சுவேதாசுவதர உபநிடதம்
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
![]() |
இருக்கு வேதம் ஐதரேயம் |
பிரம்ம புராணங்கள் பிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம் வைணவ புராணங்கள் விஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம் |
அரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் •
நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம் |
காலக்கோடு |
சுவேதாசுவதர உபநிடதம் (Shvetashvatara Upanishad) என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 14வது உபநிஷத்து. தைத்திரீய சாகையின் 33 உபநிஷத்துக்களில் இது ஒன்று என்று தொன்றுதொட்டு கருதப்பட்டு வருகிறது. வித்யாரண்யர் தன்னுடைய "சர்வோபநிஷத் அர்த்தானுபூதிப் பிரகாசகத்தில்" இதை 12 வது உபநிஷத்தாக சேர்த்திருக்கிறார். பத்து முக்கிய உபநிஷத்துக்களைத் தாண்டி ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதியிருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று. இந்த பாஷ்யத்தை ஆதி சங்கரர் செய்ததல்ல என்ற கருத்தும் உள்ளது. (Narayana Sastry: p. 81).
பொது முன்னுரை[தொகு]
சுவேதாசுவதரர் என்ற மஹரிஷி இதை உபதேசித்ததாய் இவ்வுபநிஷத்திலேயே கூறப்பட்டுள்ள்து. சுவேத என்றால் வெள்ளை; அசுவதர என்றால் புலன்களாகிய குதிரைக்கூட்டம். மஹரிஷியின் பெயர் தூய புலன்களைக்கொண்டவர் என்று பொருள்படும்.
ஆறு அத்தியாயங்களைக்கொண்ட இவ்வுபநிஷத்து ஸாங்க்யம், யோகம், மாயை முதலிய பொருள்களைப் பற்றிப் பேசுகிறது. பிரம்மத்தின் நிர்குணத் தன்மையையே அதிகமாகப் பேசிய பத்து முக்கிய உபநிஷத்துகளுக்குப்பிறகு இவ்வுபநிஷத்து தான் ஸகுணப் பிரம்மமெனப்படும் ஈசுவரன் என்ற கடவுள் தத்துவத்தை முன் நிறுத்திப் பேசுகிறது. வேறுவேறான பல தத்துவக் கோணங்களை ஒன்றுபடுத்த முயலுகிறது.(Radhakrishnan, p. 707)
இவ்வுபநிஷத்துப் பொன்மொழிகள்[தொகு]
அனைத்துலகமும் பிரம்மத்தை முழுமுதற்காரணமாகக் கொண்டது. உலகம் ஒர் பிரம்ம சக்கரம். ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் குணங்களைக் குறிக்கும் மூன்று பட்டைகளாலானது. சக்கரத்தை சுழற்றுவதும் பிரம்மத்தின் சக்தியாகிய பிரகிருதி தான். (1.4)
அறிபவனும் அறியப்படுவதும், ஆள்பவனும் ஆளப்படுவதும் ஆகிய இரண்டும் பிறப்பற்றவை. அனுபவிப்பவனுக்கும் அனுபவிக்கப்படுவதற்கும் உறவைக் கற்பிக்கும் ஒருத்தியாகிய (மாயை எனும்) அவளும் பிறப்பற்றவளே. எப்பொழுது இம்மூன்றும் பிரம்மம் என்று ஒருவன் அறிகிறானோ அப்பொழுது அவன் அளவு கடந்து எங்கும் வியாபித்த ஆத்மாவாகவும் எல்லா வடிவங்களிலும் விளங்குபவனாகவும் செயலேதுமற்றவனாகவும் ஆகிறான். (1.9)
இது நிலையாகத் தன்னிடமே உளதென அறியப்படவேண்டும். அதற்கப்பால் அறியவேண்டியது சிறிதுமில்லை. ஆராய்ந்துணர்ந்து அனுபவிப்பவன், அனுபவிக்கப்படுவது, அனுபவிக்க ஏவுவது எல்லாம் இந்த பிரம்மத்தின் மூன்று வகைகளே.(1.12)
எள்ளினுள் எண்ணெய் போலும், தயிரினுள் நெய் போலும், ஊற்றுக்களில் நீர் போலும், அரணிக் கட்டைகளில் தீ போலும் இப்பரமாத்மா ஜீவாத்மாவிடம் காணப்படுகிறது. வாய்மையாலும் தவத்தாலும் எவன் இதைக் காண முயலுகின்றானோ அவனால் இதைக் காணமுடிகிறது.(1.15)
இத்தேவனே எல்லாத் திசைகளையும் வியாபிக்கிறான். இவனே ஆதியில் தோன்றிய ஹிரண்யகர்ப்பன். இவனே கருவினுள்ளிருப்பவன். பிறந்தவைகளாகவும் இனி பிறக்கப் போகும் உயிர்களாகவும் எல்லாப் பிறவிகளுள்ளும் எங்கும் முகமுடையவனாகவும் நிற்பவன். (2.16)
எவன் இவ்வுலகங்களைத் தனது ஆளும் சக்திகளால் ஆள்பவனோ அந்த உருத்ரன் (பிரம்மம்) ஒருவனே. இரண்டாவதாக நிற்க வேறொருவன் இல்லை. அவன் எல்லா மக்களுள் உள்ளுறைபவன். உலகங்களைப் படைத்து காப்பவனாயிருந்து முடிவு காலத்தில் அவைகளைத் தனக்குள் ஒடுக்கிக் கொள்கிறான்.(3.2)
