மூர்த்தி நாயனார்
மூர்த்தி நாயனார் | |
---|---|
பெயர்: | மூர்த்தி நாயனார் |
குலம்: | வணிகர் |
பூசை நாள்: | ஆடி கார்த்திகை |
அவதாரத் தலம்: | மதுரை |
முக்தித் தலம்: | மதுரை [1] |
மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்" - திருத்தொண்டத் தொகை
மூர்த்தி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[2]. இவர் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார்[3]. அவர் சிவபெருமான் திருவடிகளையே மெய்யடியாக பற்றினவர். அத்திருவடிகளே தமக்குத் துணையும், தாம் அடையும் பொருளும் எனக் கொண்ட கொள்கையினாராய் வாழ்ந்தவர். அவர் திருவாலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.
அந்நாளில் வடுகக் கருநாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் நன்நெறியாகிய திருநீற்றுச்சார்புடைய சிவநெறியில் செல்லாது தீ நெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்து சிவனடியார்களையும் அவர்களது அடிமைத்திறம் செல்லவொட்டாது தீங்கு செய்வாயினான். அவ்வாறு சமணத்திற்கு உட்படுத்த எண்ணி, மூர்த்தியாரையும் பல கொடுமைகள் செய்தான். அவர் அவற்றால் ஒன்றும் தடைப்படாது தமது நியதியான திருப்பணியைச் செய்து வருவாராயினார். தத்தம் பெருமைக்கு அளவாகிய சார்பினின்றொழுகும் எமது பெருமக்களை யாவர் தடுக்கவல்லர்? அதுகண்டு பொறாத அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான். அவர் சிந்தை நொந்து ‘இக்கொடும் பாதகன் மாய்ந்து திருநீற்று நன்னெறியைப் பெறுவதென்றோ? என எண்ணினர். அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். இன்று இறைவரது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் முட்டுப்படினும் அதனை அதனைத் தேய்க்கும் இந்தக் கையினுக்கு முட்டில்லை என்று துணிந்து, சந்தனப்பாறையில் தமது முழங்கையைத் தேய்த்தார். எலும்பு திறந்து மூளை சொரிந்தது. “ஐயனே! அன்பின் துணிவினால் இச்செயல் செய்யாதே! உன்னை வருத்திய தீயோன் ஆண்ட நாடு முற்றும் நீயே ஆண்டு, முன்பு வந்த துன்பமெல்லாம் போக்கி உலகத்தை காத்து உன் திருப்பணி செய்து நம் உலகு சேர்வாயாக!” என்று இறைவரது அசரீரியாக திருவாக்கு எழுந்தது. அதன்பின் வண்ணமும் நிரம்பின சிவகணங்கமழும் ஒளிபெற்ற திருமேனியுடன் மூர்த்தியார் விளங்கினார்.
அன்று இரவே அடியாரை அழித்த அந்தக் கொடிய மன்னன் இறந்து எரிவாய் நரகில் வீழ்ந்தான். அவன் மனைவியாரும் சுற்றத்தாரும் ஏங்கினர் அமைச்சர் கூடி அவனுக்குரிய முறைப்படி ஈமக்கடன்களைக் காலையே செய்து முடித்தனர். அவனுக்கு மக்களில்லை. கூழும் குடியும் பிற எல்லா வளனும் உடையதாயினும் அரசரனது காவலில்லாவிடின் நாடு நல்வாழ்வில் வாழமுடியாதென்று அமைச்சர் கவலையுற்றனர். யானையைக் கண்கட்டிவிட்டால் அதனால் ஏந்திவரப்பட்டவரை அரசராகக் கொள்ளத் தக்கதென்று துணிந்து அவ்வண்ணமே செய்தனர்.
அன்றிரவில் நிகழ்ந்தவற்றை கண்ட மூர்த்தியார் “எம்பெருமான் அருள் அதுவாகில் உலகாளும் செயல் பூண்பேன் என்று கொண்டு உள்ளத்தளர்ச்சி நீங்கிக் திருவாலவாய்த் திருக்கோயிலின் முன்வந்து நின்றனர். யானை அங்கு சென்று மூர்த்தியாரை தாழ்ந்து எடுத்து பிடரிமேற் தரித்துக்கொண்டது. அது கண்ட நகர மாந்தர்கள் வாழ்த்தி மங்கல வாத்தியங்கள் முழங்கினர். மூர்தியாரை யானையிலிருந்து இறக்கி முடிசூட்டு மண்டபத்திற்குக் கொண்டு சென்று முடிசூட்டுவதற்குரிய சடங்குகள் செய்யலாயினார். “சமண் போய்ச் சைவம் ஓங்குமாகில் நான் அரசாட்சியினை ஏற்றுப் புவி ஆள்வேன்; முடி சூட்டுவதற்குரிய சடங்குக்கு திருநீறே அபிடேகமாகவும் உருத்திராக்கமணியே அணிகலனாகவும், சடைமுடியே முடியாகவும் இருக்கக் கடவன” என மூர்த்தியார் அருளினார். அதுகேட்ட அமைச்சரும் உண்மை நூலறிவோரும் நன்று என்று பணிந்து, அவ்வாறே உரிய சடங்குகள் எல்லாம் செய்தனர். மூர்த்தியாரும் மங்கல ஓசைகளும் மறை முழக்கம் வாழ்த்தொலியும் மல்க நாட்டின் அரசராக முடி சூடினார்.
முடிசூட்டு மண்டபத்தினின்றும் மூர்த்தியார் முதலில் திருவாலவாய்த் திருக்கோயிலுக்குச் சென்று தாழ்ந்து வணங்கினர். பின் அங்கு நின்றும் யானை மீதேறி நகர வீதியில் பவனி வந்து அரண்மனை வாயிலை அடைந்தனர். யானையின்றும் இறங்கிச் சென்று அரச மண்டபத்தில் சிங்காசனத்தில் அரச கொலு வீற்றிருந்தனர். அவரது குறிப்பின்படி அமைச்சர்கள் ஒழுகினர். சமண் கட்டு நீங்கித் திருநீறு உருத்திராக்கமணி, சடாமுடி என்ற மும்மையினால் உலகாண்டனர் மூர்த்தியார். பொன்னாசை சிறிதும் படாது முழுத் துறவொழுக்கம் பூண்ட மூர்த்தியார் ஐம்புலப் பகையாகிய உட்பகையையும், சமணர், வேற்றரசர் முதலிய புறப்பகையையும் நீக்கி உலகத்தை நெடுங்காலம் அருளாட்சி புரிந்த பின்னர் திருவடி நீழலில் உறையும் பெருவாழ்வு பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்
- ↑ 63 நாயன்மார்கள், ed. (31 ஜனவரி 2011). மூர்த்தி நாயனார். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: numeric names: editors list (link) - ↑ மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)
உசாத்துணைகள்
[தொகு]- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்