உள்ளடக்கத்துக்குச் செல்

திருமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தமிழர் திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது
ஒரு திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது

திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இருவரிடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஒரு மனிதனும், இன்னொரு மனிதனும் (ஆண் - பெண்) இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதி படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஓர் உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.

திருமணம்- சொல்லும் பொருளும்

[தொகு]

மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பினும், பழங்கால வழக்கில் இச்சொல் பல பொருள்களை உடையதாக இருந்தது. 'மண்ணுதல்' என்ற சொல்லின் பொருள் கழுவுதல், நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகுபெறுதல் எனப்பல. திருமணத்தைக் குறிக்கும் 'மணம்' என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது தெரியவில்லை. மண் இயற்கையிலேயே மணம் உடையது. அதனை மண் மணம் என்பர். இது தமிழர் வழக்கு. இல்லறத்திற்கு நுழைவாயிலாக அமைவதனை 'மணம்' என்ற சொல்லால் குறிப்பிட்டதன் நோக்கம் மண்ணைப் (நிலத்தை) போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர். மனமொத்து, வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஏதுவான இந்நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டனர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு' என்ற அடைமொழி கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது.

மணம் குறித்த பிற சொற்கள்

[தொகு]

மணத்தைக் குறிக்கப் பல்வேறு சொற்கள் பண்டைத் தமிழரால் பயன்படுத்தப்பட்டன. அவை முறையே கடி, மணம், மன்றல், வதுவை, வதுவைமணம், வரைவு என்பன. இவை மணத்தின் தன்மை, நடைபெறும் இடம் போன்ற பல காரணங்களால் பெயர் பெற்ற சொற்களாக உள்ளன. சில சொற்கள் பிற மொழியாளர் தொடர்பு, பிற சமயத்தவர் தொடர்பு காரணமாக வழக்கில் இடம் பெற்றதென்று அறியலாம். சான்றாகக் "கல்யாணம்" என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக்கோவையிலும் பயின்று வந்துள்ளமையைக் காணலாம்.

கடி-மணம்

[தொகு]

'கடி' என்பது பல பொருள் தரும் உரிச்சொல் ஆகும். 'கடி' என்ற சொல்லுக்கு நீக்குதல், காப்பு என்று பொருள் கூறுவர். மணமகளின் கன்னித்தன்மை நீங்கி, கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் 'கடி' என்ற சொல் திருமணத்தைக் குறித்தது. "கடிமகள்". "வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து" போன்ற குறிப்புகளால் காப்பு என்ற பொருளில் 'கடி' என்ற சொல் இடம் பெறுதலைக் காணலாம்.
கடிமணம் என்பது நல்ல மணம், நன்மை பெற உதவும் மணம் என்றும் பொருளைத் தருகிறது. மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறது. இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும், மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டவும் பயன்படுகிறது. சீவக சிந்தாமணியில் 'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் சுட்டப்படுதலால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்து திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம்.

கரணம்

[தொகு]

கரணம் என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர்யாத்தனர்கரணமென்ப[1]

என்று தொல்காப்பியத்தில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், 'கற்பெனப்படுவது கரணமொடு புணர' என்று கூறுமிடத்தில் 'கரணமொடு புணர' என்பதற்கு வேள்விச் சடங்கோடு கூடிய மணம் என உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். 'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே','புணர்ந்துடன் போகிய காலையான' என்ற நூற்பாவாலும் இதனை அறியலாம். மேலும் கற்பியலில் தொடந்து ஐந்து நூற்பாக்களில் கரணம் என்பது மணத்தினைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது, ஆனால் 'கரணம்' என்ற சொல் இன்று வழக்கில் இல்லை.

மன்றல்

[தொகு]

'மன்றம் ' என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, மணவினைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை அறியலாம். 'மன்றல்' என்ற சொல் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது.

வதுவை

[தொகு]

வதுவை என்ற சொல் 'வதிதல்' என்ற பொருள் தரும். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல் சிலம்பு, சிந்தாமணி, பெருங்கதை, கந்த புராணம், போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வரைவு

[தொகு]

வரை என்பதற்கு மலை, வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர் பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குமுறைப் படுத்துதல்)என்ற நிலையில் 'வரைவு' என்பது மணத்தைக குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் தொல்காப்பியம் "வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப" என இரு வகையாகக் கூறுகிறது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம். ஆயினும் இது பின்னர் வழக்கொழிந்துள்ளது.

