உள்ளடக்கத்துக்குச் செல்

கோச் செங்கட் சோழ நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோச் செங்கட் சோழ நாயனார்
பெயர்:கோச் செங்கட் சோழ நாயனார்
குலம்:அரசன்
பூசை நாள்:மாசி சதயம்
அவதாரத் தலம்:உறையூர்
முக்தித் தலம்:உறையூர்

கோச் செங்கட் சோழ நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1]. சோழநாட்டிலே காவிரிச் சந்திர தீர்த்தத்தின் அருகிற் பெருமரங்கள் நிறைந்த நீண்ட குளிர்ந்த சோலையொன்றுள்ளது. அச்சோலையிலுள்ள ஒரு வெண்ணாவல் மரத்தடியில் வெளியுருப்பட்ட சிவலிங்கத் திருமேனியைக் கண்டு பெருந்தவத்தையுடைய வெள்ளை யானை தன் துதிக்கையினால் நன்னீரை முகந்து நாள்தோறும் திருமஞ்சனஞ் செய்து மலர்தூவி வழிபாடு செய்தது. அதனால் அவ்விடத்திற்குத் திரு ஆனைக்கா என்னும் பெயருண்டாயிற்று. அங்கே மெய்யுணர்விற் சிறந்த சிலந்தி ஒன்று இறைவன் திருவடிமேல் சருகு முதலியன் உதிராவண்ணம் தன் வாயின் நூலினால் மேற்கட்டிபோன்ற அழகிய பந்தல் அமைத்தது.

யானை வழிபடச் சென்றபோது சிலந்தி வாய்நீர் நூலினால் அமைத்த அப்பந்தரினைத் தூய்மையற்றது என நினைந்து சிதைத்தது. அதுகண்ட சிலந்தி யானையின் கைசுழன்றமையாற் பந்தர் சிதைந்ததென்றெண்ணி மீளவும் தன் வாய் நூலால் அழகிய பந்தர் செய்தது. அதனை மறுநாளும் யானை அழித்துப் போக்கியது. அதுகண்ட சிலந்தி ‘இறைவர் திருமுடிமேற் சருகுமுதலியன விழாதபடி நான்வருந்தியிழைத்த நூற்பந்தரை இவ்வாறு அழிப்பதோ? என வெகுண்டு யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடித்தது. அவ் வருத்தம் பொறாத யானை தன் துதிக்கையினை நிலத்தில் மோதி அறைந்து வீழ்ந்திறந்தது. அதன் துதிக்கையினுள்ளே புகுந்த கடித்த சிலந்தியும் உயிர் துறந்தது. ஆனைக்கா இறைவர் அருள் புரியும் நெறியால் அவ்வெள்ளை யானைக்கு வீடுபேறடைய அருளினார்.

அக்காலத்தில் சோழ மன்னாகிய சுபதேவன் என்பான் தன் பட்டத்தரசி கமலவதி என்பவளுடன் திருத்தில்லை சார்ந்து கூத்தப்பெருமானை வழிபட்டிருந்தனன். நெடுங்காலமாக மக்கட் பேறில்லாத அவ்விருவரும் இறைவரை வழிபட்டுப் போற்றிய நிலையில் இறைவர் அவர்கட்கு அருள் புரிந்தார். அதன் பயனாகக் கமலவதி கருவுற்றாள். திருவானைக்காவிற் பெருமானுக்கு பந்தரிழைத்த சிலந்தி மகவாய்ச் சார்ந்தது. கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் கூறினர். அவ்வாறு ஒருநாளிகை கழித்துப் பிறக்கும் படி என்காலைப் பிணித்துத் தலைகீழாக மேலே தூக்கி நிறுத்துங்கள்’ என்று சொல்ல அவ்வாறே செய்தனர். குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’ என அருமை தோன்ற அழைத்து உடனே உயிர் நீங்கினாள். மன்னன் தன் குழந்தையைத் தன் உயிரெனக் காத்து வளர்த்து உரிய பருவத்தில் நாடாள் வேந்தனாக முடிசூட்டித் தன் தவநெறியைச் சார்ந்து சிவலோகங் சார்ந்தான்.

கோச்செங்கோட் சோழர், சிவபெருமானது திருவருளினாலே முன்னைப்பிறப்பின் உணர்வோடு பிறந்து சைவத்திருநெறி தழைக்கத் தம் நாட்டில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுந் திருப்பணியினை மேற்கொண்டார்; திருவானைக்காவில் தாம் முன்னைப் பிறப்பில் சிலந்தியாக இருந்து இறைவர் திருவடிமேல் நூலாற் பந்தரிழைத்து அருள் பெற்ற வரலாற்றினை அறிந்தவராதலால் அங்கு இறைவன் வீற்றிருக்கும் ஞானச் சார்புடைய வெண்ணாவல் மரத்தினுடனே கூத்தம்பெருமான் வீற்றிருந்தருளும் அதனைப் பெருந்திருக்கோயிலாக அமைத்தார். அமைச்சர்கள் ஏவிச் சோழ நாட்டின் உள்நாடுகள் தோறும் சிவபெருமான் அமர்ந்தருளும் அழகிய திருக்கோயில்கள் பலவற்றை அமைத்து அக்கோயில்களில் நிகழும் பூசனைக்கு வேண்டிய அமுதுபடி முதலான படித்தரங்களுக்குப் பெரும்பொருள் வகுத்துச் செங்கோல் முறையே நாட்டினை ஆட்சிபுரிந்தார். பின்னர் இறைவன் திருநடம் இயற்றும் தில்லைப்பதியை அடைந்து பொன்னம்பலத்தே ஆடல்புரியும் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றி அங்குத் தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்துப் பின்னும் பல திருப்பணிகள் செய்துகொண்டிருந்து தில்லையம்பலவாணர் திருவடிநீழலை அடைந்தார்[2].

நுண்பொருள்

[தொகு]
  1. தவப்பேறும், மெய்யுணர்வுமுடைய உயிர்கள் யாவும் இறைவனை வழிபடும் இயல்பின.
  2. மெய்யாடியார்க்கு முற்பிறப்புணர்ச்சி வாய்த்தலுண்டு
  3. சிவதொண்டு விட்டகுறை தொட்டகுறை எனும் முறைவழிப்படுவதாம்.

கோச்செங்கட்சோழ நாயனார் குருபூசை: மாசி சதயம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 63 நாயன்மார்கள், ed. (01 மார்ச் 2011). கோச் செங்கட் சோழ நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  2. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோச்_செங்கட்_சோழ_நாயனார்&oldid=3814586" இலிருந்து மீள்விக்கப்பட்டது