ஆளி (மெல்லுடலி)
ஆளி | |
---|---|
பிரான்சிலுள்ள நீர்நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒருவகை ஆளி இனம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | இருவோட்டுடலி
|
ஆளி (Oyster) என்பது உலகம் முழுதும் பரவிக் காணப்படுகின்ற ஓடுடைய மெல்லுடலி வகையைச் சார்ந்த உயிரினமாகும். பொதுவாக ஆளிகள் கடற்கரை ஓரங்களிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றன. ஆளிகள் கடினமான பாறைகள் மற்றும் மடிந்த ஆளிகளின் ஓடுகளில் ஒட்டி வாழ்கின்றன. இவையன்றி நீர்நிலைகளில் காணப்படும் ஒரு திடப்பொருளில் ஒட்டி வாழக்கூடியத் தன்மையது. விலங்கின வகைப்பாட்டில் ஆளிகள் மெல்லுடலிகள் வகையைச் சார்ந்ததாகும்.
இதன் வெளிப்பகுதி இரு ஓடுகளால் மூடப்பட்டும் அதன் உட்பகுதி சத்துக்கள் நிறைந்த சதைப்படலமாகவும் காணப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆளிகளை உணவாகப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் பச்சையாக ஆளிகளை உண்கின்றனர். தற்போது இந்தியாவிலும் மக்கள் ஆளிகளை உணவாகக் கொள்கின்றனர்.
1973ம் ஆண்டு மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியில் ஆளிக் குஞ்சு பொரித்தல் மற்றும் ஆளி வளர்க்கும் தொழில்நுட்பத்தை அறிந்து அதைச் செயல்படுத்திவருகிறது. இந்தியாவில் கிரசாச்டிரியா மெட்ராசென்சிச் (Crassostrea madrasensis) என்னும் ஆளி வகை அதிகமாகக் காணப்படுகிறது.
வாழிடம்
[தொகு]ஆளிகள் பொதுவாக ஆழம் குன்றிய கடற்கரையோரங்களிலும், ஏரி மற்றும் கழிமுகங்களில் காணப்படும் பாறை மற்றும் திடப்பொருட்களான ஓடுகள் போன்றவற்றில் ஒட்டி வாழ்கின்றன. இவைகள் நீர்நிலைகளில் காணப்படுகின்ற நுண்ணிய அலைதாவரம் மற்றும் அலைவிலங்குகளை உண்டு வாழ்கின்றன.
இனப்பெருக்கம்
[தொகு]ஆளிகள் பெரும்பாலும் நீரின் வெப்பம், உப்புத்தன்மை மற்றும் புளிமத்தன்மை திடீரென மாறும் பொழுது இனப்பெருக்கம் செய்கின்றது. மழைக்காலங்களில் அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. ஆளிகள் 8-10 மாதத்திற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை எட்டுகின்றன. ஆளிக்குஞ்சுகள் இனப்பெருக்கம் நடந்து 17-19 நாட்களில் நீரின் மேற்புறத்தில் மிதக்கும் நிலையில் காணப்படும். இவை தனது குஞ்சுப்பருவத்தை அலைவிலங்குகளாகக் கழிக்கும் அலைகயலுருக்களாகும்.
குஞ்சுப்பருவத்தைத் தொடர்ந்து ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் உருமாறி, தனக்குப் பிடித்த இடங்களில் ஒட்டி எஞ்சிய வாழ்வினைக் கழிக்கின்றன. இவை ஒரு இடங்களில் ஒட்டியபின் அவ்விடத்தில் இருந்து இடம் பெயராமல் அவ்விடத்திலேயே கழிக்கின்றன. 10-12 மாதங்களில் ஆளிகள் முழுவளர்ச்சியையும் எட்டிவிடுகின்றன. ஆளிகள் பெரும்பாலும் கூட்டமாக வளர்கின்றன. அவ்வாறு கூட்டமாக வளரும் பண்பை ”பார்” என்று விளிக்கின்றனர்.
வணிகநோக்கில் வளர்ப்புமுறை
[தொகு]இனப்பெருக்க காலங்களில் ஆளிகளின் ”பார்” அருகில் இறந்த ஆளிகளின் ஓடுகளை வைக்கும் போது அதன் மீது ஆளிக்குஞ்சுகள் ஒட்டி வளரும். 5 மி.மீ. அளவிற்கு வளர்ந்த பிறகு, இந்த ஓடுகளைக் கோர்த்து கயிறுகளில் சேர்க்க வேண்டும். இதனை கம்புகளால் செய்யப்பட்ட தட்டிகளில் இணைக்கப்பட்டு நீரில் மூழ்கியிருக்கும் படி, தொங்கவிட வேண்டும். 8 முதல் 10 மாதங்களில் இவ்வாளிகள் வளர்ச்சியடைந்து அறுவடை செய்யும் பருவத்தையெட்டும்.
இதேபோல் ஆய்வரைகளில் ஆளிகளைக் குஞ்சுகள் பொரிக்கச் செய்து, அந்தக் குஞ்சுகளை ஓட்டில் ஒட்டும் வரை வளர்த்து, பின்னர் அதனை மேலே குறிப்பிட்ட முறையில் வளர்க்கலாம்.
ஆளி வளர்ப்பில் சீனம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சப்பான், கொரியா மற்றும் பிரான்சு போன்ற நாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தி குறைவாகவும் அதிகமான ஆளிகள் இயற்கையாகவே சேகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப் பட்டும் வருகின்றன. கேரளப் பகுதிகளில் சில இடங்களில் ஆளிகள் வளர்ப்புக் காணப்படுகிறது.
பயன்கள்
[தொகு]- ஆளிகள் உணவாகப் பயன்படுகின்றது. மேற்கத்திய நாடுகளில் பச்சையாக உண்ணும் பழக்கம் காணப்படுகின்றது. இதனை குழம்பாகச் செய்தோ வறுத்தோ ஊறுகாய் வடிவிலோ உண்ணலாம்.
- ஆளியின் ஓடுகளை சுண்ணாம்பு மற்றும் பசுங்காரை (cement) தொழிற்கூடங்களில் மூலப்பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
- இவைகளின் சதைகள் புரதம், கொழுப்பு மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- http://www.globalgourmet.com/food/egg/egg0298/oyfacts.html#axzz1NIgORwF4 பரணிடப்பட்டது 2011-05-30 at the வந்தவழி இயந்திரம்
- Narasimham KA and V Kripa, 2007, Textbook of Oyster biology and culture in India, Indian Council of Agriculture Research, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7164-070-2