உள்ளடக்கத்துக்குச் செல்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருஞானசம்பந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருஞானசம்பந்தர்
பிறப்புசீர்காழி
இயற்பெயர்ஆளுடைய பிள்ளை
தலைப்புகள்/விருதுகள்நாயன்மார், மூவர்
தத்துவம்சைவ சமயம் பக்தி நெறி
நால்வர்
தலைப்புகள்/விருதுகள்நாயன்மார், சமயக்குரவர்
தத்துவம்சைவ சமயம் பக்தி நெறி
திருஞானசம்பந்தரைப் பல்லக்கில் சுமக்கும் அப்பர்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்), அல்லது சம்பந்தர், என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று (நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவருடைய வேறு பெயர்கள் சம்பந்தர், காழி வள்ளல்,[1][2] ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோளரி என்பனவாகும். இவர் கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.[3][4] சம்பந்தர் தனது பதினாறு வயதில் இறந்தார். இவரது பாடல்கள் திருமுறையின் முதல் மூன்று தொகுதிகளில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தின் தத்துவ அடித்தளத்தின் ஒரு பகுதியாக அவை உள்ளன.[4][5]

பொ.ஊ. ஆறாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயனார்களில் இவர் மிகவும் முக்கியமானவர். இவர் அப்பரின் சமகாலத்தவர்.[6]

வரலாறு

[தொகு]

சம்பந்தரைப் பற்றிய தகவல்கள் முக்கியமாக சேக்கிழாரின், பெரியபுராணத்தில் 1256 பாடல்களாலும், சுந்தரரின் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றின் வழியாக அறியப்படுகிறது. இவர் வரலாற்றை முதன்முதல் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில், பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயனார்களைப் பற்றிய தமிழ் நூலான திருமுறையின் கடைசித் தொகுதியான திருத்தொண்டர்தொகை, சுந்தரரின் கவிதைகள் மற்றும் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றில் இருந்து வருகிறது.

பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில், சோழ நாட்டில் சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர். தாயார் பகவதி அம்மையார்.

இவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை, அம்மா அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பால் ஊட்டினார். அதனைப் பருகிய குழந்தை சிவஞானத்தைப் பெற்றது எனப்படுகிறது.

நீராடி முடித்து விட்டு வந்த தந்தை வாயில் இருந்து பால் வடிவதைக் கண்டார். அது பற்றி வினவிய போது, குழந்தை கோயிலைச் சுட்டிக்காட்டித் தோடுடைய செவியன்... என்று தொடங்கும் தேவாரத்தைப் பாடியது என்றும் சொல்லப்படுகிறது. ஆச்சாள்புரக் கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி பெயர் சொக்கியார்.

இவர் தன் பதினாறு வயதில் வைகாசி மூல நாளில் நல்லூர் பெருமணம் என்று அறியப்படும் ஆச்சாள்புரத்தில் தன் திருமணத்தின்போது இறந்தார்.[3][4]


திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுராணம் வழி)

[தொகு]

ஞானப்பால் உண்டமை

[தொகு]

ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர், ஒரு நாள் காலை, தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி, அகமருடஜெபம் செய்தார்.

தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்து அழுதார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும், உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே, பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி, உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
எண்ணரிய சிவஞானத்

தின்ன முதங்குழைத் தருளி

உண்ணடிசில் எனஊட்ட

உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்தருளிக்

கையிற்பொற் கிண்ணமளித்

தண்ணலைஅங் கழுகைதீர்த்

தங்கண்ணார் அருள்புரிந்தார்.

(பெரிய புராணம் பாடல் 1970)

சிவனடியே சிந்திக்குந்

திருப்பெருகு சிவஞானம்

பவமதனை அறமாற்றும்

பாங்கினி லோங்கியஞானம்
உவமையிலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாமுணர்ந்தார் அந்நிலையில்
(பெரிய புராணம் பாடல் 1973)

பிரம தீர்த்தில் நீராடிய சிவபாத இருதயர், பால்வழிய நின்ற பிள்ளையைப் பார்த்து “யார் கொடுத்த எச்சிற்பாலை உண்டாய்?” எனக் கோல் கொண்டோங்கினார். உடனே ஞானசம்பந்தர் தமக்குப் பால் கொடுத்த பரம்பொருளை அடையாளங்களுடன் சுட்டித் “தோடுடைய செவியன்” என்ற திருப்பதிகம் பாடினார்.

பொற்றாளம் பெறல்

[தொகு]

சில நாள் கழித்துத் திருக்கோலக்காவிற்கு எழுந்தருளினார். கையினால் தாளம் இட்டு “மடையில் வாளை” என்ற திருப்பதிகம் பாடினார். பாட்டிற்கு உருகும் பரமன், கை நோவுமென்று ஐந்தெழுத்து வரையப்பெற்ற பொற்றாளம் அளித்தருளினார். இவர் பெருமை கேட்ட மக்கள், தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டினர். முதலில் தமது தாய் பிறந்த ஊராகிய திருநனிபள்ளி சார்ந்தார். பிள்ளையார் பெருமையைக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர், தம்முடைய மனைவியோடு சீர்காழிக்கு வந்து தரிசித்தார். அவரது பாடல்களுக்குத் தாம் யாழ் வாசித்தார். அது முதல் பிள்ளையாருடனிருந்து பிள்ளையார் பாடல்களையெல்லாம் யாழில் அமைத்து வாசித்து வரலானார்.