பழந்தமிழரும் திருமணமும்

[தொகு]

பண்டைத் தமிழர் தம் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். மணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன. பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். 'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இனவே, களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே 'கற்பு நெறி' எனப்பட்டது.

மணமுறைகள்

[தொகு]

பொருள் கொடுத்தும், சேவை புரிந்தும் மணத்தல், திறமையை வெளிக்காட்டும் வகையில் வீரத்தின் காரணமாக மணத்தல், போர் நிகழ்த்தி மணத்தல், தன் காதல் மிகுதியைக் காட்டி மணத்தல் ஆகிய இவ்வகை மணமுறைகள் களவுநெறி, கற்புநெறி ஆகிய இருவகை மண முறைகளிலும் இருந்தது. உறவு முறைத் திருமணம், கலப்பு மணம் ஆகிய வகைகளில் கூட களவு மணமும் இருந்தது என்பதனை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.
இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தெரியவரும் தமிழரின் மணமாக

  1. மரபு வழி மணம்
  2. சேவை மணம்
  3. போர் நிகழ்த்தி மணம்
  4. துணங்கையாடி மணம்
  5. பரிசம் கொடுத்து மணம்
  6. ஏறு தழுவி மணம்
  7. மடலேறி மணம்

ஆகிய மண முறைகளைக் காணலாம்.

மரபு வழி மணம்

[தொகு]

இதனைப் பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர். பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் ' யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருந்தது

ஏறு தழுவுதல்

[தொகு]

தமிழரின் வீர உணர்வைக் காட்டும் செயல் 'ஏறு தழுவுதல்' ஆகும். இது கலித்தொகையில் முல்லைக்கலியில் ஆயர் மத்தியில் நிலவிய மணவினைச் சடங்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். காளையை அடக்கித் தழுவி நிற்பவனுக்கே தலைவி உரியவள் என்ற குறிக்கோளுடன் ஏறு வளர்த்தனர். அவ்வேற்றினைத் தழுவி அதற்குப் பரிசுப்பொருளாக ஆயர் மகளை மணப்பதற்குத் துணிந்த இளைஞர்களாக ஆயர்கள் இருந்தனர். முல்லை நில ஆயர்கள் ஆடு, மாடு போன்ற விலங்கினங்களைப் பாதுகாக்கும் தொழிலையுடையவர்கள். அவற்றிற்குப் புலி முதலிய விலங்குகளால் துன்பம் நேராமல் காக்கும் பொருட்டும், கள்வர் கவர்ந்து செல்லாமல் காக்கும் பொருட்டும், அவர்கள் வீரமிக்கவராக இருத்தல் இன்றியமையாதது. இதனால் ஆயர் தம் மகளைத் திருமணம் செய்ய முன்வருபவரின் ஆற்றலை அறிந்த பின்னரே மகளை மணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் உடையவராக இருந்தனர் என்பதை அறியலாம்.

மடலேறுதல்

[தொகு]

பனை மடலைக் குதிரையாக ஆக்கி, எறியூர்தலை "மடன்மா ஏறுதல்' என்றும் ' மடல்' என்றும் சுட்டினர். இச்செயலை மேற்கொள்வதன் மூலம், தலைவனின் காதன் வன்மையை ஊருக்கு உணர்த்துதல், அதன் வழியாக தான் விரும்பிய மணமகளைப் பெற்று மணத்தல் என இது அமைகிறது. மடலேறி மணம் முடித்தலைப் பெருந்திணையின் பால் படுத்திக் கூறுவார் தொல்காப்பியர். பழந்தமிழர் இலக்கியங்களிலேயே இது குறைவாகவே இடம்பெற்றுள்ளது. தமிழரின் வாழ்க்கையில் மடலேறுதல் என்பது அருகியே வழக்கில் இடம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மடலேறுதல் இல்லை. ஏனெனில் நாணம் துறந்து மடலேறுதல் என்பது காமம் மிக்க கழிபடர் தலைவனுக்கு உரிய ஒன்றாகும். மடலூரும் தலைவனே இச்செயலை நாணமிக்க செயலாகக் கருதுவதாக குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது. இவ்வழக்கு தற்போது இல்லை.

