செம்பெருந்தாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்பெருந்தாயம் அல்லது சம்பிரதாயம் (IAST sampradāya) என்பது இந்து சமயங்களின் நெறிவழக்கில், "மரபு" அல்லது "நெறிக்களின் தொகுப்பு" எனப்பொருள்படும் சொல்லாடல் ஆகும். ஒரு குரு, அவர் வழிவந்த சீடர்கள், அவர்கள் கடைப்பிடித்த மற்றும் வழிவழியாகப் போதித்த நெறிமுறைகள் என்பவற்றின் தொகுப்பாக, செம்பெருந்தாயங்கள் ஒரு சமய அடையாளப்படுத்துகையில் உதவுகின்றன.[1]

மீள்வரைவிலக்கணப்படுத்தப்படும், மீளாய்வு செய்யப்படும், தத்துவம்சார் தரிசனங்கள் என்பவற்றைத் தத்தம் பின்தொடருநர்களுக்கு செம்பெருந்தாயங்கள் எடுத்துச் செல்கின்றன. பழமையைப் பேணும் போதும், கிளைநெறிகளின் அடிப்படையில் நோக்கும் போது, ஒரு செம்பெருந்தாயத்தில் ஏற்படும் பிரிவினை, இன்னொரு புதிய செம்பெருந்தாயத்தை உருவாக்க முடியும்.[1]

வழக்கங்கள்[தொகு]

குறித்த ஒரு செம்பெருந்தாயத்தின் குருமார்களின் தொடர்ச்சியில் (குரு பரம்பரை) இன்று விளங்கும் ஒரு குருதேவரிடம் ஒருவர் தீட்சை பெற்றுக்கொள்ளும் போது, அவர் அச்செம்பெருந்தாயத்துக்கு உரியவர் ஆகின்றார். பிறப்பால் ஒரு மானுடன் எந்தச் செம்பெருந்தாயத்துக்கும் உரியவன் அல்லன்.[1]

பத்ம புராணமானது செம்பெருந்தாயம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

"செம்பெருந்தாயங்களில் பெறப்படாத நிறைமொழிகள் பயனற்றவை" (சம்ப்ரதாயவிஹின யே மந்த்ரஸ் தே நிஸ்பல மத:) 
- பத்ம புராணம்

தகாதமுறையில் பிறந்த ஒருவனை சமூகம் தன்னுடன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.. சமயங்களைப் பொறுத்த வரையும் அப்படியே. ஏற்றுக்கொள்ளப்பட்ட செம்பெருந்தாயத்தில் வந்தவராகத் தன் குருதேவரை நிலைநாட்டமுடியாதவிடத்து, ஒரு இந்துச் செம்பெருந்தாயத்தின் நம்பகம் கேள்விக்குள்ளாவதுடன், அங்கீகாரமும் அதற்குக் கிடைக்காது.[2]

எனினும், ஏற்றுக்கொள்ளப்பட்ட செம்பெருந்தாயத்தில் உள்ளீர்க்கப்பட முடியாத குருதேவர்களும் உண்டு. இரமண மகரிஷி[3][web 1] மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. சங்கர செம்பெருந்தாயத்தில் வந்த சிருங்கேரி குருவொருவர், இரமண மகரிஷிக்குத் தீட்சை அளிக்கத் தயாராக இருந்தும், அவர் அதை மறுத்ததாகச் சொல்லப்படுகின்றது.[3] இரமணர் முதல், தற்போதைய சத்திய சாயி பாபா முதலான புத்திந்து அமைப்பு நிறுவுநர்கள் யாவரும் செம்பெருந்தாயத்தில் அடங்காத போதும், சமய சமூகப்பணிகளை அவர்களின் பின்பற்றுநர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

சிவ செம்பெருந்தாயங்கள்[தொகு]

பன்னிரு சைவப்பிரிவுகளை, பதினான்காம் நூற்றாண்டுச் சைவ சித்தாந்த நூல்கள் வகைப்படுத்துகின்றன. இவற்றில் இக்காலத்தில் எஞ்சியிருக்கும் நெறிகளை, இன்றைய சிவ செம்பெருந்தாயங்களாகக் கொள்ள முடியும். பிரதானமான மூன்று சிவ செம்பெருந்தாயங்கள் தம்மை "திருக்கயிலாய பரம்பரை" என்று கூறிக்கொள்கின்றன. சனகாதி முனிவர்கள் நால்வர், திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோகமுனி ஆகிய எண்மருக்கும் நந்தி தேவர் சிவ செம்பெருந்தாயத்தை உபதேசித்ததாகவும், அவர்கள் உலகெங்கும் சென்று சைவ நன்னெறியைப் பரம்பச் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது.[4] அமெரிக்காவின் ஹவாய்த் தீவில் இயங்கும் ஹவாய் சைவ ஆதீனம், தம்மைத் திருமூலர் வழிவந்த நந்திநாதரின் செம்பெருந்தாயமாக இனங்காட்டுகின்றது. (திருமூலர்→→→நந்திநாத மகரிஷி→கடையிற் சுவாமிகள்செல்லப்பா சுவாமியோகர் சுவாமிசிவாய சுப்ரமணியசுவாமி)[4] தமிழ்ச் சைவ சித்தாந்த நெறியான மெய்கண்டார் செம்பெருந்தாயம், சனகாதி முனிவரில் ஒருவரான சனற்குமாரரின் குரு பரம்பரையில் வந்ததாக (சனற்குமாரர்→சத்தியஞான தர்சினி→பரஞ்சோதி முனிவர்→மெய்கண்டார்) தன்னை இனங்காட்டிக் கொள்கின்றது.[5]