முத்துச்சின்னம் முதலியன பெறல்

[தொகு]

திருஞானசம்பந்தர் தில்லை முதலிய பல தலங்களையும் தரிசித்து நடுநாட்டில் உள்ள திருநெல்வாயிலரத்துறை சார்ந்தார். களைப்பினால், மாறன்பாடியில் அமர்ந்து, அன்றிரவு நித்திரை செய்தார். அரத்துறைப்பெருமான் முத்துக்குடை, சின்னம் முதலியவற்றை அருளினார்.

சோதிமுத்தின் சிவிகை சூழ்வந்துபார்
மீதுதாழ்ந்து வெண்ணீற்றொளி போற்றிநின்று
ஆதியா ரருளாதலில் அஞ்செழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்
- பெரியபுராணம் பாடல் – 2119
அவற்றை இறையருளெனப் பெற்ற ஞானசம்பந்தர் “எந்தை ஈசன் எம்பெருமான்” என்ற திருப்பதிகம் பாடிப்பரவினார்.

உபநயனம்

[தொகு]

உபநயனப் பருவத்தில் உலகியலுக்கேற்ப ஞானசம்பந்தருக்கு உபநயனம் ஏழாம் வயதில் நடைபெற்றது. ஓதாதே வேதம் உணர்ந்த உயர் ஞானசம்பந்தர், அங்கு வந்திருந்த மறையோர்கட்கு உள்ள ஐயங்களை அகற்றி, வேத முடிபாகிய ஐந்தெழுத்தின் பெருமையைத் துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் என்ற திருப்பதிகமாகப் பாடி விளக்கியருளினார்.

முத்துப் பந்தல் பெறல்

[தொகு]

ஞானசம்பந்தரது பெருமையைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரைக் காண்பதற்குச் சீர்காழிக்கு எழுந்தருளினார். பிள்ளையாரும் அவரை எதிர்கொண்டழைத்தார். இருவரும் அருட்கடலும் அன்புக்கடலும் ஆம் எனத் திகழ்ந்தனர். பின்னர், ஞானசம்பந்தர் திருப்பாச்சிலாச்சிராமம் பணிந்து கொல்லிமழவன் மகளைப் பிடித்து நின்ற முயலகன் என்னும் நோயைப் போக்கினார். திருச்செங்கோடு என வழங்கும் திருகொடிமாடச் செங்குன்றூர் சென்ற போது அடியவர்களை விஷஜுரம் பற்றியது. திருநீலகண்டத்திருப்பதிகம் பாடி, அவ்விஷ நோயைப் போக்கினார். பிள்ளையார் பட்டீச்சுரத்தை அடைந்தபோது வெயில் மிகுதியாயிருந்ததால், திருவருளால் சிவபூதம் ஒன்று முத்துப்பந்தல் கொடுத்தது.

படிக்காசு பெறல்

[தொகு]

பிறகு திருச்செங்காட்டங்குடி, திருப்புகலுர் தரிசித்தார். திருநாவுக்கரசரைக் கண்டு அவர் வாயிலாக ஆரூரில் நிகழ்ந்த ஆதிரைச் சிறப்பைக் கேட்டு ஆரூரானைத் தொழுதார். பிறகு அப்பரும், சம்பந்தரும் திருவீழிமிழலை சேர்ந்தனர். அவ்வூர்ப்பெருமான், தோணியப்பரைப் போல் காட்சி தந்தார். அது கண்ட இருவரும் அவ்வூரிலேயே சிலநாள் தங்கினர். அப்பொழுது நாட்டில் பஞ்சம் உண்டாயிற்று. பரமன் அளித்த படிக்காசு கொண்டு இருவரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்குப் பறைசாற்றிச் சோறளித்தனர்.

திருமறைக்காட்டில் அற்புதம்

[தொகு]

பிறகு (வேதாரணியம்) திருமறைக்காடு சென்றனர். நேரே கும்பிட எண்ணியவர்களாய் மறைகளால் பூசித்து அடைக்கப்பட்டிருந்த கதவினைத் திருநாவுக்கரசர் பாடலால் திறக்கச்செய்து, தாம் அடைக்கப்பாடினார். அது முதல் திறக்கவும் அடைக்கவுமாக இருந்து வருகிறது அக்கதவு.

பாண்டி நாட்டில் சைவம்

[தொகு]

பாண்டி நாட்டில் நெடுமாற பாண்டியன் சமண சமயம் சார்ந்து இருந்தமையை மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்ற இருவர் வாயிலாகத் தெரிந்து மதுரைக்குப் புறப்பட்டார். நாளும் கோளும் நலமில்லாதிருந்தும் உமையொருபாகன் உள்ளத்து விருப்பத்தால் “அவை நல்ல நல்ல” என “கோளறுபதிகம்” பாடி, ஏகினார். பாண்டியன் வெப்புநோயை “திருநீற்றுப் பதிகம்” பாடி அகற்றினார். அனல் வாதத்தைப் பச்சை பதிகம் பாடியும், புனல் வாதத்தாலும் சமணர்களை வென்றார்.