போர் நிகழ்த்தி மணமுடித்தல்

[தொகு]

தமிழர்கள் வீர உணர்வை விளக்கும் வகையில் 'மகட்பாற்காஞ்சி' என்னும் துறையை தொல்காப்பியம் சுட்டுகிறது. பண்டைத் தமிழர் சமுதாயத்தில் ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது, போரிட்டு வெற்றி பெற்றுத் தான் விரும்பிய பெண்ணை மனந்து கொள்ளுதல் என்ற வழக்கம் இடம் பெற்றமைக்குப் புறநானூறு என்ற இலக்கியத்தில் உள்ள பாடல்கள் சான்று பகர்கின்றன.

துணங்கையாடி மணத்தல்

[தொகு]

துணங்கையாடுதல் என்பது மகளிர் விளையாட்டில் ஒன்று. விழாக் காலங்களில் துணங்கையும், மன்னர்ப் போரும் ஒருங்கே நிகழும். துணங்கைக் கூத்துக்குரிய நாள் நிச்சயிக்கப்பட்டு, அந்நாளில் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே துணங்கையும், மன்னர்ப்போரும் நிகழ்த்திய செய்தியை குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது.

பரிசம் கொடுத்து மணத்தல்

[தொகு]
மணமகளின் பெற்றோர் தனது மகளுக்கு வழங்கிய சீர்வரிசைப் பொருள்கள்

மணமகன் பரிசம் கொடுத்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் பரிசம் கொடுத்தல் எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும். மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினைக் கொடுத்து, அவர்கள் ஒப்புதல் பெற்று மணந்தமைக்குச் சான்று உண்டு

" உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே "என்ற குறிப்பு இதனை உனர்த்துகிறது. சில சமயம் ஏதேனும் காரணம் குறித்து மணமகன் தரும் பரிசத்தை மணமகளின் பெற்றோர் ஏற்காமல் மகளைக் கொடுக்கவும் மறுப்பர். தற்காலத்தில் பரிசம் கொடுத்து மகளை மணத்தல் சில சமூகத்தாரிடம் காணப்படுகிறது. அதோடு பொருள் பெற்று மணத்தல் என்பதும் உள்ளது.

திருமண வகைகள்

[தொகு]
கனடாவில் ஒருபால் திருமணம்

திருமணங்கள் பல வகைப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஒர் ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். எனினும் தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடைபெறும் திருமணங்களும் சட்ட, அரசியல் முறையில் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை ஒருபால் திருமணங்கள் எனப்படுகின்றன. ஆண் அல்லது பெண் ஒரே சமயத்தில் எத்தனை மனைவியரை அல்லது கணவன்மாரைக் கொண்டிருக்கலாம் என்பதிலும், ஒருவர் யாரைக் கணவனாக அல்லது மனைவியாக அடைய முடியும் என்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. மேலோட்டமாகத் துணைவர் எண்ணிக்கை அடிப்படையில் திருமணத்தை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.

பலதார மணம்

[தொகு]

ஓர் ஆண் பல பெண்களை மணக்கும் முறை பொதுவாக பழந்தமிழர் வாழ்வில் காண முடிகிறாது. சங்க இலக்கியங்களில் காமக்கிழத்தி, பொருள்வயின் கிழத்தி, இல்லக்கிழத்தி என்று பல மனைவியரைக் கொண்டமையை நோக்கும் போது மக்கட் பேறு மட்டும் கருதி மட்டுமே இப்பலதார மணம் நிகழ்த்தப் பெறவில்லை என்பதனை அறியலாம்.

உறவு முறைத் திருமணம்

[தொகு]

உறவு முறைத் திருமணம் மணிமேகலை காப்பியத்தில் முதல் முதலாகச் சுட்டப்படுகிறது. மைத்துனன்-(வடசொல்)மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலை காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர்.

திணைக் கலப்பு மணம்

[தொகு]

சங்க கால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்த நிலை அகநானூறுப் பாடல் [2] மூலம் அறிய முடிகிறது. மற்ற காப்பியங்களில் இது பற்றிய செய்திகள் இடம் பெறவில்லை.

