ஒலிவ நிறச் சிற்றாமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிவ நிறச் சிற்றாமை
தமிழ்நாட்டில் காணப்பட்ட ஒரு சிற்றாமை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: ஆமை
குடும்பம்: மறைகழுத்துள்ளவை
பேரினம்: சிற்றாமை
இனம்: ஒலிவ நிறச் சிற்றாமை
இருசொற் பெயரீடு
Lepidochelys olivacea
(Eschscholtz, 1829)
வேறு பெயர்கள் [1]
  • Testudo mydas minor Suckow, 1798
  • Chelonia multiscutata Kuhl, 1820
  • Chelonia olivacea Eschscholtz, 1829
  • Chelonia caretta var. olivacea Gray, 1831
  • Chelonia dussumierii Duméril & Bibron, 1835
  • Caretta olivacea Rüppell, 1835
  • Thalassochelys (Lepidochelys) olivacea Fitzinger, 1843
  • Caouana olivacea Gray, 1844
  • Caouana ruppellii Gray, 1844 (nomen nudum)
  • Chelonia subcarinata Rüppell, 1844 (nomen nudum)
  • Caouana dessumierii Smith, 1849 (ex errore)
  • Chelonia dussumieri Agassiz, 1857 (ex errore)
  • Chelonia polyaspis Bleeker, 1857 (nomen nudum)
  • Lepidochelys dussumieri Girard, 1858
  • Lepidochelys olivacea Girard, 1858
  • Chelonia dubia Bleeker, 1864 (nomen nudum)
  • Cephalochelys oceanica Gray, 1873 (nomen nudum)
  • Cephalochelys oceanica Gray, 1873
  • Thalassiochelys tarapacona Philippi, 1887
  • Thalassochelys tarapacana Philippi, 1887
  • Thalassochelys tarapacona Boulenger, 1889
  • Chelonia olivaccea Velasco, 1892 (ex errore)
  • Thalassochelys controversa Philippi, 1899
  • Caretta remivaga Hay, 1908
  • Caretta caretta var. olivacea Deraniyagala, 1930
  • Lepidochelys olivacea olivacea Deraniyagala, 1943
  • Caretta olivacea olivacea Mertens, 1952
  • Lepidochelys olivacea remivaga Schmidt, 1953
  • Caouana rueppellii Wermuth & Mertens, 1961 (ex errore)
  • Lepidochelis olivacea Tamayo, 1962
  • Lepidochelys olivaceas Kesteven, 1969 (ex errore)
  • Chelonia multicustata Márquez, 1990

ஓலிவ நிறச் சிற்றாமை (Olive ridley turtle) என்பது இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காணப்படும் கடல் ஆமை வகையாகும்.[2] இந்த ஆமைகள் இதய வடிவம் கொண்டு ஒலிவ பச்சை நிறத்தில் இருப்பதால் ஒலிவ நிறச் சிற்றாமை என்று பெயர் பெற்றன.