செம்பெருந்தாயம் குருமுதல்வர் இன்றைய பிரிவு தலைமைப்பீடம் குறிப்பு
நந்திநாத செம்பெருந்தாயம்[6] திருமூலர் தமிழ்ச் சைவ சித்தாந்தம் ஹவாய் சைவ ஆதீனம் மெய்கண்ட சாத்திரங்களோடு திருமந்திரத்தை முன்னிலைப்படுத்துவது.
மெய்கண்டார் செம்பெருந்தாயம்[6][7] மெய்கண்டார் தமிழ்ச் சைவ சித்தாந்தம் திருவாவடுதுறை முதலான சைவ ஆதீனங்கள் சனற்குமாரரிலிருந்து வழிவழியாக வரும் செம்பெருந்தாயம்
ஆதிநாத செம்பெருந்தாயம்[6] மச்சேந்திரநாதர், கோரக்கர் சித்தர் சைவம், நாத செம்பெருந்தாயம் நிசார்க்கதத்த மகராஜ் அமைப்பு[8] மற்றும் சர்வதேச நாத மடம்[9] கன்னடர், வடநாட்டவர் பெருமளவு கடைப்பிடிக்கின்றனர். இஞ்சகிரி செம்பெருந்தாயம், நாத செம்பெருந்தாயம் என்பதெல்லாம் இம்மரபோடு தொடர்பானவை.
திரிக செம்பெருந்தாயம் துர்வாசர் வசுகுப்தர் காசுமீர சைவம் சுவாமி இலட்சுமஞ்சோ அகாதமி[10] மற்றும் காசுமீர சைவ மடங்கள் இரகசிய செம்பெருந்தாயம், திரியம்பக செம்பெருந்தாயம் என்றும் அழைக்கப்படுகின்றது.[11][12] சிறீகண்டர், வசுகுப்தர், சோமானந்தர் எனச்செல்லும் குரு பரம்பரையைக் கொண்ட இம்மரபு, துருவாசரையும் அதில் சேர்த்துக் கொள்கின்றது.[12]

இவற்றில் நந்திநாத மரபும், மெய்கண்டார் மரபும் தென்னகத்துச் சைவ சித்தாந்தத்தில் அடங்கும் அதேவேளை, ஆதிநாத மரபு, "சித்த சைவ" நெறியாகவும், திரிக மரபு, "காஷ்மீர சைவமாகவும்" இன்று இனங்காணப்படுகின்றது. இலிங்காயத செம்பெருந்தாயம் எனும் வீர சைவ மரபு, பசவரிலும், சிரௌத்த செம்பெருந்தாயம் எனும் சிவாத்துவித மரபு, ஸ்ரீகண்ட சிவாச்சாரியாரிலும் தொடங்குகின்றது.

விண்ணவ செம்பெருந்தாயங்கள்[தொகு]

பத்ம புராணம் நான்கு வைணவ சம்பிரதாயங்களைப் பட்டியற்படுத்துகின்றது. அவை வருமாறு:

அதிதேவதை பரம்பரை குருமுதல்வர் தொடர்புள்ள செம்பெருந்தாயம்
திரு ஸ்ரீ செம்பெருந்தாயம் இராமானுசர் இராமநந்தி செம்பெருந்தாயம்
பிரமன் பிரம செம்பெருந்தாயம் மத்துவர் கௌடிய வைணவம்
உருத்திரன் உருத்திர செம்பெருந்தாயம் விஷ்ணுசுவாமி/வல்லபாச்சாரியார் புஷ்டிமார்க்கம்
சனகாதி குமாரர் சனகாதி செம்பெருந்தாயம் நிம்பர்க்கர் நிம்பார்க்க வைணவம்

இவற்றிலிருந்து மாறுபட்ட செம்பெருந்தாயங்களும் இன்று உண்டு. சுவாமி நாராயண செம்பெருந்தாயம் அவற்றிலொன்று.

