உள்ளடக்கத்துக்குச் செல்

மானக்கஞ்சாற நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானக்கஞ்சாற நாயனார்
பெயர்:மானக்கஞ்சாற நாயனார்
குலம்:வேளாளர்
பூசை நாள்:மார்கழி சுவாதி
அவதாரத் தலம்:கஞ்சாறூர்
முக்தித் தலம்:கஞ்சாறூர் [1]

மானக்கஞ்சாற நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.[2][3]. கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. வேளாண்மையால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார்.

மானக்கஞ்சாறர் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தவர். பணிவுடையவர். தான் சிவபெருமானுக்கு ஆளாகும் பேறு பெற்ற சிவனடியார் எனத் தெரிந்து கொண்டவர். தான் ஈட்டிய பெரும்பொருளெல்லாம் சிவனடியார்க்குரியன எனும் தெளிவால் சிவனடியார் வேண்டுபவற்றை அவர் வேண்டுமுன் குறிப்பறிந்து கொடுப்பவர்.

கஞ்சாறர் பேறு பல பெற்றவராயிருந்தும் பிள்ளைப் பேறில்லாத குறையொன்றிருந்தது. இக்குறை தீர இறைவனை வேண்டிப் பிராத்தித்தார். இறையருளால் அவர்தம் மனைவியார் பெண் மகவொன்றை பெற்றெடுத்தார். பிறப்பு ஒளிக்கப் பிறந்த அப்பெண் கொடி பேரழகுடன் வளர்ந்து திருமணப்பருவம் எய்தினார்.

கஞ்சாறர் குடிக்கு ஒத்த சேனாதிபதி குடியில் தோன்றிய ஏயர்கோன் கலிக்காமர் என்னும் சிவநேசச் செல்வருக்கு, அச்செல்வ மகளை மணம் பேசி, முதியவர்கள் சிலர் வந்தனர். கஞ்சாறர் மனம் மகிழ்ந்து மணத்திற்கு இசைந்தார். முகூர்த்தநாள் குறித்தனர். கஞ்சாறு மணக்கோலம் பெற்றது. மணமகனாக கலிக்காமர் மணமுரசொலிக்க கஞ்சாறூர் எல்லையை வந்தடைந்தார்.

திருமண ஊர்வலம் கஞ்சாறு நகருள் வருவதற்கு முன் கஞ்சாறரது சிந்தையுள் உறையும் சிவபெருமான் மாவிரதி வேடம் பூண்டு அவர்தம் திருமனைக்கு எழுந்தருளினார். நெற்றியில் திருநீற்றுப் பூச்சு, உச்சியில் குடுமி, காதில் வெண்முத்துக் குண்டலம், மார்பில் மயிர்க்கயிற்றுப் பூணூல், கையில் திருநீற்றுப் பொக்கணம், பஞ்ச முத்திரை பதித்த திருவடி என்றவாறு அவர் திருக்கோலம் பொலிந்தது. மாவிரதிக் கோலத்துச் சிவனடியார் அம்மங்கல நாளில் எழுந்தருளியது கண்டு மானக்கஞ்சாறர் மனம்மிக மகிழ்ந்தார். அவரை அன்போடு பணிந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து இன்மொழி கூறி ஆசனமளித்தார். மாவிரதியார் 'இங்கு நிகழும் மங்கலச் செயல் என்ன?' என்று கேட்டார். 'அடியேன் பெற்ற மகளது திருமணம்' எனக் கஞ்சாறர் கூறினார். உடனே 'மங்கலம் உண்டாகுக' என மாவிரதையார் வாழ்த்தினார். கஞ்சாறனார் திருமணக்கோலம் பூண்டிருந்த மகளை அழைத்து வந்து மாவிரதியாரை வணங்கச் செய்தார். திருவடியில் வீழ்ந்து வணங்கிய மணமகளது கருமேகம் போன்ற கூந்தலைப் பார்த்து மாவிரதியார் 'இது நமது பஞ்சவடிக்கு [4]ஆகும்' எனக் கூறினார். அது கேட்ட கஞ்சாறர் பிறப்பறுப்பவர் போன்று தம் மகள் கூந்தலை உடைவாளால் அடியோடு அரிந்து அடியவரிடம் கொடுத்தார். அடியவரும் அதனை வாங்குவார் போன்று மறைந்தருளி வானிலே உமையம்மையாரோடும் வெள்ளை எருதின்மேல் தோன்றினார். அதுகண்டு மெய் மறந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து நின்ற கஞ்சாறர்க்கு "உமது மெய்யன்பை உலகமெல்லாம் விளங்கச் செய்தோம்" என அருளினார். உச்சிமேற் குவித்த கையராய் பெருமானது பெருங்கருணைத் திறத்தைப் போற்றும் பேறு பெற்றார் மானக்கஞ்சாற நாயனார். கஞ்சாறர்க்கு அருள் செய்து கண்ணுதலார் மறைந்தருள, ஏயர்கோன் கலிக்காமர் மணமகளைக் கைப்பிடிக்க வந்து சேர்ந்தார். அவர் அங்கு நிகழ்ந்த அற்புதத்தைக் கேட்டறிந்தார். அவ்வற்புதத்தைக் காணமற் போனதற்கு மனந்தளர்ந்தார். இறைவர் அருளிய சோபன வார்தையின் திறம் கேட்டு தளர்ச்சி நீங்கினார். வானவர் நாயகர் அருளால் மலர் புனைந்த கூந்தல் வளரப்பெற்ற பூங்கொடி போல்வாளாகிய மங்கையை மணம் புனர்ந்து தம் மூதூருக்குச் சென்றணைந்தார்.

மலைமலிந்த தோள் வள்ளல் மானக் கஞ்சாறன் - திருத்தொண்டத் திருத்தொகை

நுண்பொருள்

[தொகு]

மெய்யுணர்வுடையார் தமதென்றிருப்பனவெல்லாம் சிவனடியாரது உடமைகளே என்ற தெளிந்த காட்சியுடையவர். ஆதலால் அவர் வேண்டுமவற்றை விருப்புடன் கொடுப்பவர். தேவையைப் பொறுத்தே பொருளின் தலைமை துணியப்படும். தலையாய பொருளை அளிப்பது தலையன்பு. மணமகளுக்கு மலர்க்கூந்தல் தலையாய தேவை. அதுவே சிவனடியார்க்கு பஞ்சவடிக்குத் தேவையாமெனின் அதனை அரிந்து கொடுப்பது பிறப்பரியும் பெருஞ்செயலேயாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்
  2. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  3. 63 நாயன்மார்கள், ed. (21 ஜனவரி 2011). மானக்கஞ்சாற நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  4. பஞ்சவடி :- மயிரினால் அகலமாகச் செய்யப்பட்டு மார்பில் பூணூலாகத் தரிக்கப்படும் வடம்.

உசாத்துணைகள்

[தொகு]
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

அடிக்குறிப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=மானக்கஞ்சாற_நாயனார்&oldid=3029334" இலிருந்து மீள்விக்கப்பட்டது