சியாமா சாஸ்திரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்ரீ சியாமா சாஸ்திரி்

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் (ஏப்ரல் 26, 1762 - பெப்ரவரி 06, 1827) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார்[1].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். "சியாம கிருஷ்ணா" செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது. தெய்வப்புலமை பெற்ற வாக்கேயக்காரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் இவர்பால் மிக்க அன்பு கொண்டிருந்தார்.

சியாம கிருஷ்ணன் இளமை முதல் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார்.

இசைப் புலமை[தொகு]

இவர் ஆரம்பத்தில் தமது மாமனாரிடம் இசை பயின்றார். பின்னர் சங்கீத சுவாமிகள் என்பவரைக் குருவாகக் கொண்டு சங்கீத நுட்பங்களையும் தாள சாஸ்திர மர்மங்களையும் சங்கீத நடை பேதங்களின் கிரமங்களையும் நன்கு அறிந்து கொண்டார். சங்கீத சுவாமிகள், சியாமா சாஸ்திரிகளுக்கு இசை நுட்பங்களைப் போதித்ததோடு நில்லாது அரிய இசைச் சுவடி ஒன்றையும் கொடுத்துதவினார்.

தேவி பக்தரான சியாமா சாஸ்திரிகள் ஆதியப்பரின் இசையினை பெரிதும் விரும்பிக் கேட்கத் தொடங்கினார். இதனால் அவர் மீது அதிக பற்று கொண்டார். இவரது இசை ஞானத்தையும் தேவி பக்தியையும் கண்ட ஆதியப்பர் இவர் மீது அன்பு கொண்டார். தானவர்ணங்களில் ஆணிமுத்தைப் போல விளங்கும் விரிபோணி (பைரவி ராகம் - அட தாளம்) வர்ணத்தின் கர்த்தாவாகிய ஆதியப்பர் சங்கீதத்தின் நுட்பங்களையும், இரகங்களின் மர்மங்களையும், கமகங்களின் நுண்மைகளையும் அடிக்கடி பாடியும் வீணையில் வாசித்தும் சாஸ்திரிகளுக்கு விளக்கினார்.

இசைப்பணி[தொகு]

சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் கிருதிகளை இயற்றினார். சில உருப்படிகளை தமிழில் செய்தார்.

இசை நுணுக்கம் தெரிந்தவர்களே இவரது பாடல்களை நன்கு பாட முடியும். இவரது பாடல்களைக் கதலி ரசத்திற்கு ஒப்பிடுவர். ஏறத்தாழ 300 கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அபூர்வமான இராகங்களை மாஞ்சி, கல்கட, கர்நாடக காபி, சிந்தமணி போன்றவற்றிலும் கிருதிகளைச் செய்துள்ளார்.

இவரது சில கிருதிகள் விலோம சாபு தாளத்தில் அமைந்துள்ளன. அதாவது தகிட தகதிமி என்னும் சாதாரண முறையில் இல்லாமல் தகதிமி தகிட என்னும் மாற்று முறையில் அமைந்துள்ளன. (உதாரணம்:- நின்னு வினாகமரி- பூர்விகல்யாணி)

பைரவி இராகத்தில் உள்ள இவரது காமாட்சி ஸ்வரஜதியில் சரணங்களின் ஆரம்ப ஸ்வரங்கள் ஆரோகண ஸ்தாயி என்னும் முறையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வராஷ்ட்ர அணிகளை இவர் தனது உருப்படிகளில் நன்கு பயன்படுத்தியுள்ளார்.

இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பேரில் பாடப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விசேட தினங்களிலும் சியாமா சாஸ்திரிகள் பங்காரு காமாட்சியின் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்வார். பக்திப்பரவசத்தால் அவர் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாகப் பெருகும். அவ்வேளைகளில் அநேக உருப்படிகள் அவர் வாக்கினின்றும் உதித்தன. இக்காரணம் பற்றியே இவரது உருப்படிகளுக்கு தனியான சுவை ஒன்று ஏற்பட்டது என்பர்.

நவரத்ன மாலிகை[தொகு]

மதுரை மீனாட்சியம்மன் பேரில் பல கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அம்மன் சந்நிதியில் நவரத்ன மாலிகை என்னும் பிரசித்தி பெற்ற ஒன்பது கிருதிகளைப் பாடினார்.

நவரத்ன மாலையில் பிரசித்தமான கிருதிகள் சில வருமாறு:

உருப்படிகள்[தொகு]

இவரது உருப்படிகளில் பலவிதமான இசையணிகள் அழகுறச் சேர்க்கப்பட்டுள்ளன. சில உருப்படிகளில் அழகான ஸ்வரஸாகித்யங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில:

  • நின்னே நம்மினானு (தோடி)
  • துருஸ¤கா க்ருப ஜுசி (சாவேரி)
  • பாஹி ஸ்ரீ கிரிராஜஸ¤தே (ஆனந்தபைரவி)
  • மரிவேரே கதி (ஆனந்தபைரவி)
  • பாலிஞ்சு காமாட்சி (மத்தியமாவதி)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. P. Sambamoorthy, Great Composers, pp69–94. (Madras: The Indian Music Publishing House)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாமா_சாஸ்திரிகள்&oldid=2238390" இருந்து மீள்விக்கப்பட்டது