பெண் ஆமைகளை இடுலி என்பர்.[3] நவம்பர் - ஏப்ரல் இவை முட்டையிட ஏற்ற காலமாகும். சிற்றாமைகள் அதிக அளவில் கடற்கரைகளில் முட்டையிடும். இவை, இந்திய கிழக்குக் கடற்கரை பகுதியான ஒரிசாவின் கஹிர்மாதா, ருசிகுல்யா, தேவி ஆற்று முகத்துவாரத்தில் பெரிய எண்ணிக்கையில் முட்டையிடுகின்றன. இதற்காக ஆண்டுக்கு ஆறு லட்சம் சிற்றாமைகள் தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரப் பகுதியைக் கடந்து செல்கின்றன.[4] ஒவ்வொரு பெண் ஆமையும் ஆண்டுக்கு இரண்டு முறை முட்டை இடும். ஒரு முறைக்கு 50 முதல் 190 முட்டைகள்வரை இடலாம். முட்டையிட்ட 45 முதல் 60 நாட்களுக்குள் குஞ்சு பொரிந்துவிடும்.[5] முட்டைகள் பெரும்பாலும் இரவிலேயே பொரிகின்றன. பொரிந்ததும் வெளிவரும் பார்ப்புகள்[6] தன்னியல்பாகவே கடல் நீரில் பட்டுத் தெறிக்கும் நிலவொளியை நோக்கி நகர்கின்றன. இப்போது கடற்கரைகளில் மின்விளக்குகள் மிகுந்துள்ளதால் குழம்பிவிடுகின்றன. பல நூற்றாண்டுகளாகச் சென்னைக் கடற்கரையில் பங்குனித் திங்களின்போது ஆயிரக்கணக்கில் இவ்வாமைகள் முட்டையிடுகின்றன. அதனால் இவ்வாமையை பங்குனி ஆமை என்று அழைக்கின்றனர்.[7] பெண் ஆமைக் குஞ்சுகள் எந்தக் கடற்கரையில் பிறந்தனவோ, அதே கடற்கரைக்கு வளர்ந்து கருத்தரித்த பிறகு மீண்டும் முட்டையிட வருகின்றன. இவை பிறந்து சுமார் 20-25 ஆண்டுகள் கடந்த பின்னர் கருத்தரிக்கும் பெண் ஆமைகள் இவை பிறந்த இடத்திற்கே மீண்டும் முட்டையிட வருவது மிகுந்த ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆமைகளின் உடலில் மாக்னெட்டைட் (Fe3O4) எனும் இரும்புத்தாது உள்ளது என்றும், சிற்றாமைக்குள் இருக்கும் இந்த உயிரி காந்த முள் அவற்றுக்கு வழித்தடம் காட்டும் செயலியாகச் செயல்படுகிறது என்று கால்டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[8] இவற்றால் இடப்படும் 1,000 முட்டைகளில், ஒன்று மட்டும் வளர்ந்த ஆமைப் பருவத்தை அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமைகளின் தற்போதைய நிலை[தொகு]

15 ஆம் நூற்றாண்டில் 10 லட்சம் ஆமைகள் பூமியில் வாழ்ந்துள்ளன. இன்றைக்கு அவற்றில் 90 சதவீதம் அழிந்துவிட்டன. அதனால் பங்குனி ஆமைகளை அழித்துவரும் உயிரினமாகச் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் வகைப்படுத்தியுள்ளது.[5] பங்குனி ஆமைகளின் வாழ்க்கையை அச்சுறுத்தும் முக்கிய விஷயங்கள் என்றால் அவற்றில் முதலாவதாக இருப்பது மீன்பிடி கருவிகள் ஆகும். இவ்வாமைகளை விற்பனைக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், இவை மீன்பிடி வலைகளில் சிக்குகின்றன அல்லது மீன்பிடி படகுகளின் முன் சுழல்விசிறிகளில் சிக்கிக் காயமடைந்து இறக்கின்றன. இரண்டாவது, கடற்கரை ஓரங்களில் எரியும் மின்விளக்குகள், கடற்கரையில் திரியும் நாய்கள், காகங்கள், முட்டைகளைத் திருடும் மனிதர்கள் ஆகியவற்றாலும் இந்த இனம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.[5] தட்பவெப்ப நிலையே கடல் ஆமைகளின் முட்டைகளில் பொரியும் ஆமைகளின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. இயல்பாக வெப்பமான சூழலில் பெண் ஆமைக் குஞ்சுகளும், வெப்பம் குறைந்த சூழலில் ஆண் ஆமைக் குஞ்சுகளும் உருவாகின்றன. புவி வெப்பமயமாவதால் ஆண் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து, இதனால் பாலினச் சமநிலை குலைந்தும் இந்த அரிய இனம் அழிந்துபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆமை பற்றிய சங்கநூல் செய்திகள்[தொகு]

ஆமை முட்டை கோடு போட்டு ஆடும் வட்டு விளையாட்டு வட்டினைப் போல் உருண்டையாக இருக்கும். சினையுற்ற பெண் ஆமை முட்டையை மணலில் இட்டுப் புதைத்துவிட்டுச் செல்லும். அந்த முட்டைகளை அந்தப் பெண் ஆமையின் கணவனாகிய ஆண் ஆமை முடை குஞ்சாகும் வரையில் பாதுகாக்கும்.[9][10] முட்டையிட்ட ஆமை தன் குஞ்சுகளைப் பேணும்.[11] ஆமைக் குஞ்சு ஒன்றொன்றாகத் தனித்தனியே ஓடிவிடும்.[12] ஆமைக் குஞ்சுகளும் நண்டு போல் வளையில் பதுங்கிக்கொள்ளும்.[13] ஆமை முட்டை சேற்றில் கிடக்கும்.[14] நன்செய் வயலில் உழும்போது ஆமை புரளும் [15]

