பஞ்சுயிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சுயிரி
புதைப்படிவ காலம்:Ediacaran–recent
SpongeColorCorrect.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: புழையுடலி
கிரான்ட் மற்றும் டொட், 1836


பஞ்சுயிரிகள் என்றோ பஞ்சுடலிகள் (Sponges) என்றோ அழைக்கப்படும் உயிர்கள் விலங்கினத்தைச் சார்ந்த நீர்வாழ் உயிரினங்களாகும். இவை புழையுடலிகள் (Porifera) என்னும் கணம் அல்லது தொகுதி விலங்கு வகைப்பாட்டுக்குள் அடங்கும். இத்தொகுதி உறுப்பினர்களின் உடலில் பல புழைகள் காணப்படுவதால் இவை புழையுடலிகள் என அழைக்கப்படுகின்றன. இப்புழையுடலிகளே முதலில் தோன்றிய பலக்கல (ஆங்கிலம்:multicellular) உயிர்கள் எனவும் அறியப்படுகிறது[சான்று தேவை].

எல்லாப் பஞ்சுயிரிகளும் நீரில் வாழ்வனவாகும். இவை நீர் நிலைகளில் உள்ள தரைப்பகுதிகளில் ஒட்டி வாழும் உயிர்களாகும். இப்பஞ்சுயிரிகளில் குறைந்தது 5000 வகை சிற்றினங்கள் உலகம் முழுதும் பரவிக்கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை கடலில் வாழ்பவை (கடல் பஞ்சுயிரி), ஆயினும் 150 வகை நன்னீர்ப்பஞ்சுயிரிகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பஞ்சுடலிகள் மிக எளிய உடற்கட்டமைப்புகளைக் கொண்ட பலக்கல உயிரியாகும். இவற்றின் உடல் சமச்சீரற்ற, வரையறுக்க இயலா அமைப்பைக் கொண்டு காணப்படுகின்றன. கலங்கள் ஒருங்கில்லாமலும், கல வேறுபாடு முற்றிலும் மாறுபட்டும் காணப்படுகின்றன. இதில் உள்ள பெரும்பாலான கலங்கள் இதில் இடம்பெற்றிருக்கும் சாறுகளில் உழன்ற நிலையிலும் காட்சியளிக்கின்றன. இதில் இருந்து பிரிக்கப்பட்ட சிலக் கலங்களைக்கொண்டு ஒரு தனி பஞ்சுடலியே வளர முடியும்.

பண்புகள்[தொகு]

இவை அரித்துண்ணிகளாகும் (Filter feeders). இவை நகராமல் ஒரு நிலையான இடத்தில் தமது ஆதிக்கத்தையும் தமக்கான சூழலையும் உருவாக்கி வாழக்கூடியவை. இவற்றின் உடல் ஈரடுக்குகளால் ஆனது. உடலின் வெளிப்புறத்தில் உள்ள பகுதியை புறப்படை என்றும் உட்புற பகுதியை அகப்படை என்றும் அழைக்கிறோம். புறப்படையையும் அகப்படையையும் இணைக்கும் வழவழப்புள்ள பகுதியை பசைக்கலப்படலம் என விளிக்கிறோம். இவற்றின் உடல்களில் இருபாலினமும் ஒருங்கேக் காணப்படுவதால் இவை ஒரு அழிதூவாகும்.

அகப்படையில் உள்ள கலங்களில் நீண்ட உணர் இழைகளை உடைய கலங்கள், பட்டைக்கலங்கள் (காலர்செல்கள்/கோயனோசைட்ச் - Choanocytes) என அழைக்கப்படுகின்றன. உடலில் பல சிறுசிறுத் துளைகளும் அவ்வுடலின் நடுவில் உள்ள பெருய இடைவெளியாகிய புழையுடலி உட்குழி திறந்து மூடும் தன்மையுடையது. இதை வெளிப்புறத்தே திறக்க ஆசுகுலம் என்னும் பகுதி உதவுகிறது. அகச்சட்டகத்திற்குள் சுண்ணத்தால் (கால்சியம்) ஆன நுண்முட்கள் காணப்படுகின்றன. இவற்றில் கழிவுகள் நீக்கம், சுவாசம் ஆகிய செயல்கள் ஊடுருவல் முறைப்படி நிகழ்கின்றன. சுண்ணாம்புக்களால் ஆன முட்கள் (Spicules) போன்ற அமைப்பே இதன் கல ஒருங்கிணைப்பிற்கும் வடிவத்திற்கும் பெரிதும் துணைநிற்கின்றன.

வாழ்விடம்[தொகு]

இவை நீர்நிலைகளில் உள்ள தரை மற்றும் பாறைகளில் ஒட்டி வாழும் தன்மையுடையன. இவை தமது வாழ்விடத்தை உணவு மற்றும் பாதுகாப்பிற்கு தகுந்தாற்போல் ஏற்ற இடங்களில் காணப்படும் பல வகை திடப்பொருட்களில் ஒட்டி வாழ்கின்றன. இவற்றால் இடப்பெயர்ச்சி செய்ய இயலாது.

மேற்கோள்[தொகு]

  • Janet Moore, (2001), An introduction to the invertebrates, 2nd edition, Cambridge University Press, 23-31
  • http://www.earthlife.net/inverts/porifera.html
  • Porterfield, W. M. (July 1955). "Loofah — The sponge gourd". Economic Botany 9 (3): 211–223. doi:10.1007/BF02859814
  • Bergquist, P. R., (1998). "Porifera". In Anderson, D.T.,. Invertebrate Zoology. Oxford University Press. pp. 10–27. ISBN 0195513681.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சுயிரி&oldid=2697624" இருந்து மீள்விக்கப்பட்டது