சேவை மணம்

[தொகு]

மணமகன் தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சேவைகள் செய்தோ, தனது திறமைகளைக் காட்டியோ அப்பெண்ணை மணத்தல் சேவை மணம் எனப்படும். சீவக சிந்தாமணி யில் சீவகன் ஏமமாபுரத்தின் மன்னன் மகள் கனகமாலையை மணந்ததும், பெருங்கதையில் உதயனன் பதுமாவதியை மணந்ததும் இந்த சேவை மணத்தினைச் சார்ந்ததாகும்.

தமிழரின் திருமண நிகழ்வுகள்

[தொகு]

காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற மண முறைகளைத் தவிர, நால்வகை வருணத்தவர் தம்குல முறைப்படியான மணவினைச் செயல்கள் இடம் பெற்ற நிலையும் காணப்படுகிறது. இது காப்பியங்களிலும் மரபாக இடம் பெற்றுள்ளது.

  1. பொருத்தம் பார்த்தல்
  2. மணநாள் குறித்தல்
  3. திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர மக்கட்கு உணர்த்துதல்
  4. மணவினை நிகழும் இடத்தை அலங்கரித்தல்
  5. சிறப்பு இறைவழிபாடு செய்தல்
  6. மங்கல ஒலி எழச்செய்தல்
  7. மணமேடை ஒப்பனை

ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளது.

பொருத்தம் பார்த்தல்

[தொகு]

பண்டைத்தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறி கற்பாகிய திருமணத்தில் முடிந்தது. இரு பெற்றோர்களில் ஒப்புதல் பெற்று மணம் நிகழ்த்தலை மரபாகக் கொண்டனர். அவ்வாறான கற்பு நெறி சிறந்து விளங்க மணப் பொருத்தம் பார்த்தனர். திருமணத்திற்குரிய பொருத்தங்களாக

" பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு,நிறுத்த காமவாயில்,
நிறையே, அருளே, உணர்வோடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"[3]

என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பெருங்கதையில் மணப்பொருத்தம் எட்டு என்றும் அவை

  1. இளமை
  2. வனப்பு
  3. வளமை
  4. தறுக்கண்
  5. வரம்பில் கல்வி
  6. நிறைந்த அறிவு
  7. தேசத்தமைதி காத்தல்
  8. குற்றமில்லாத சூழ்ச்சி முதலியன ஆகும் எனக் குறிப்பிடுகிறது.

சீவக சிந்தாமணியில் குண மாலை-சீவகன் மணம் கணியரிடம் பொருத்தம் கேட்ட பின்பே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பதுமாவதியை சீவகன் மணந்த போது பெண்ணின் தந்தை சாதகம் பார்த்து, மணம் முடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தற்காலத்திலும் பத்து பொருத்தம் பார்த்தல் நிகழ்கிறது.

மண நாள் குறித்தல்

[தொகு]

தமிழர்கள் எந்தச் செயலைச் செய்தாலும் நல்ல நாள் பார்த்துச் செய்வதில் நம்பிக்கையுடையவர்கள். மணவினை முடித்தற்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், மங்கல வினைக்குரிய பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய அனைத்தியும் வல்லவரிடம் கேட்டு முடிவு செய்தனர்.

" மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண்டிங்கள்"[4]

மேலும் வளர்பிறை நாள்களையும், பகலின் முற்கூறான காலைப் பொழுதையுமே மண நிகழ்விற்குரிய நல்ல நேரமாகக் கருதினர். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோவலன்கண்ணகி மணவினை சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்துடன் கூடும் வேளையில் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். "வானூர் மதியஞ் சகடனைய"[5] கம்ப ராமாயணத்திலும் வசிட்டர் மணவினை நிகழ்த்தற்குரிய நாளைக் கூறினார் என்றும் அறியலாம். இதனால் நல்ல நேரம் பார்த்தல் பெரும்பாலும் எல்லா மரபினராலும் பின்பற்றப்பட்டது.

