காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில்
Appearance
காஞ்சிபுரம் நல்லகம்பம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் நல்லகம்பம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நல்லகம்பர், (சிவலிங்கமூர்த்தம்). |
காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் (நல்லகம்பம்) என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், உருத்திரரால் வழிபடப்பட்ட மூர்த்தியாக உள்ள. இக்கோயில் குறிப்புகள்; காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
வழிபட்டோர்
[தொகு]- உருத்திரன்.
- காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் முதல் பிரகாரத்தில் ஏகாம்பரநாதருக்கு வலப்பக்கம் வெள்ளக்கம்பர், இடப்பக்கம் கள்ளக்கம்பர், ஈசானத்தில் நல்லகம்பர், என வீற்றிருக்கிறார்கள்.
- சிவபெருமான் கச்சி மயானத்தின்கண் சைவ வேள்வி செய்து முடித்தபின்னர் சிவ சகி லலிதாதேவி என்னும் திருநாமம் கொண்டு வெளிப்பட்டு யாவும் படைக்கத் தொடங்கியபொழுது அவரது மூக்கண்ணிலும் தோன்றிய மும்மூர்த்திகளுள் கள்ளக்கம்பரும் ஒருவர்.
- பிரமனால் பூசிக்கப்பட்டவர் வெள்ளக்கம்பர்.
- திருமாலால் பூசிக்கப்பட்டவர் கள்ளக்கம்பர்.
- ருத்திரரால் பூசிக்கப்பட்டவர் நல்ல கம்பர்.[2]
தல விளக்கம்
[தொகு]- வெள்ளக் கம்பர் : பிரமன் வெள்ளை (தூய) உள்ளத்தோடும் பூசனை புரிந்தமையின், இப்பெயரைத் தாங்கினார். பிறவியாம் அழுக்குடம்பு போய்த் தூயவராவர். இவர் மூல இலிங்கத்திற்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றார். (திருவே. 86)
- கள்ளக் கம்பர்: திருமால் உயிர்களை மயக்குறுத்த வழிபட்டமையின் அப்பெயர் ஏற்றனர். இவரை வணங்குவோர் மாலாரின் மயக்குட்படார். அம்மையார் வழிபட்ட மூலஇலிங்கத்திற்கு வடக்கில் உள்ளது இத்தலம். (திருவே. 87)
- நல்ல கம்பர்: உருத்திரர் வழிபட்டு போற்ற ஒன்றி நின்றனர். அவரை அன்பொடும் வழிபடுவோர் ஒன்றி ஒன்றா நிலையை எய்துவர். திருவேகம்பர் திருமுன்பு நிலாத்துண்டப் பெருமாளுக்கு அயலே மேற்கு நோக்கி வீற்றிருப்பர். (திருவே. 88)[3]
தல பதிகம்
[தொகு]- பாடல்: (1) (நல்ல கம்பர்)
- உருத்திரன் நலத்தகும் ஒருமை பூண்டுயர்
- கருத்தொடும் வழிபடு நல்ல கம்பனை
- அருத்தியின் வழிபடும் அடியர் எம்பிரான்
- மருத்தபூந் திருவடிக் கலப்பின் மன்னுவார்.
- பொழிப்புரை: (1)
- உருத்திரர் ஒன்றுபடும் நல்ல நினைவுடன் வழிபடும் நல்ல கம்பரைப்
- பேரன்பினால் வழிபடும் அடியவர் எம்முடைய பெருமானார் தம் மணம்
- கமழும் மலரடிக் கலப்பினாலே எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
- பாடல்: (2)
- கருதரு நல்லனே கள்ளன் வெள்ளனேர்
- தருதிரு வேகம்பன் என்று தன்னொடு
- மருமலர்க் கவிழ்இணர் மாவின்! நீழல்வாழ்
- ஒருவனே நால்வகை உருவம் மேயினான்.
- பொழிப்புரை: (2)
- மணந்தங்கிய மலர்களைக் கொண்ட மாவடியில் எழுந்தருளியுள்ள
- ஒருவரே சிந்தித்தற்கரிய நல்ல கம்பர், கள்ளக் கம்பர், வெள்ளக் கம்பர்,
- வெளிப்படுகின்ற திருவேகம்பர் என நால்வகைத் திருவுருத் தாங்கினர்.
- பாடல்: (3)
- தென்னுயர் கச்சியின் அகில சித்தியும்
- மன்னுயிர்க் குதவிய மகிழ்ந்து நம்பிரான்
- அன்னணம் பூசைகொண்ட டருளி மூவர்க்கு
- முன்னிய வரங்களும் முறையின் நல்கினான்.
- பொழிப்புரை: (3)
- அழகுமிகும் காஞ்சியில் எல்லா வேண்டுகோளையும் பல்லுயிர்க்கும்
- உதவுதற் பொருட்டு நமது பெருமானார் பூசனையை ஏற்றுக்கொண்டு
- மூவர்க்கும் முறையே வரங்களை வழங்கினர்.[4]
அமைவிடம்
[தொகு]இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள திருவேகம்பத்தில் உள்பிரகாரத்தில் நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதிக்கு அருகில் சற்று உள்ளடங்கிய நிலையில் இச்சிவலிங்க மூர்த்தம் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]
போக்குவரத்து
[தொகு]- வான்வழி:' வானூர்தி சேவை இல்லை; உலங்கு வானூர்தி மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.
- இரும்புத் தடம்: தொடருந்து மூலமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து மூலமாகவும், தானியுந்து மூலமாகவும் சென்றடையலாம்.
- சாலை வழி: பேருந்திலோ அல்லது சீருந்துலோ, காஞ்சி வந்தடைய நான்கு திசையில் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர் வழியாகவும் (75 கிலோமீட்டர்); தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து வாலாசாபாத் வழியாகவும் (40 கிலோமீட்டர்); வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து வந்தவாசி வழியாகவும் (80 கிலோமீட்டர்); தென்மேற்கில், பெங்களுரிலிருந்து வேலூர் வழியாகவும் (275 கிலோமீட்டர்) இக்கோயில் நகரை வந்தடையலாம்.[6]
இவற்றையும் காண்க
[தொகு]- காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் (வெள்ளக்கம்பம்) காஞ்சிபுரம் மாவட்டம்
- காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் (கள்ளக்கம்பம்) காஞ்சிபுரம் மாவட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 60. திருேவகம்பப்படலம் (1902-2022) | 1989 நல்ல கம்பர்
- ↑ "palsuvai.net காஞ்சிபுர சிவலிங்கங்கள்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-10.
- ↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | பக்கம்: 832.
- ↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருவேகம்பப் படலம் | பாடல் 88 / 89 / 90 | பக்கம்: 584 - 585
- ↑ dinaithal.com | நல்லகம்பம்.
- ↑ tripadvisor.in 15 temples in Kanchipuram