சுமார்த்த செம்பெருந்தாயங்கள்[தொகு]

சங்கரரின் போதனைகளின் அடிப்படையில் முகிழ்த்த சுமார்த்த நெறியின் செம்பெருந்தாயம், பொதுவாக "தசநாமி " செம்பெருந்தாயம்" என்று அறியப்படுகின்றது. இவற்றின் குருதேவர்கள், தண்டமொன்றை ஏந்தி உலவுவதால், "ஏகதண்டி சன்னியாசிகள்" என்று அழைக்கப்படுவதுண்டு[13] தசநாமிகள் துறவின் போது பூணூலைத் துறப்பதில்லை என்பதால், இவர்கள், சைவ திரிதண்டி சன்னியாசிகளிலிருந்து வேறுபடுகின்றனர். இன்றுள்ள சங்கர மடங்கள் நான்கும், பத்து விதமாகப் பெயர் சூடும் அந்நான்கு மடங்களின் குருமுதல்வர்களும் தசநாமி மரபுக்குரித்துடையோர் ஆவர்.

ஆதிசங்கரர் வழிவந்த நான்கு தசநாமி மடங்களும் வருமாறு:[web 2]

சீடர்
(பரம்பரை)
திசை மடம் மாவாக்கியம் வேதம் செம்பெருந்தாயப் பிரிவு
பத்மபாதர் கிழக்கு கோவர்தன மடம் "ப்ரஞ்ஞானம் ப்ரஹ்ம" (இருப்பு என்பதே கடவுள்) இருக்கு போகவாள
சுரேசுவரர் தெற்கு சிருங்கேரி அஹம் ப்ரஹ்மாஸ்மி (நான் கடவுள்) யசுர் பூரிவாள
அஸ்தாமலகர் மேற்கு துவாரகை மடம் தத்வமசி (நீயே அது!) சாம வேதம் கீதவாள
தோடகர் வடக்கு ஜோதிர் மடம் அயமாத்மா ப்ரஹ்ம (இவ்வாதனே கடவுள்) அதர்வம் நந்தவாள

உசாத்துணைகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Gupta 2002.
 2. Wright 1993.
 3. 3.0 3.1 Ebert 2006, ப. 89.
 4. 4.0 4.1 Satguru Sivaya Subramuniyaswami (2003) "Dancing with Siva: Hinduism's Contemporary Catechism" Himalayan Academy Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780945497899
 5. [Civañān̲a Mun̲ivar (1985) "Sivajñāna Māpādiyam" Page 40]
 6. 6.0 6.1 6.2 "சைவ சித்தாந்தம், ஹவாய் ஆதீனக் கட்டுரை". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
 7. Mathew Chandrankunnel (2008) "Philosophy of Quantum Mechanics" P. 720 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8182202582
 8. நிசார்க்கதத்த மகராஜ்
 9. "சர்வதேச நாத மடம்". Archived from the original on 2016-01-27. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
 10. இலட்சுமஞ்சோ அகாதமி
 11. P. N. K. Bamzai (1994) "Culture and Political History of Kashmir"
 12. 12.0 12.1 V. N. Drabu (1990) "Śaivāgamas: A Study in the Socio-economic Ideas and Institutions of Kashmir (200 B.C. to A.D. 700) Indus Publishing பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185182384
 13. Journal of the Oriental Institute (pp 301), by Oriental Institute (Vadodara, India)

வலை உசாத்துணைகள்[தொகு]

 1. "Sri Ramanasramam, "A lineage of Bhagavan Sri Ramana Maharshi?"". Archived from the original on 2012-01-13. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
 2. "Adi Shankara's four Amnaya Peethams". Archived from the original on 2006-06-26. பார்க்கப்பட்ட நாள் 2006-08-20.

மூலங்கள்[தொகு]

 • Apte, V.S. (1965), The practical Sanskrit-English dictionary: containing appendices on Sanskrit prosody and important literary and geographical names of ancient India, Motilal Banarsidass Publ.
 • Ebert, Gabriele (2006), Ramana Maharshi: His Life, Lulu.com
 • Gupta, R. (2002), Sampradaya in Eighteenth Century Caitanya Vaisnavism, ICJ
 • Michaels, Axel (2004), Hinduism. Past and present, Princeton, New Jersey: Princeton University Press
 • Nakamura, Hajime (2004), A History of Early Vedanta Philosophy. Part Two, Delhi: Motilal Banarsidass Publishers Private Limited
 • Wright, Michael and Nancy (1993), "Baladeva Vidyabhusana: The Gaudiya Vedantist", Journal of Vaisnava Studies
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பெருந்தாயம்&oldid=3913597" இலிருந்து மீள்விக்கப்பட்டது