பாண்டிய மன்னனையும், பாண்டி நாட்டு மக்களையும் சைவம் தழுவச்செய்தார். பாண்டி நாட்டில் உள்ள தலங்களைத் தரிசித்தார். சோழநாடு மீண்டார். பிறகு, பல தலங்களைத் தரிசித்துவிட்டுத் திருப்பூந்துருத்தி அடைந்தார். அப்பர் சுவாமிகள் இவரது சிவிகையைத் தாங்கியமையறிந்து உடனே கீழிறங்கி இருவரும் அளவளாவி இருந்தனர். திருஒத்தூரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கிக் காய்க்கச் செய்தார்.

எலும்பைப் பெண்ணுருவாக்கல்

[தொகு]

மயிலாப்பூர் சிவநேசச் செட்டியாரின் மகள் பூம்பாவை பாம்பு தீண்டி இறக்க, அவளது எலும்பைக் குடத்தில் சேமித்து வைத்தார் சிவநேசர். அதனை அறிந்த ஞானசம்பந்தர் திருக்கோயில் முன் அக்குடத்தை கொணர்வித்து “மட்டிட்ட புன்னை” என்ற பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.

ஆண் பனையைக் குலையீன்றச் செய்தல்

[தொகு]

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நதிக்கரையில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், சிவனடிகளார்கள் வைத்த பனை மரம் அனைத்தும் ஆண் பனைகளாக பூத்ததைக் கேள்விப்பட்டு பதிகம் பாடி, அனைத்து ஆண் பனைகளையும் குலையீன்ற வைத்தார்.

சோதியிற் கலத்தல்

[தொகு]

பெற்றோர் விருப்பத்திற்கிணங்க, வேத நெறியில் நின்று, நம்பியாண்டார் நம்பிகள் திருமகளை மணமகளாக ஏற்று இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும் "அந்தமில் சிவன் தாள் சேர்வன்" என்ற கருத்தமையக் கல்லூர்ப்பெருமணம் என்ற பதிகம் பாடினார். பெருமானது அசரீரியின்படி மனைவியோடும் உடன் வந்தாரோடும் வைகாசி மூல நன்னாளில் அங்கு தோன்றிய சோதியில் கலந்தார்.[7][8]

கோயில்

[தொகு]

திருஞான சம்பந்த மூர்த்தி கோயில் ஒன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பேய்க்கரும்பன்கோட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு சிறப்பாகக் கட்டப்பட்டது. இக்கோயிலில் சம்பந்தரே, மூலவராகவும் உற்சவ மூர்த்தியாகவும் உள்ளார். வருடாவருடம் வைகாசி மாதத்தில், இக்கோயிலில் இவ்வூர் மக்களால் சிறப்பாக திருவிழா நடத்தப்பட்டு, உற்சவ மூர்த்தி பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு, வீதிகளில் உலாவருவார். மேலும், மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் இவ்வூர் தேவார அடியார் குழுவால் தேவாரப் பாடல்களும், பதிகங்களும் பாடப்பெற்றுச் சம்பந்தருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.

இத்தலம், தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், புலவன்காடு என்ற ஊரிலிருந்து கிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து 35 கிலோமீட்டர் தெற்கில் உள்ளது இவ்வூர். முற்றிலும் விவசாயத்தையே தொழிலாக கொண்ட உரந்தை வளநாட்டின் ஒரு பகுதியாகும்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் திருஞானசம்பந்தர் திருக்கோவில் ஒன்று உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமத்தில் திருஞானசம்பந்தர் திருக்கோவில் ஒன்று உள்ளது. [9]

நம்பிக்கைகள்

[தொகு]

அருணகிரிநாதர், வடலூர் வள்ளலார் முதலானோர் முருகப்பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.[10]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  2. 63 நாயன்மார்கள், ed. (19 ஜனவரி 2011). திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  3. 3.0 3.1 Peterson 1989, ப. 19–27, 272-273.
  4. 4.0 4.1 4.2 Dehejia, Vidya (1987). "Sambandar: a Child-Saint of South India". South Asian Studies (Taylor & Francis) 3 (1): 53–61. doi:10.1080/02666030.1987.9628355. 
  5. Zvelebil 1974, ப. 95.
  6. Encyclopaedia of Jainism, Volume 1, page 5468
  7. முதலாம் திருமுறை, பன்னிரு திருமுறை ஆய்வு மையம் வெளியீடு, கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்துர், 2014
  8. பெரியபுராணம் முலமும் உறையும் - மூன்றாம் பாகம், புலவர். பி. ரா. நடராசன், உமா பதிப்பகம், சென்னை
  9. "திருஞானசம்பந்தர் திருக்கோவில்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-07-29.
  10. http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s01.jsp?id=228

வெளி இணைப்புகள்

[தொகு]