ஆதிமார்க்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதிமார்க்கம் என்பது சைவநெறியின் இருபெரும் பிரிவுகளில் ஒன்றாகும். மற்றையது மந்திரமார்க்கம் என்று அறியப்படுகின்றது.[1][2] சைவத்தின் இந்த இரு கிளைநெறிகளிலும் ஆதிமார்க்கமே பழைமையானதும் நீண்ட வரலாறு கொண்டதுமாகும். இன்றைக்கு மந்திரமார்க்கமே பெருவழக்காக இருந்தாலும், ஆதிமார்க்கத்தின் எச்சங்களை இன்றும் அங்கும் இங்கும் காணமுடிகின்றது.

வரலாறு[தொகு]

சைவ சமயக்கிளைகளின் வளர்ச்சி

சைவ சமயத்தின் தத்துவ ஆராய்ச்சி பற்றிய தடயங்களை கி.பி 2ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பெற்றுக்கொள்ளமுடிகின்றது.[2] பாசுபதர்கள் முதன்மையான ஆதிமார்க்கிகளாக அறியப்படுகின்றனர். பாசுபதர்களில் முக்கியமானவரான இலகுலீசர், பாசுபதம் வளர்ச்சி கண்டு, இலாகுல பாசுபதம் உருவாகக் காரணமானார். இலாகுலத்திலிருந்து சோம சித்தாந்தம் என அறியப்பட்ட காபாலிகம் வளர்ச்சியடைந்தது. இவை மூன்றினதும் உச்சக்கட்ட வளர்ச்சி, கி.பி 2ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 5ஆம் நூற்றாண்டுக்கிடையே இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கான உறுதியான சான்றாதாரங்கள் கிடைத்திருக்கின்றன.[3]

பாசுபதம்[தொகு]

ஆதிமார்க்கிகளில் முக்கியமானவரான இலகுலீசர்

கி.பி 4ஆம் நூற்றாண்டில் முழுமையடைந்ததாகக் கருதப்படும் பாரதக்குறிப்பு ஒன்றின் மூலம், பாசுபதர் அக்காலத்துக்கு பல்லாண்டுகள் முன்பிருந்தே வாழ்ந்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[4] காரணம், காரியம், விதி, யோகம், துக்காந்தம் எனும் ஐந்து கொள்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள் என்பதால், இவர்களை பஞ்சார்த்திகர் என்று அழைப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.[5] கேவலார்த்தவிதர்கள் என்ற சொல்லாடலும் இவர்களையே குறிக்கும். இந்தியாவில் மாத்திரமன்றி, கம்போடியா, சாவக நாடுகளிலும் பாசுபதக் கொள்கைகள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.[6] மூன்று ஆதிமார்க்கங்களிலும் இதுவே மூத்தது என்பதால், இதை ஆய்வாளர்கள், வசதிக்காக "முதலாம் ஆதிமார்க்கம்" என்று அழைப்பது வழக்கம்.

காளாமுகம்[தொகு]

பாசுபதர்களில் முக்கியமானவரான இலகுலீசரின் கொள்கைகள் ஏற்படுத்திய தத்துவார்த்தப் புரட்சியை அடுத்து, பாசுபதர்களிலிருந்து கிளைத்த புதிய பிரிவினரே காளாமுகர்கள். இலகுலீசரால் பாதிக்கப்பட்ட மெய்யியலாளர் என்பதால் இவர்கள், லாகுலர் என்றும், மாவிரதியர் என்றும், பிரமாணியர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.கருஞ்சாம்பலை முகத்தில் பூசிக்கொள்வதால் காளமுகர், காலானனர் (கருமுகத்தோர்) என்றழைக்கப்பட்டனர்.[7] 8ஆம் 9ஆம் நூற்றாண்டுகளில் இப்பிரிவினர் மிக முக்கியமான சைவத் தத்துவவியலாளராகத் திகழ்ந்ததற்கான சான்றுகள் கிட்டுகின்றன.[8] காளாமுக சைவம், சைவ ஆய்வுலகில், "இரண்டாம் ஆதிமார்க்கம்" என்று அறியப்படுகின்றது.

காபாலிகம்[தொகு]

காளாமுகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியில் உருவான "மூன்றாம் ஆதிமார்க்கமே" காபாலிகம் ஆகும். இதன் தத்துவச்செழிப்பு வைணவம், பௌத்தம் என்பவற்றுக்குப் பரிமாற்றப்பட்டபோது, அவை முறையே பாஞ்சாராத்திரம், வஜ்ரயானம் முதலான உட்பிரிவுகளைத் தோற்றுவிக்கக் காரணமாயிற்று.[9] காபாலிகம் சைவ எல்லைக்குள்ளேயே மேலும் வளர்ச்சியுற்று, மந்திரமார்க்கத்துக்கும் குலமார்க்கத்துக்கும் வழிசமைத்தது.[10] 'சோமசித்தாந்தியர் என்றும் அறியப்பட்ட கபாலிகர்கள், மது, மாமிசம் முதலான விலக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுபடுவோராகவும, அவர்கள் அத்துவைதிகளாகத் திகழ்ந்ததாகவும், வேற்று நூல்களின் குறிப்புகள் சொல்கின்றன.

உசாத்துணைகள்[தொகு]

  1. Clarke, P., Hardy, F., Houlden, L., & Sutherland, S. (Eds.). (2004). The World's Religions. Routledge.. 
  2. 2.0 2.1 Flood, G. D. (1996). An introduction to Hinduism. Cambridge University Press.. 
  3. Frawley, D. (2015). Shiva: The Lord of Yoga. Lotus Press.. 
  4. Flood, Gavin (Editor) (2003). The Blackwell Companion to Hinduism. Malden, MA: Blackwell Publishing Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4051-3251-5.. 
  5. Pande, G. C. (1990). Foundations of Indian culture: Spiritual vision and symbolic forms in ancient India (Vol. 1). Motilal Banarsidass Publ... 
  6. Michaels, Axel (2004). Hinduism: Past and Present. Princeton, New Jersey: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-08953-1.. 
  7. Lorenzen, David N. (1972), Kapalikas and Kalamukhas: Two Lost Saivite Sects, University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-52001-842-6. 
  8. Nandi, Ramendra Nath (1973), Religious Institutions and Cults in the Deccan, c. A.D. 600-A.D. 1000, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-84260-564-9. 
  9. Sanderson, Alexis. "The Śaiva Literature." Journal of Indological Studies (Kyoto), Nos. 24 & 25 (2012–2013), 2014, pp.4-5, 11, 57.. 
  10. Ronald Davidson (2002), Indian Esoteric Buddhism, Columbia University Press. pages 202-218. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிமார்க்கம்&oldid=2767955" இலிருந்து மீள்விக்கப்பட்டது