உள்ளடக்கத்துக்குச் செல்

அரதத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரதத்தர் அல்லது ஹரதத்த சிவாச்சாரியார் ஒரு சைவ மெய்ஞ்ஞானியும், சிரௌத்த சித்தாந்தத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஆவார்.[1] சிலவேளைகளில் இவரது இயற்பெயரின் மூலம் சுதர்சன சிவாச்சாரியார் என்றும் இவர் அறியப்படுகின்றார்.[2] இவரும் வடமொழி இலக்கணத்தில் புகழ்பெற்ற "பாதமஞ்சரி" முதலான இலக்கண விளக்கவுரைகளை எழுதிய அரதத்த மிஸ்ரரும் (கி.பி 9ஆம் நூற்.) வேறுவேறானவர்கள்.[3]

வாழ்க்கை

[தொகு]

அரதத்தர் கி.பி 12ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்தார் என்று அறியமுடிகின்றது.[4] வைணவக்குடும்பமொன்றில் அவதரித்தவராகச் சொல்லப்படும் அரதத்தர், நாரணனின் அவதாரம் என்றும் அவர் சைவம் தழைக்க அவதரித்தார் என்றும் சைவ நூல்கள் விரித்துக் கூறுகின்றன.[5]

காவேரி வடகரையில் கஞ்சனூர் தலத்தில், தீவிர வைணவரான வாசுதேவரின் மகனாக "சுதர்சனன்" என்ற பெயரில் பிறந்தார் அரதத்தர். சிறுவயதிலிருந்தே சைவ வாழ்க்கையில் ஈடுபட்டதால் தந்தையால் வெறுக்கப்பட்டார். அதனால் மனம் வருந்தி கஞ்சனூர் சிவன் அருளால், வைணவரிடையேயும் தந்தையிடமும் சிவ பரத்துவத்தை நிரூபித்தார். அவருக்கு ஈசனே நேரில் தோன்றி கலைகளை எல்லாம் கற்பித்ததாகவும், ஐந்து வயதில் பழுக்கக் காய்ச்சிய இரும்பில் ஏறிநின்று சிவபரத்துவத்தை அவர் ஓதியதாகவும் சைவ நூல்கள் போற்றுகின்றன. உரிய வயதில் "கமலாட்சி" எனும் பெண்ணை அவர் மணந்ததுடன், அவருக்கு அக்னீசுவரன், மகாதேவன், நீலகண்டன், சங்கரன், சந்திரசேகரன், சம்பு, மத்யார்ச்சுனேசுவரன், கோவடுநாயகன், கற்பகாம்பிகை, மீனாட்சி என்று எட்டுப் பிள்ளைகள் பிறந்தனர்.[5]

சிரௌத்த சைவம்

[தொகு]

அப்பைய தீட்சிதர், ஸ்ரீகண்டர் ஆகியோருடன், அரதத்தரின் நூல்கள், சிரௌத்த சைவப் பிரிவினரால் மிகவும் ஏற்றுப் போற்றப்படுகின்றன. நான்மறைகளிலிருந்து சிவனே பரம் என்று கூறப்படும் பாகங்களைக் கூறும் சதுர்வேத சங்கிரகம் அல்லது சுருதி சூக்தி மாலை[6] அவரது முக்கியமான நூல். பஞ்சரத்தின தச சுலோகம், ஹரிஹர தாரதம்மிய ஷட்கம் என்பன அவரது ஏனைய சில நூல்கள். இவை யாவும், வழமையான வேதாந்த நோக்கில் திருமாலுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்துக்கு மாறாக, சைவப் பார்வையில் வேதாந்தத்தைப் பாடுகின்றன என்பது இவற்றின் சிறப்பியல்பு. அரதத்தரின் தொன்மத்தில் குறிப்பிடப்படும் "சிவலிங்கபூபதி" என்பவர் உண்மையில் காலத்தால் அவருக்குப் பிந்தியவர் என்றும் கி.பி 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் அரதத்தர் சீடர் பரம்பரையில் தோன்றி, சுருதி சூக்தி மாலை முதலான நூல்களுக்கு உரை எழுதினார் என்றும் சொல்லப்படுகின்றது.[7]

அற்புதங்கள்

[தொகு]

சைவர் மத்தியில் இவர் தொடர்பான பல அற்புதக் கதைகள் நிலவுகின்றன. சிவலிங்கபூபதி எனும் மன்னன் கொடுத்த பட்டுச்சால்வையை தான் செய்த வேள்வியில் இட்டதாகவும், மனம் வருந்திய மன்னன் ஆலயம் சென்று பார்க்க, அது இலிங்கத்தின் மீது சார்த்தப்பட்டிருந்ததாம். அவர் தாயும் மனைவியும் அறியாமல் உயிர்வதை புரிந்ததை அறிந்து வருந்தி ஒரு சுலோகம் எழுதிவிட்டு அரைகுறையாகச் சென்றதாகவும், ஈசனே அவர் வடிவில் மீளவந்து அச்சுலோகத்தை எழுதி முடித்ததாகவும் இன்னொரு கதை உண்டு. தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்தால், தனிமையில் அமர்ந்து சிவநாமம் உரைத்தாலே போதும் என்பது அந்த சுலோகத்தின் பொருள். தனக்கு மழையில் உதவிய இடையனுக்கு பாகற்காய் குழம்பும் சோறும் கொடுத்துதவ அது திருவாவடுதுறை ஈசன் சன்னிதானத்தில் அடுத்தநாள் சிதறிக்கிடக்க, இடையனாய் அவருடன் போனது சிவனே என அனைவரும் அறிந்தார்களாம்.[8] தை சுக்கிலபஞ்சமியில் அவர் சிவப்பேறு அடைந்ததாகச் சொல்லப்படுகின்றது.[5]

உசாத்துணைகள்

[தொகு]
  1. Temple India. Vivekananda Kendra Prakashan. 1981.
  2. Satalur Sundara Suryanarayana Sastri (1930). The Sivadvaita of Srikantha. University of Madras. p. 393.
  3. Sripatipandita (1936). The Śrīkara Bhāshya: Introduction. ‎Conjeeveram Hayavadana Rao. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8188643017.
  4. Amaresh Datta (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126018038.
  5. 5.0 5.1 5.2 "ஹரதத்த சிவாச்சாரியார்". சைவம்.ஆர்க். பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2016.
  6. "Vedārthaprakaśa, Caturvedatātparyasaṃgraha, unidentified śaiva work (MS Or.2341)". Digital Library. University of Cambridge. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2016.
  7. Kuppuswami Sastri Research Institute (1930). "Haradatta Sivacharyar". The Journal of Oriental Research 4 -5. 
  8. Saiva Siddhanta, Volume 15. Saiva Siddhanta Mahasamajam. 1980.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரதத்தர்&oldid=3539970" இலிருந்து மீள்விக்கப்பட்டது