உள்ளடக்கத்துக்குச் செல்

முட்தோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முட்தோலி
புதைப்படிவ காலம்:541–0 Ma
கேக்கேலின் அசுடிரோய்டியா வரைபடம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்குகள் (அனிமேலியா)
துணைத்திணை:
பெருந்தொகுதி:
தொகுதி:
முட்தோலிகள்

Klein, 1734

முட்தோலிகள் (Echinoderms) என்பது கடல் வாழ் உயிரினங்களைக் கொண்ட விலங்குத் தொகுதியாகும். இவற்றின் தோலில் முட்கள் காணப்படுவதால் இவ்வுயிரிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை அலையிடை மண்டலம் தொடங்கி ஆழ்கடல் மண்டலம் வரையிலான பெருங்கடலின் பல்வேறுபட்ட வலயங்களில் வசிக்கின்றன.

இத்தொகுதியில் ஏறத்தாழ 7000 இனங்கள் உயிர்வாழ்கின்றன. எண்ணிக்கையில் இரண்டாவதாக, முதுகுநாணிகளை அடுத்து டியூட்டெரோஸ்டோம்கள் (Deuterostomia) பெருந்தொகுதிக்குள் அடங்கும் உயிரினத் தொகுதி ஆகும். இவை நன்னீரிலோ நிலப்பகுதிகளிலோ வசிப்பது இல்லை. கிரேக்க ἐχινοδέρματα (ἐχινός- முட்கள் , δέρμα- தோல்; முள்ளை உடைய தோல்) எனும் சொல்லில் இருந்து சொல் பிறந்தது. (காரணம்- இவற்றின் தோலில் முட்கள் போன்ற கட்டமைப்புக்கள் காணப்படுகின்றமை).

முட்தோலிகள் விதவிதமான நிறங்களைக் கொண்டவை.

உடற்கூற்றியலும் உடற்றொழிலியலும்[தொகு]

முட்தோலிகள் முப்படையுள்ள டியூட்டெரோஸ்டோம் முளைய விருத்தியுடைய விலங்குகளின் கூட்டமாகும். இவற்றில் மெய்யான, நன்கு விருத்தியடைந்த உடற்குழி உள்ளது. இவை தமது நிறையுடலி நிலையில் ஐயாரைச் சமச்சீரைக் கொண்டிருந்தாலும், இவை இரு பக்கச் சமச்சீரான மூதாதையிரிலிருந்து கூர்ப்படைந்தவையாகும். இதனை இவற்றின் இருபக்கச் சமச்சீரான துவிபுளூரா (Bipinnaria) குடம்பி உறுதிப்படுத்துகின்றது. அனேகமானவற்றில் முழுமையான உணவுக் கால்வாய் உள்ளது. பல ஐந்து புயங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் தலை காணப்படுவதில்லை. கழிவகற்றல் தொகுதி, சுற்றோட்டத் தொகுதி என்பனவும் காணப்படுவதில்லை. எனவே அனுசேபக் கழிவுகள் பரவல் முறையிலேயே உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. பிரதான கழிவுப் பொருளாக அமோனியா உள்ளது. முட்தோலிகளில் விசேடமாக பாய்பொருள் நிரப்பப்பட்ட திரவக் கலன் தொகுதி சுற்றோட்டத்தொகுதியாகச் செயற்படுகின்றது. முட்தோலிகளில் சிலவற்றில் (உ-ம்: கடல் முள்ளி) புயங்கள் எதுவும் காணப்படுவதில்லை. அசைவு மற்றும் உணவூட்டலுக்காக குழாய்ப் பாதம் என்னும் கட்டமைப்பு விருத்தியடைந்திருக்கும். அனைத்து முட்தோலிகளிலும் முதுகுநாணிகள் போன்று இடைமுதலுருப்படை உற்பத்திக்குரிய மெய்யான அகவன்கூடு விருத்தியடைந்துள்ளது. இவ்வன்கூடு கல்சியம் காபனேற்றால் (சுண்ணாம்பு) ஆன சிற்றென்புகளைக் கொண்டுள்ளது. முட்தோலிகளில் சுவாசம் பூக்கள் மூலம் பிரதானமாக நடைபெறுகின்றது. இவற்றில் அவ்வளவாக விருத்தியடையாத நரம்புத் தொகுதியே காணப்படுகின்றது. வாயைச் சூழ நரம்பு வளையமும் அவ்வளையத்திலிருந்து ஒவ்வொரு புயங்களுக்கும் எளும் நரம்பு நாண்களும், மேற்றோலருகே உள்ள நரம்பு வலையும் இதன் எளிய நரம்புத் தொகுதியை ஆக்குகின்றன. இவை ஒப்பீட்டளவில் எளிய உடலமைப்பைக் கொண்டிருந்தாலும், இவையே Hemi chordataக்கு அடுத்ததாக முதுகு நாணிக் கணத்துக்குக் கூர்ப்பில் நெருக்கமான விலங்குக் கணமாகும். முட்தோலிகளில் எளிய புன்னங்கங்களான கட்புள்ளி, நிலைச் சிறைப்பை என்பன விருத்தியடைந்துள்ளன.

வகைப்படுத்தல்[தொகு]

இத்தொகுதியுள் அடங்கும் இரண்டு பரிச்சயமான துணைத்தொகுதிகள்:

1) அசையக்கூடிய எலேயுதேரோசோவா (Eleutherozoa)

  • அஸ்டிரோய்டியா(Asteroidea): (நட்சத்திரமீன்),
  • ஒபியுரோய்டியா(Ophiuroidea): நொறுங்கு நட்சத்திரம் அல்லது ஒடி நட்சத்திர மீன் ( brittle stars),
  • எக்கைனோய்டியா(Echinoidea): கடல் முள்ளெலி(sea urchins), மணற்காசு (sand dollars),
  • ஹொலோதுரோய்டியா (Holothuroidea): கடல் வெள்ளரி (sea cucumbers)

2) அசையாத பெல்மட்டாசோவா (Pelmatazoa) - இவை கடலில் ஏதாவது பாறைகளை அல்லது பொருட்களை ஊடுருவிப் பற்றிக் கொள்ளும், இதற்கென இவற்றிற்குத் தண்டு போன்றதொரு அமைப்பு உண்டு.

  • கிரினோய்ட்டுக்கள் (crinoids) அல்லது கடல் அல்லி,
  • அழிந்துவிட்ட பராகிரினோய்ட்டுக்கள்

இவற்றுள் இறகு விண்மீன்கள் ( feather stars) எனப் பெயர் கொண்ட சில வகை கடல் அல்லி இனங்கள் அசையக்கூடியவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்தோலி&oldid=3033208" இலிருந்து மீள்விக்கப்பட்டது