பஞ்சபூதத் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பஞ்சபூதத் தலங்கள் என்பவை நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பெறுகின்றன. இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ அவற்றுள் சிலவற்றைக் கொண்டோ உருவாகி இருக்கும்.

பஞ்சபூதம் பெயர்க்காரணம்[தொகு]

பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக பஞ்சலோகம் என்பது 5 உலோகங்களின் கலவை எனலாம். இது போல முக்கியமான 5 கூறுகளினை 5 பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்பர். ஒவ்வொரு சிவத்தலமும் ஒரு வரலாறு காரணமாகவும், ஏதேனும் ஒரு தன்மையினாலும் அல்லது இயற்கையான நிலவரத்தினாலும் இப்பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.

சிவத்தலங்கள்[தொகு]

பஞ்சபூதங்களுக்கு உரிய 5 சிவத்தலங்கள் பின்வருமாறு:

படிமம் கோவில் பெயர் குறிக்கும் பூதம் லிங்கத்தின் பெயர் இடம்
Ekam.jpg காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் [1] நிலம் பிருத்வி லிங்கம்[2] காஞ்சிபுரம்
Tiruvannamalai004.jpg
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் [1][3] நெருப்பு அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம்[4] திருவண்ணாமலை
Tiruvannaikkaval4.jpg திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்[1] நீர் அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம் திருச்சி
Eastgopuram2.jpg சிதம்பரம் நடராசர் கோயில்[1] ஆகாயம் ஆகாச லிங்கம்[5] சிதம்பரம்
SrikalahastiGaligopuram.jpg திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்[1][6] காற்று வாயு லிங்கம் திருக்காளத்தி

[7] Pancha Bhoota stalam Map

ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும்[தொகு]

 • உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, நீர், நெருப்பு.
 • உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

பஞ்ச பூத தலங்களின் சிறப்புக்கள்[தொகு]

பஞ்சபூத லிங்கங்கள்

காஞ்சிபுரம்[தொகு]

காஞ்சிபுரத்தைப் பாடியோர்கள் / நெருங்கிய தொடர்புடையவர்கள்: நாயன்மார்கள்:

அப்பர், சுந்தரர் , சம்பந்தர், மாணிக்கவாசகர், சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

ஆழ்வார்கள்:

திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார்,

அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமனுஜர்

 • காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களிலும் பரிபாடல், மணிமேகலைக் காப்பியத்திலும் உள்ளது.
 • இப்பகுதி தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்டது.
 • "நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி.
 • சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.
 • காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.
 • தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பைப் பெற்றது இந்நகரம்.
 • இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறார்.

திருவானைக்கா, திருச்சி[தொகு]

 • திருவானைக்கா என்ற பெரிய சிவன் கோவில் நகரம் திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது, இதனை திருஆனைக்கா, திருவானைக்காவல், திருவானைக்கோவில் என்றும் அழைப்பர். காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட தீவுப்பகுதியில், திருவரங்கத்திற்கு அருகே அமைந்துள்ளது.
 • திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம் - நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.
 • இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புலிங்கம் என வழங்கப்படுகிறது.
 • அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இது பாடல் பெற்ற தலம் ஆகும்
 • திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம்: உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
 • புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒருவர் யானையாகவும், மற்றொருவர் சிலந்தியாகவும் பிறந்தனர்.
சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையுள் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.
இவைகளின் சிவபக்திக்கு மெச்சி, சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
 • இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.
 • மற்றொரு சன்னிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிபட்டதால்தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனான்.
 • காணக்கிடைக்காத பல அரிய சிற்பங்கள் இத்தலத்தில் உள்ளன: :மூன்று கால் முனிவர் சிலை.
ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சந்ததிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற தத்துவத்தையும் விளக்குகிறது.
நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.
 • பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர். இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

திருவண்ணாமலை[தொகு]

 • திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 • இது பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும். இது நெருப்பிற்கான தலம் ஆகும்.
 • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடப் பெற்ற தலமாகும்.
 • ரமணர் தவமிருந்த தலம் இதுவாகும்.
 • சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.
 • சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிடுவார்கள்.
"இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
 • ”ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்” --- பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதாகும்.
 • சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை ‘வைகுண்ட வாசல்’ வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.
 • ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள்.
 • மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர்.
 • அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால், இவர் ‘கம்பத்திளையனார்’ (கம்பம் - தூண், இளையனார்-முருகன்) என்று பெயர் பெற்றார்.
 • இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்று பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாகர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளினார். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் மிகவும் விசேஷம்.
 • பிரம்ம லிங்கம், யோக நந்தி, பாதாள லிங்கம், கிளி கோபுரம், அருணகிரி யோகேசர் ஆகியவை முக்கியமாக தரிசனம் செய்ய வேண்டியவையாகும்.
 • ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர்.

திருக்காளத்தி[தொகு]

 • இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பதியில் இருந்து 38 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
 • திருக்காளத்தி-காளஹஸ்தீஸ்வரர் கோயில் பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலமாக விளங்குகிறது.
 • இக்கோவில் சம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.
 • கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவர் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.
 • இக்கோவிலில் ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
 • சீ-சிலந்தி;
காளத்தி என்பது காளம்-பாம்பு;
அத்தி-யானை
சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பூசித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது.
இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியைக் கூர்ந்து கவனித்தால், கீழ்ப் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம்.
 • இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
 • இத்தலம் கண்ணப்பர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.
 • இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களிலும், பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும், 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது.
 • 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவில் இராசகோபுரம், 2010 ஆம் ஆண்டு, மே மாதம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. அதே இடத்தில் இராசகோபுரம் எழுப்ப ஆந்திர அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளது.[8]

சிதம்பரம்[தொகு]

 • சிதம்பரம் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர். இது ஆலயநகர், நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
 • திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.
 • சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராசர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயம்(இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்) மட்டுமல்லாது, வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாளாகப், புண்டரீகவல்லித் தாயாருடன் திருச்சித்திரக்கூடத்தில் வீற்றிருக்கிறார்.
 • ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர்.
 • நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடைய இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும்.
 • மூலவர் சிலை இருக்கும் இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டு கனக சபை என்ற பெயர் பெற்றது.
 • சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதால் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளது.
 • பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பரம் ஆலயத்தில் பூசித்து வரப்படுகிறது.
 • இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சிற்பக்கலைக்கும், கட்டடக்கலைக்கும் பெயர்பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.
 • இங்கு, நடராசர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால், ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.
 • சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்குமளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை.
 • நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.
 • சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணமாக வழங்குகின்றனர்.
 • பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றிப் பாடப்பெற்றுள்ளது.
 • சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்குப் பணி புரிந்துள்ளனர், சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் ஆலயப்பணிகள் பல புரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.

இவற்றையும் காணவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 Knapp 2005, p. 121
 2. Tirtha: holy pilgrim centres of the Hindus : saptapuri & chaar dhaam, Subhadra Sen Gupta, p. 66
 3. Gupta 2006, p. 153
 4. Blabatsky 1981, p. 176
 5. M.K.V 2007, p. 37
 6. Bajwa 2007, p. 271
 7. "Shaivam.org".
 8. [dinamani.com/india/article812920.ece ஸ்ரீ காளஹஸ்தியில் புதிய ராஜகோபுரம் எப்போது?]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சபூதத்_தலங்கள்&oldid=3290045" இருந்து மீள்விக்கப்பட்டது