சிவ விதப்பொருமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவ விதப்பொருமை (சிவ விசிட்டாத்துவிதம்) அல்லது சிவ அல்லிருமை (சிவாத்துவிதம்) என்பது, தென்னகத்தில் நிலவி வருகின்ற சைவ மெய்யியல்களில் ஒன்று ஆகும். பெரும்பாலும் கர்நாடகா, ஆந்திராப் பகுதிகளில் வழக்கிலுள்ள இம்மெய்யியல், சிரௌத்த சைவர்களின் மெய்யியற்கோட்பாடாகத் திகழ்கின்றது.[1]

வரலாறு[தொகு]

இந்திய மெய்யியல்களைப் பொறுத்தவரை, வேத முதன்மையை ஏற்றுக்கொண்ட எல்லாக் கிளைநெறிகளுமே விரும்பியோ விரும்பாமலோ வேதாந்தம் சார்ந்து கருத்துத்தளத்தில் வைப்பதற்கான எல்லாத் தகுதிகளும் கொண்டிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் பெரும்பாலும் வைணவம் வெற்றிபெற, வேத முதன்மையுடன் ஓரளவு முரண்படும் சிவாகமங்களையும், சாக்த தந்திரங்களையும் முறையே பின்பற்றிய சைவம், சாக்தம் என்பவற்றால் இத்தளத்துக்கு இறங்கிவருவது கடினமான ஒன்றாகவே இருந்தது.[2]

கி.பி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படும் நீலகண்டரும் அபிநவகுப்தரும் முறையே பிரஸ்தானத் திரயங்களில் முக்கியமான பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்பவற்றுக்கு சைவக்கண்ணோட்டத்தில் உரையெழுதியதும், இந்தத் தடை தகர்ந்து போனது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எஞ்சிய பிரஸ்தானமான உபநிடதங்கள் கூறும் சிவபரத்துவத்தை, "சுருதி சூக்தி மாலை"யில் அரதத்தர் பாடினார். இவர்கள் வழியே வேதாந்தத் தளத்தில் முன்னிறுத்தப்பட்ட சைவம் சிவாத்துவிதம் என்றும், சிவ விசிட்டாத்துவிதம் என்றும் கூறப்பட்டது.[1] அப்பைய தீட்சிதர் (16ஆம் நூற்றாண்டு) எழுதிய பல நூல்கள், சிவ விதப்பொருமை சார்ந்ததாகவே எழுந்தன. தீவிர சிவனடியார்களும், கட்டுக்கோப்பான வைதிகர்களுமான சிரௌத்த சித்தாந்திகளுக்குரிய கோட்பாடாக, சிவாத்துவிதம் பின்னாளில் பல்கிப் பரந்தது.

கோட்பாடு[தொகு]

சிவ விதப்பொருமைவாதிகளில் முக்கியமானவரான அப்பையரின் சமாதி, திருவாலங்காடு.

நீலகண்டரின் கருத்துப்படி, புடவி படைக்கப்பட்டது, சிவனின் அலகிலா ஆடலின் ஓர் நிலையிலே ஆகும். படைப்பின் முதற்காரணியும் நிமித்த காரணியும் அவனே. ஈசனே இப்புடவியாகத் தோற்றமளிக்கின்றான். அத்தோற்றமே அவனது திருவருட்சக்தி ஆகும். புடவியால் பாதிக்கப்படாதவனாக அதையும் தாண்டியவனாக இறைவன் விளங்குகின்றான். கோடிசூரியர்களின் ஒளியுடன் திகழும் மகாகைலாசத்தில் வீற்றிருக்கும் சிவபிரான், உயிர்களுக்கு அங்கேயே வீடுபேறு நல்குகின்றான். பற்றின்மை, இறைநம்பிக்கை என்பவற்றின் மூலமே ஓர் உயிர் வீடுபேறு அடையமுடியும். கன்மத்தால் அன்றி இறைவனின் அருளாலேயே முக்தி கிடைக்கப்பெறமுடியும். வீடுபேறடைந்த உயிர்கள் சிவமாம் தன்மையில் திளைத்திருக்கும். அவற்றால் இறைவன் போல் படைப்பில் ஈடுபடமுடியாது என்பதொன்றே அவற்றுக்கும் இறைவனுக்குமான வேறுபாடு.[3]

