சில பயன்பாட்டிற்கு தடையும், மீறினால் தண்டனையும் வழங்கப்படும். கனடாவில், சில வகைக் கத்திகள் தடை செய்யப்பட்டுள்ளன. சீனாவில் பயங்கர ஆயுதங்களுக்கு தடை உண்டு. போலந்தில் கத்திகள் மீது தடை இல்லை. கத்திகளை, வாங்கவும், விற்கவும், பொதுவெளியில் கொண்டு செல்லவும் உரிமை உண்டு.

சான்றுகள்

[தொகு]
  1. Kertzman, Joe (2007). Art of the Knife. Iola, WI: Krause Publications. pp. 3–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89689-470-9.
  2. 2.0 2.1 2.2 "Greatest Tool #10: The Knife - lifehack.org". பார்க்கப்பட்ட நாள் 2007-05-07.
  3. "Bad Luck and Superstition 5". பார்க்கப்பட்ட நாள் 2007-05-08.
  4. 4.0 4.1 "HouseholdFolklore". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-05-08.
  5. "Ritual knife". பார்க்கப்பட்ட நாள் 2007-05-08.
  6. "The Magic of the Horseshoe: The Magic Of The Horse-shoe: VI. Iron As A Protective Charm". பார்க்கப்பட்ட நாள் 2007-05-08.

மேலும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தி&oldid=3748724" இலிருந்து மீள்விக்கப்பட்டது