உள்ளடக்கத்துக்குச் செல்

வெண் சங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் சங்கு
வெட்டிச் செதுக்கிய வேலைப்பாட்டுடன் மூன்று வெண் சங்குகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருங்குடும்பம்:
தரப்படுத்தப்படாத:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. pyrum
இருசொற் பெயரீடு
Turbinella pyrum
L, 1758
வேறு பெயர்கள்

Xancus pyrum

வெண் சங்கு (சாங்கசு பைரம், Xancus pyrum) கடல் நத்தை வகையைச் சேர்ந்த மெல்லுடலி ஆகும். இது வலம்புரிச் சங்கு எனவும் சிலுவைச் சங்கு எனவும், தட்சணாமூர்த்திச் சங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இந்தியச் சங்கு இனம், தற்போது டர்பினல்லா பைரம்[1] (Turbinella pyrum) எனவும் அழைக்கப்படுகிறது. சாங்கசு என்னும் சங்கினத்தில் சாங்கசு பைரம், சாங்கசு ஆங்குலேட்டர் லேட்டசு, சாங்கசு லேவிகேட்டர் என்ற மூன்று சிற்றினங்கள் உள்ளன.  இந்த மூன்று வகைகளில் சாங்கசு பைரம் என்னும் சங்கே சிறப்பானது.

உயிரியல்

[தொகு]

சங்கு மெல்லுடலி என்னும் பிரிவிலுள்ள ஓரோட்டு  உடலி[1] (Gastropoda) ஆகும். இதன் கடினமான ஓடு சுண்ணாம்பினால் ஆனது. இதன் ஓட்டின் மேற்பகுதி பெரியோஸ்டிரகம் என்ற ஓட்டுறையினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஓட்டினுள்  இருக்கும் சங்கின் உட்பகுதி, ஓட்டின் உட்பக்கமுள்ள " காலுமெல்லா" என்னும் தூணின் அனைத்து சுற்றுக்களிலும் (Spires) சுற்றப்பட்டு இருக்கும். ஓட்டின் வாய்ப்பகுதியை மூட, மூடி (Opereulam) ஒன்று உண்டு. இது சங்கினுடைய பாதத்தில் மேல்புறத்தில் ஒட்டியிருக்கும்.

வாழும் தன்மை மற்றும் காணப்படும் இடங்கள்

[தொகு]

சங்குகள் கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. கடலின் அடிமட்டத்தில் சுமார் 20 முதல் 25  அடி ஆழமுள்ள பகுதிகளில் வாழ்கின்றன.[2] இந்த இடங்கள் சங்குப் படுகைகள் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் பாறையோரத்தில் இருக்கும் திடமற்ற, மெல்லிய மணற் பகுதிகள் சங்குகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும்.

இந்தியாவில் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் இச்சங்கு மிகுதியாகக் காணப்படுகிறது. அத்துடன் அந்தமான், இலங்கை மற்றும் குஜராத் கடற்கரைப் பகுதிகளிலும் குறைந்தளவு காணப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், சோழ மண்டலம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மண்டலங்களிலும் இச்சங்கு வளம் நிறைந்துள்ளது.[2]

உணவுப்பழக்கம்

[தொகு]

சங்கு ஒரு புலால் உண்ணியாகும். இவை கடலடியிலுள்ள பலகாலிப் புழுக்கள் (Polycheats), டெரிபெல்லிட், யூனிஸ்ட் ஆகிய புழு இனங்களை அதிகம் உண்கின்றன.[3]  

இயக்கம்

[தொகு]

சங்கு கடல் தரையின் மீது ஊர்ந்து செல்லும்போது, கடினமான பொருள்கள் அதன் மென்தோல் அறையினுள் (Mantle Cavity) நுழைந்து விடாமல் தடுக்க, சளி (Mucus) போன்ற நீர்மத்தை வழியில் சுரந்து அதன் மீது செல்கின்றது.

இனப்பெருக்கம்

[தொகு]

சனவரி முதல் மார்ச் வரை மற்றும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலம் சங்கின் இனப்பெருக்க காலம் ஆகும்.[4] பெண் சங்கு இனச் சேர்க்கைக்கு பின் வெளியிடும் முட்டைக் கூடு (Egg Mass) சங்குப்பூ எனப்படுகிறது.   இதன் நீளம் 250 முதல் 300 மி.மீ. வரை இருக்கும். இக்கூட்டின் குறுக்குவாட்டில் ஒன்றின் மீது ஒன்றென 24 முதல் 28 அறைகள் உள்ளன.  ஒவ்வொரு அறைக்குள்ளும் கருவுற்ற முட்டைகள் (Fertilized Egg) இருக்கும். அறைகளின் பக்கவாட்டில் செவுள் போன்ற துளை உண்டு. இதன் மூலம் கருவுற்ற முட்டைகளுக்குத் தேவையான உயிர்வளி கிடைக்கிறது. பின்பு கூட்டினுள் இருந்து 10 மி.மீ.  நீளமுள்ள இளம் சங்குகள் வெளிப்படுகின்றன.

பெண் சங்குகள் ஆண் சங்கை விட பெரியவை. ஆண் சங்கு குறுக்குவாட்டில் 57 முதல் 60 மி.மீ. வளர்ச்சி அடையும். பெண்  சங்கு குறுக்குவாட்டில் 70 முதல் 80 மி.மீ. வளர்ச்சி அடையும்.

பயன்கள்

[தொகு]

சங்கு சதை உணவாகப் பயன்படுகிறது.[5] சங்கு வளையல், மோதிரம் போன்ற அணிகலன்கள் செய்யவும், ஓர் அலங்கார பொருளாகவும் பயன்படுகிறது. வலம்புரிச் சங்கானது இறைப் பண்பு மிக்க சங்காக இந்தியாவில் மதிக்கப்படுகிறது. ஈழை நோய், என்புருக்கி நோய், மஞ்சள் காமாலை, காசநோய், வயிற்று வலி மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து குணமடைய சங்குத்தூள் மருந்தாகப்  பயன்படுகிறது[சான்று தேவை].

இவற்றையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 James Hornell (1914), Sacred Chank of India, Madras Fisheries Bureau Bulletin No.7, Madras. Printed by the Superintendent Government Press.
  2. 2.0 2.1 சவகர், வெங்கட்ரமணி, பொன்னையா, சுந்தரராஜ் (1977), மன்னார் வளைகுடாவில் காக்கப்படவேண்டிய அரிய உயிரினங்கள், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி.
  3. Herold . V et al (1984), Marine Biology, Charles E Mernell Publishing Company, Columbia
  4. D. W. DEVANESEN & P. I. CHACKO : [www.new.dli.ernet.in/rawdataupload/upload/.../20005b8d_141.pdf BIONOMICS OF THE SACRED CHANK, Xancus pyrum]
  5. சுந்தரராஜ், கிருஷ்ணதாஸ். (1989), சங்கு வளம், ஸ்டார் பிரசுரம், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_சங்கு&oldid=2946790" இலிருந்து மீள்விக்கப்பட்டது