சம அந்தஸ்துள்ள இணைபிரியாப் பறவைகள் இரண்டு ஒரே மரத்தில் வசித்தாலும் ஒன்று (ஜீவாத்மா) பழத்தை ருசியுடன் உண்கிறது; மற்றொன்று (பரமாத்மா) உண்ணாமல் பார்த்துக்கொண்டு மாத்திரம் இருக்கிறது. (4.6)
பிரகிருதியை மாயையாகவும் எல்லாம் வல்ல ஈசனை மாயையை ஆட்டி வைப்பவனாகவும் அறியவேண்டும்.(4.10)
எதனால் இந்தப் பெரிய சக்கரம் சுழற்றப்படுகிறதோ அது இயற்கை என்று சில அறிஞர்களும், அவ்வாறே காலம் என்று பிறரும் மதிமயங்கியவர்களாய்க் கூறுகின்றனர். உலகில் இதுவெல்லாம் தெய்வத்தின் மகிமையேயாம்.(6.1)
நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாயும் அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய விருப்பங்களையும் அளிப்பவனாயும், அனைத்திற்குக் காரணமாயும், ஞானயோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுகிறான். (6.13)
அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் பிரகாசிப்பதில்லை. மின்னல்கொடிகளும் பிரகாசிப்பதில்லை.இந்தத்தீ எவ்விதம் பிரகாசிக்கும். விளங்கிடும அவனைச்சார்ந்தே அனைத்தும் விளங்குகிறது. அவனொளியாலேயே இவையனைத்தும் விளங்குகின்றன.(6.14)
வீடு பெறச்செயல்முறை[தொகு]
ஆண்டவனுக்கு அர்ப்பணமாக எல்லாக் கருமங்களையும் செய்து அதனாலேயே கருமத்தினின்று ஒழிவடைந்து தத்துவத்தின் தத்துவத்தால் யோகத்தைக் கைக்கொண்டு ஒன்றாலோ, இரண்டாலோ, மூன்றாலோ, எட்டாலோ, நுட்பமான ஆத்மகுணங்களால் நாளடைவில் ஒருவன் வீடு பெறுகிறான்.(6.3)
- அத்வைத வேதாந்த தத்துவப்படி இதன் விளக்கம்:ஆண்டவனுக்கு அர்ப்பணமாகச்செய்யப்படும் எந்த வினையும் செய்பவரை பந்தப்படுத்தமாட்டா.இவ்விதம் பந்தப்படாமல் செய்யப்படும் கருமம் செய்பவரின் வாசனை மூட்டையோ கரும மூட்டையோ அதிகப்படுத்தப்படாது. இவ்விதம் கருமம் செய்வதால்தான் வினைகளைக்குறைத்து கருமத்திலிருந்து ஒழிவுபெறமுடியும். 'தத்துவத்தின் தத்துவத்தால்' என்ற சொற்பிரயோகத்தில் தத்துவம் இருமுறை வருகிறது. முதல் தத்துவம் 24 தத்துவங்கள் கொண்ட படைப்பனைத்தையும் குறிக்கும். அதாவது, பஞ்ச பூதங்கள், மனது, புத்தி, அகங்காரம், அவியக்தம் முதலிய நான்கு, கருமப்புலன்கள் ஐந்து, ஞானப்புலன்கள் ஐந்து, புலன்களை இழுக்கும் ஓசை முதலிய ஐந்து ஆக 24. இரண்டாவது தத்துவம் ‘தத்வமஸி’ (அதுவே நீ) என்ற வேதாந்தக் கூற்றைக் குறிக்கிறது.
- ஒன்றாலோ: மனத்தாலோ.
- இரண்டாலோ: மனது, புத்தி இவையாலோ, அ-து, புத்தியால் மனதையடக்கி.
- மூன்றாலோ: மனது, புத்தி, அகங்காரம் இவற்றாலோ. அ-து, புத்தியால் மனதை அடக்கி, அகங்காரத்தை வென்று.
- எட்டாலோ: எட்டு பாகமாகச்சொல்லப்பட்ட ‘அபரா பிரகிருதி’யின் உதவி கொண்டு. பஞ்ச பூதங்களும், மனது, புத்தி, அகங்காரம் இவைகொண்டது அபரா பிரகிருதி. (பகவத் கீதை: 7வது அத்தியாயம்).
வேண்டுதல்[தொகு]
சிலந்திப்பூச்சி அல்லது பட்டுப்பூச்சி தனது நூல்களால் தன்னை மறைத்துக்கொள்வதுபோல் இயற்கையாகவே பிரகிருதியில் தோன்றும் பொருள்களால் எந்த தேவன் தானொருவனாகவே தன்னை மறைத்துக் கொள்கிறானோ அவன் நமக்கு பிரம்ம சாயுஜ்யத்தை அளிக்கட்டும்.(6.10)
ஆதியில் பிரம்மாவைப்படைத்து அவனுக்கு வேதங்களைக்கொடுத்தருளியவன் எவனோ நமக்குள்ளிருந்து நமது புத்தியைப் பிரகாசிக்கச் செய்பவன் எவனோ அந்த தேவனை மோட்சத்தில் விருப்பமுடைய நான் சரணமடைகின்றேன்.(6.18)
முடிவு[தொகு]
எவனுக்கு தெய்வத்தினிடம் சிறந்த பக்தியும் தெய்வத்தினிடம் போலவே குருவினிடமும் பக்தியும் உண்டோ அந்த மகாத்மாவிற்கு உபதேசிக்கப்பட்டால்தான் இப்பொருள்கள் விளங்கும். அவருக்கு, வாய்விட்டுச் சொல்லாமலிருக்கும் ரகசியப் பொருள்களும் தாமாகவே விளங்கிடும். (6.23)