நகருக்கு உரைத்தல்

[தொகு]

மணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணச் செய்தியினை ஊருக்கு அறிவித்தல் தமிழர் மரபாகும். சங்கப் பாடல்களில் இவை இடம் பெறவில்லை. அக்காலத்தில் இயற்கையோடு இயைந்த மணம் மேற்கொண்டமையால் தங்கள் சுற்றாம் சூழ முடித்துக் கொண்டனர். பிற்காலத்தில்

பல்லார் அறியப் பறையறிந்து நாள் கேட்டுக்
கலியாணஞ் செய்து கடிபுக்க - மெல்லியள்"[6]

என நாலடியார் கூறுகிறது. சிறிய ஊராயின் பறையறிவித்தும், தொடர்ந்த காலத்தில் மன்னர், வணிகர் ஆகியோர் முரசறைந்து மண் செய்தியை நகருக்கு உறைத்தனர். யானையின் மீது அணிகலன்களை அணிந்த பெண்களை அமர்த்தி முரசறைந்து அறிவித்தனர். பெருங்கதையில்[7] மணச் செய்தியைக் கூறும் போது 'வெள்ளை ஆடையை உடுத்தியும், வெள்ளைச் சந்தனத்தை உடலில் அணிந்து, அசையும் மஞ்சிகையைக் (காதணி) காதில் அணிந்து, மாலைகள் ஆட முத்து மாலை புணைந்தும், போர்க்களத்திலே தலைமை கொண்ட யானையின் மீது வன்முரசை ஏற்றினர் என்று முரசறைவோன் தோற்றம் கூறப்படுகிறது. சிந்தாமணியில் மன்னனின் மணவினை அறிவிக்க முரசறைவோன் யானை மீதமர்ந்து, மணச் செய்தியை ஊருக்கு உணர்த்தினான். முரசு சுமக்கும் யானைக்கும் வெள்ளணியும், மாலையும், திலகமும் அணிவித்தனர் [8] என்று சுட்டுகிறது. பெரிய புராணத்தில் புனிதவதி, ( காரைக்கால் அம்மையார் )பரமதத்தன் ஆகியோர் திருமணச் செய்தி ஓலையில் எழுதி அணுப்பிய செய்தியைக் காண முடிகிறது.[9] மனன்ர் மண வினையில் மக்கள் பங்கு அதிகம் இருந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தம் கடமை ஆற்றிய நிலையைக் காண முடிகிறது. மேலும் முரசறைவோன் மக்களை அணிகலண்கள் பலவற்றை அணிந்து கொள்ளும்படியும்அவைஅரசகட்டளைஆகையால் இனிய பால் சோற்றாஇயல்லாமல் பிறாவற்றை ஏழு நாட்கள் உம் மனம் விரும்பினும் உண்ணாதிருப்பீராக " என்று அறிவுருத்தி, பின்பு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய செய்தியையும் கூறுகிறான். இதனால் மன்னருக்கும் மக்களுக்கும் இடையே இருந்த உறவும் மக்களின் மகிழ்ச்சியை நல்ல நாளில் விரும்பி கொல்லாமை முதலிய நோன்பு வலியுறுத்தப்ப்டுதலையும் அறியலாம். மண நாளின் போது இன்னா செயல்கள் எவையும் இடம் பெறாமல் அறவாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் புலனாகிறது.

மணவினை நிகழும் இடம்

[தொகு]

பழந்தமிழர் திருமணத்தை பெண்வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டிருந்தன்ர்.களவொழுக்கம் காரணமாக உடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்து கொள்வது மரபாக இருந்தது. கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்தது. இதனை

"நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்
எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்
சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்
வையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே" [10]

என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம். ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளி வருதல் கூடாது; பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின் படி பரிசம் போடுதலும் பெண்வீட்டில் திருமணம் செய்தலும் இடம் பெறுவது தமிழர் வழக்கமாக இருந்தது. காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்தது. இன்று அவரவர் வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப இறைவன் முன்னிலை, திருமணக்கூடம், பொதுமன்றில்கள், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம் பெறுகிறது.