ஆமை தன் கால் 4, தலை 1, ஆகிய ஐந்தையும் தன் வலிமையான ஓட்டுக்குள் அடக்கிக்கொள்ளும்.[16] ஆமை தடாரிப் பறை போலவும்,[17] கிணை பறை போலவும் [18] இருக்கும். அதன் வயிறு கொக்கைப் பிளந்து வைத்தாற்போல வெண்மையாக இருக்கும்.[19] ஆமையின் கால்கள் வளைந்திருக்கும். அது பொய்கையில் விழுந்த மாம்பழத்தைத் தன் குட்டிகளோடு சேர்ந்து உண்ணும்.[20] "ஆமை வள்ளைக்கொடி படர்ந்த புதரிலும், ஆம்பல் பூத்த குளத்திலும் வாழும்". பனைமரத்துக் கள்ளைக் குடித்துவிட்டுத் தள்ளாடுபவன் போல மெல்ல மெல்ல ஆடி ஆடி நடக்கும்.[21] வெயில் தாங்கமாட்டாத ஆமை குளத்தை நாடும்.[22]

ஆமையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்துச் சமைப்பர்.[23] ஆமையை “நீராடிவிட்டு வா” என்று குளத்தில் விட்டால் திரும்ப வருமா?[24] நெல் அறுக்கும் உழவர் தன் அறுவாளை ஆமை முதுகில் தீட்டிக்கொள்வர்.[25] ஆமை முதுகில் நந்துச் சிப்பிகளை உடைத்து உழவர் உண்பர்.[26] குறளன் ஒருவன் ஆமையைத் தூக்கி நிறுத்தினாற்போல இருந்தானாம். கலித்தொகை 94-31

மேற்கோள்கள்[தொகு]

  1. Fritz Uwe; Peter Havaš (2007). "Checklist of Chelonians of the World". Vertebrate Zoology 57 (2): 169 – 170. ISSN 18640-5755 இம் மூலத்தில் இருந்து 2010-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5v20ztMND?url=http://www.cnah.org/pdf_files/851.pdf. பார்த்த நாள்: 29 May 2012. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-25. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  3. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். பக். s119. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.13:1:3065.tamillex. 
  4. http://www.nmfs.noaa.gov/pr/pdfs/recovery/turtle_oliveridley.pdf
  5. 5.0 5.1 5.2 "ஆமைகள் பிழைக்குமா, அழியுமா?". தி இந்து (தமிழ்). 21 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016.
  6. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். பக். 2617. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:5376.tamillex. 
  7. "120 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன". தினமலர் (புதுச்சேரி). 2012-05-07. http://tamil.yahoo.com/120-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-212700681.html. பார்த்த நாள்: 24 நவம்பர் 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. த.வி.வெங்கடேஸ்வரன் (11 திசம்பர் 2018). "அதிசயத்தை ஆராயும் அறிவியல்: காந்தமுள்ளால் வழிநடத்தப்படும் ஆமை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
  9. நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
    கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
    பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
    கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: (அகநானூறு 160)
  10. ஆமைக் குஞ்சுகள் தன் தந்தை ஆமைமேல் ஏறி உறங்கும் அம்பணத்து அன்ன யாமை ஏறி,
    செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் (ஐங்குறுநூறு 43)
  11. ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் (பொருநராற்றுப்படை 186)
  12. யாமைப் பார்ப்பின் அன்ன காமம், காதலர் கையற விடினே (குறுந்தொகை 152)
  13. நற்றிணை 385
  14. புறநானூறு 176-3,
  15. புறநானூறு 42-14,
  16. திருக்குறள் 126
  17. புறநானூறு 249-4,
  18. அகநானூறு 356-2,
  19. ஐங்குறுநூறு 81
  20. அகநானூறு 117-16,
  21. பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில
    மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
    நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
    பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
    நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு
    தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
    ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் (அகநானூறு 256-2)
  22. அகநானூறு 361-11
  23. நாலடியார் 331-1
  24. பழமொழி 263-3
  25. புறநானூறு 379-5,
  26. நற்றிணை 280
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவ_நிறச்_சிற்றாமை&oldid=3850787" இலிருந்து மீள்விக்கப்பட்டது