திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10°51′11″N 78°42′20″E / 10.853020°N 78.705610°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருஆனைக்காவல், திருஆனைக்கா |
பெயர்: | திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவானைக்காவல் |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார் |
உற்சவர்: | சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் |
தாயார்: | உலக ஆண்ட நாயகி (அகிலாண்டேஸ்வரி) |
தல விருட்சம்: | வெண்நாவல் |
தீர்த்தம்: | நவ தீர்த்தங்கள், காவிரி தீர்த்தம், இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம் |
ஆகமம்: | சைவாகமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், தாயுமானவர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்தியக் கட்டடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர், நாயக்கர், நாட்டுக்கோட்டை நகரத்தார் |
வலைதளம்: | http://www.thiruvanaikkavaltemple.org/ |
திருவானைக்காவல், அல்லது திருஆனைக்கா எனப்படும் திருவானைக்கோவில் (Thiruvanaikaval Jambukeswarar Temple) திருச்சி மாநகரில் அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-ஆவது சிவன் தலமாகும்.
தல வரலாறு
[தொகு]புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.
சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.
கோச்செங்கட் சோழன்
[தொகு]சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் ( கோச்செங்கண் சோழன்) என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
திருநீறு தங்கமான எம்பிரானின் திருவிளையாடல்
[தொகு]இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை கட்டும்போது இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்குத் திருநீற்றை கூலியாகக் கொடுத்ததாகத் தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலைத் திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.
தலச் சிறப்புகள்
[தொகு]பஞ்சபூத தலம் - நீர்த்தலம்
[தொகு]- திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். காவிரியின் நீர்மட்டமும் லிங்கம் இருக்கும் இடத்தின் நீர்மட்டமும் ஒன்று என கூறப்படுகிறது. முற்றிய கோடையில், காவிரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
- திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம்
[தொகு]- திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாகப் பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாகப் பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளைத் தாடகங்கள் என்று அழைப்பார்கள்.
- அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தைத் தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
- அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்குத் தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போலப் பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்லச் சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
அம்பிகை வழிப்பட்ட லிங்கம்
[தொகு]இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால், லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
குபேர லிங்கம்
[தொகு]மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்தக் குபேர லிங்கத்தைக் குபேரன் வழிபட்டதால்தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் அதிகம் வழிபாடு செய்யும் இடங்களில் ஒன்றாகக் குபேர லிங்க சன்னிதி ஆகிப்போனது.
சிற்பங்கள்
[தொகு]பல அரிய சிற்பங்களும் இத்தலத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்தச் சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னிதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.
அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மிக்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளாள்.
வரலாற்றுச் சிறப்புகள்
[தொகு]கல்வெட்டுகள்
[தொகு]கோவிலை கட்டியவர்கள் முத்தரையர் மன்னர்கள்.பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்குப் பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்குக் கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை.
அரசர்/ சான்றோர் திருத்தொண்டு
[தொகு]இத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள்,முத்தரையர் மட்டுமன்றிப் போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளைச் சுமார் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன.
- ஐந்து பிரகாரங்களைக் கொண்ட இத்திருத்தலத்தின் முதலாம் பிராகாரத்திலான துவார பாலகர் திருவுருக்களைச் செய்வித்தவர் இளைய நயினார் மகனார் தெய்வங்கள் பெருமாள்.
- நீலகண்ட நாயக்கர் நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகியின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளச் செய்துள்ளார்.
- சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் இக்கோயிலின் உற்சவ மண்டபத்தை உருவாக்கினார்.
- முதற் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள எடுந்தருளிய ஷ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர்.
- சந்தபேந்திரன் நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரத்தினை எழுப்பியருளினார்.
- வலம்புரி விநாயகரையும் சுப்பிரமணியரையும் எழுப்பியருளியவர் மும்முடி திம்மரசர்.
- விபூதி பிராகாரத்து மதிற்சுவரைத் தோற்றுவித்தவன் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். எம்பிரானின் திருவிளையாடல்களில் ஒன்றான திருநீறு தங்கமாக மாறிய அற்புதம் காலமும் இதுவேயாகும்.
- பெரும் சிவனடியாரான வீரசோம ஈசுவரன் என்னும் ஹொய்சால மன்னன் இத்திருத்தலத்தில் கிழக்கில் ஒரு ஏழுநிலைக் கோபுரத்தை எழுப்பினான்.
- பாண்டிய அரசர்களான மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தமது பிறந்த நாளை ஒட்டி இத்திருத்தலத்திற்கு நிபந்தங்களை வழங்கியுள்ளனர்.
- திருபுவனச் சக்கரவர்த்தி என்னும் சிறப்புற்ற இராஜேந்திர சோழன் (கங்கை கொண்ட சோழன்) இருபத்தைந்து வேலி நிலத்தை இத்திருத்தலத்திற்கு இறையிலியாக அளித்தான்.