எந்தவொரு உயிருக்கும் தன் விருப்பம்போல் செயற்பட உரிமையுண்டு. எனினும் உயிர்களின் கன்மத்தைப் பொறுத்து அச்செயலுக்கான பலாபலன்களை சிவமே வழங்குகின்றது. "இச்சை, கிரியை, ஞானம் எனும் முச்சக்திகள் கொண்டு, மும்மூர்த்திகள் உள்ளடங்கலான புடவியாக பரம்பொருள் பரிணமிக்கின்றது" என்று தன் பிரம சூத்திர பாடியத்தின் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார் நீலகண்டர்.[4]

அப்பையர்[தொகு]

முகலாயர்களின் பாதிப்புக்குப் பின்னான விஜயநகரப் பேரரசு உள்ளிட்ட பிற்காலப் பேரரசுகள் எல்லாம் வைணவத்துக்கே முன்னிலை கொடுத்த நிலையில், தென்னகத்தில் சைவத்தின் புத்துயிர்ப்புக்கு வழிவகுத்தவர்களில் முக்கியமான மகத்தான ஆளுமையாக அப்பையரைக் குறிப்பிட முடியும்.[5] எல்லா இந்து மெய்யியல்களையும் கசடறக் கற்ற அப்பையர், அவை மீது காழ்ப்பின்றி அவை தொடர்பான பல நூல்களை யாத்துள்ளார். எனினும் இறுதிவரை அவர் சிவனடியாராகவே திகழ்ந்ததுடன், சைவத்துக்கு முன்னுரிமைபெறும் செயல்களையும் செய்யத்தவறவில்லை. சைவத்திற்கே இயல்பான பரந்த மனப்பான்மையுடன் செயற்பட்ட அப்பையரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத சிலர், அவர் எவ்விதக் கோட்பாடையும் சார்ந்திருக்கவில்லை என வாதாடுவர்.[4] அக்கருத்து பொய்யென்பதற்கு அவரது இறுதிநூலான ஆத்மார்ப்பண துதி முதற்கொண்டு எண்ணிறந்த சான்றுகள் உண்டு. அரதத்தர், ஸ்ரீகண்டர் முதலானோர் வளர்த்தெடுத்த சிவ விதப்பொருமைக்கு சரியான இறுதி வடிவம் கொடுத்தவர் அப்பையர் என்பதற்கு அவரது சிவ விதப்பொருமை நூல்களான நயமணிமாலையும் சிவார்க்கமணிதீபிகையும் ஆதாரங்களாகின்றன. சிவார்க்கமணிதீபிகை, ஸ்ரீகண்டரின் பிரம்மசூத்திர பாடியத்துக்கு எழுதப்பட்ட விளக்கவுரை ஆகும்.

ஏனைய மெய்யியல்கள்[தொகு]

சித்தாந்த சைவர்கள் அப்பையரையோ அரதத்தரையோ அவ்வளவாகக் கொண்டாடாதவர்கள் எனும்போதும், அவர்களது பிரமசூத்திர உரைக்கும், சிவ விதப்பொருமை நூல்களுக்கும் சமீபகாலமாக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்.[6][7] சைவ சித்தாந்தம், இராமனுசரின் வைணவ சம்பிரதாயமான விதப்பொருமை, சிவ விதப்பொருமை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.[4]

உசாத்துணைகள்[தொகு]

  1. 1.0 1.1 Vedic Hermeneutics. K. Satchidananda Murty. 1993. பக். 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120811054. https://books.google.lk/books?isbn=8120811054. 
  2. Keshav Sreenivasan (24 யனவரி 2016). "To which shaivite sect do the shaivites of UP Bihar and Chhattisgarh belong?". பார்த்த நாள் 4 ஆகத்து 2016.
  3. Conjeeveram Hayavadana Rao (1936). The Śrīkara Bhāshya: Introduction. பக். 37. https://books.google.lk/books?isbn=8188643017. 
  4. 4.0 4.1 4.2 "Shiva Advaita". மூல முகவரியிலிருந்து 2011-06-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 ஆகத்து 2016.
  5. The history of the Vijayanagar Empire - Volume 2. M. H. Rāma Sharma, ‎Mysore Hatti Gopal. 1978. பக். 93. https://books.google.lk/books?id=ow5DAAAAYAAJ. 
  6. Collected Lectures on Saiva Siddhanta: 1946-1954. 1965. பக். 1. https://books.google.lk/books?id=whIYAAAAIAAJ. 
  7. S.Sadasiva Mudaliyar (23 ஏப்ரல் 1931). "NOTES ON SAIVA SIDDHANTAM". Smt.Sankara Rameshwari. பார்த்த நாள் 4 ஆகத்து 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_விதப்பொருமை&oldid=3244746" இருந்து மீள்விக்கப்பட்டது