- மல்லப்பன் கோபுரம் 60 1/2 அடி உயரமும், 37 அடி அகலமும் மற்றும் 39 1/2 அடி நீளமும் உள்ளது. இதன் திருப்பணிக்கு திரு கிருபானந்த வாரியர் சுவாமிகள் அவர்களின் ராமாயண சொற்ப்ப்பொழிவின் மூலமாக ரூ.50200 திரட்டப்பட்டது
திருத்தலப் பாடல்கள்
[தொகு]பாடியது | பன்னிரு திருமுறை | பண் | பாடல் |
---|---|---|---|
சம்பந்தர் | இரண்டாம் திருமுறை | இந்தளம் | மழையார் மிடறா |
மூன்றாம் திருமுறை | கெளசிகம் | வானைக்காவில் | |
மூன்றாம் திருமுறை | பழம் பஞ்சுரம் | மண்ணது | |
அப்பர் | ஐந்தாம் திருமுறை | திருகுறுந்தொகை | கோனைக் காவிக் |
ஆறாம் திருமுறை | திருதாண்டகம் | எத்தாயர் எத்தந்தை | |
ஆறாம் திருமுறை | திருதாண்டகம் | முன்னானைத் தோல்போர்த்த | |
சுந்தரர் | ஏழாம் திருமுறை | காந்தாரம் | மறைகள் ஆயின |
திருவானைக்கா நாயன்மார்கள் மற்றும் தாயுமானவரின் பாடல் பெற்ற ஒரு தலம். திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரப் பதிகம் கீழே:
துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.
காவேரி நதியோடு சென்று விட்ட சோழனின் மணியாரம், திருமஞ்சனக் குடத்தில் சிக்கிக் கொண்டு எம்பிரானுக்கு ஆபரணமாக விளைந்த அற்புதத்தைச் சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வாறு வடிக்கிறார்:
தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே
ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்
எனவும், திருஞானசம்பந்தப்பெருமான்
ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே
சைவ ஆகமமாம் பெரிய புராணத்தில் ஏயர்கோன் கலிக்காமநாயனார் வரலாற்றினில், சேக்கிழார் தலத்தின் பெருமையை இவ்வாறு உரைக்கிறார்:
வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி
தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்
தலப் பெருமையைப் பறைசாற்றும் பழந்தமிழ்ப் பாடலொன்று:
மேதகைய பயன்விழைவோர் ஞானதலத் துறைகுவது மேவாதாயின்
ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே லுரைப்பக்கேட்க
காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங் கடந்துமேலாம்
போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை பொலங்கொம்பன்னாய்
குடமுழுக்கு
[தொகு]குடமுழுக்கு நடைபெற்று 16 ஆண்டுகளான நிலையில், இரண்டு கட்டமாகக் குடமுழுக்கு செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுப் பாலாலயம் அமைக்கப்பட்டது.[1] முதற்கட்ட குடமுழுக்கு கோயிலில் உள்ள ராஜகோபுர விநாயகர், மல்லப்பா கோபுரம் அருகிலுள்ள விநாயகர் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி சன்னிதி, 108 சிவலிங்க சன்னிதி ஆகிய 45 சன்னிதிகளின் விமானங்கள், உற்சவமூர்த்திகளுக்கு 9 டிசம்பர் 2018-இல் நடைபெற்றது.[2] இரண்டாவது கட்ட குடமுழுக்கு இராச கோபுரங்களுக்கு 12 டிசம்பர் 2018-இல் நடைபெற்றது.[3]
இவற்றையும் பார்க்க
[தொகு]திருக்கோயிலின் புகைப்படங்கள்
[தொகு]-
கோயிற் கோபுரம்(மல்லப்பன்)
-
திருவானைக்காவல் கோயில் உட்புற வெளிப்புற மதிலுக்கு இடைப்பட்ட பகுதி
-
கோயில் மண்டபம்
-
திருவானைக்காவல் கோயில் வெளிப்புற மதில்
-
திருவானைக்காவல் கோயில் உட்புற மதில்
-
திருவானைக்காவல் கோயில் வாயில் பகுதி
-
உள்ளிருக்கும் சிற்பம்
-
கோயில் கோபுரம் மற்றும் தேர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருவானைக்கா கோயிலில் குடமுழுக்கு பாலாலயம் தினமணி, 29 அக்டோபர் 2018
- ↑ திருவானைக்கா சம்புகேசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம், தினமணி, 10 டிசம்பர் 2018
- ↑ திருச்சி திருவானைக்கா கோயிலில் இரண்டாம் கட்ட மகா கும்பாபிஷேகம்: தமிழக ஆளுநர், அமைச்சர்கள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு, தினமணி, 13 டிசம்பர் 2018
வெளி இணைப்புகள்
[தொகு]- வேங்கடம் முதல் குமரி வரை 3/ஆனைக்கா அகிலாண்டேசுவரி
- திருவானைக்காவல் கோயில் அரசு வலைதளம்
- திருவானைக்கோவில் வலைதளம்
- அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
- திருத்தலப் பெருமைகளையும், வரலாற்றினையும், பாடல்களையும் விவரிக்கும் தேவாரத் தளம்
திருஆனைக்கா | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருப்பைஞ்ஞீலி |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 60 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 60 |