மணப் பந்தல் அமைத்தல்

[தொகு]
தற்காலத்தில் வீட்டில் மணவினை நடைபெறுவதைக் குறிக்க அமைக்கப்படும் தென்னோலை மற்றும் வாழைத் தோரணங்களால் அமைக்கப்பட்டுள்ள பந்தல்

தமிழர் மணவினைகளில் மனச்செயல் இனிதே நிறைவேறி வாழ்நாள் முழுமையும் வளம் பெற இறைவழிபாடு முதலிடம் பெற்றது. மணம் நடைபெறும் வீட்டின்கண் பந்தல் அமைப்பர். அப்பந்தலை "மணப்பந்தல்" எனச் சுட்டுவர். மணப் பந்தலில் நாற்பத்தைந்து கால்கள் இடம் பெற்றன. ஒவ்வொரு காலிலும் ஒரு தெய்வம் நிலை பெற்றதாகக் கருதினர். அதனை

ஐயொன்பதின் வகைத் தெய்வநிலைஇய
கைபுனை வனப்பின் கான்முதல் தோறும்
ஆரணங்காகிய வணிமுளையகல்வாய்" [11]

என்ற பெருங்கதை ப் பாடல் வழி அறியலாம். அந்தக் கால்கள் தோறும் கூலமுளைகளையுடைய நிறை குடங்கள் அழகுற அமைக்கப்பட்டது. கணபதி பூசையுடன் மணப்பந்தல் அமைக்க நடுகின்ற முதல் பந்தக்காலை நல்ல நாள், நல்ல முழுத்தம் பார்த்து, மங்கல இசை முழங்க நடுதல் வழக்கம். இறை வழிபாடு நிகழ்த்திய பின் ஏனைய கால்கள் நட்டுப் பந்தல் அமைப்பர். இவை தமிழரிடம் பிற மொழியினரின் தொடர்பு காரணமாக இடம் பெற்ற செயல்கள் எனலாம்.

இறைவழிபாட்டிற்குரிய பொருள்கள்

[தொகு]
திருமணச் சடங்கில் பயன்படும் மங்கலப் பொருள்கள்

தக்கோலம் , ஏலக்காய், கிராம்பு(லவங்கம்), சாதிக்காய், கற்பூரம் எனும் ஐவகை மணப் பொருள்களுடன், வெற்றிலையையும் வலப்பக்கம் வைத்து, சந்தனத்துடன், மஞ்சளையும் தடவி இரும்பாற் செய்த விளக்கினிடத்தில் நிறைக்கப்பட்ட நெருப்பு நிறைகளைச் சுற்றி நறும்புகையூட்டி, ' தேவீர் நீர்மலையிடத்திருந்தாலும்,மண்ணிடத்திருந்தாலும், விண்ணிடத்திருந்தாலும் இங்கு வந்து இந்தப் படையலைப் பெற்று மணமக்களுக்கு மங்கலத்தைக் கொடுக்க வேண்டும் ' என்று தேவர்களை வேண்டினர். பந்தக்கால் தோறும் உறையும் நான்முகக்கடவுள் முதலிய தெய்வங்களுக்கு அமைந்த இடங்களை செம்முது பெண்டிர் தம்மைக் கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க வலம் வந்து, உளுந்து, நெல், உப்பு, மலர், வெற்றிலைச்சுருள்,சந்தனம் ஆகிய மங்கலப் பொருட்களையும் தமது கைகளில் அடக்கிக் கொண்டு, காந்தள் இதழ் போன்ற தம் மெல்லிய கரம் குவித்து எல்லீரும் இங்கணம் ஏழு முறை வணங்குமின் என உளுந்து முதலியவற்றைத் தூவி வணங்கிக் காட்டுவர். அக்கன்னியரும் அவ்வாறே வணங்கித் தெய்வங்கட்கு மடை கொடுப்பர். சங்க இலக்கியங்களில் பந்தல் காலில் உறையும் தெய்வங்களின் பெயர் சுட்டப்படவில்லை. இடைக்காலத்தில் நான்முகக்கடவுள் எனக் குறிப்பிடப்படுதலைக் காணலாம்

தெய்வங்களுக்குப் படைத்த உணவு வகைகள்

[தொகு]

பால் உலையில் வெந்த வெண்சோறு, தேன் உலையில் வெந்த தேன்சோறு, புளிநீரில் வெந்த புளிஞ்சோறு, கருப்பஞ்சாற்றில் வெந்த இன்னடிசில், நெய்ப்பொங்கல் ஆகியவற்றை பொன், வெள்ளி, மணிச் செபம்புகளாலான அகல்களில் நிறைத்துத் தெய்வங்களுக்கு மடை கொடுத்தனர். இறைவழிபாட்டில் மணமகள், அவளது தோழியர், பெண்டிர் ஆகியோர் இடம்பெற்றனர். இல்லுறை தெய்வத்திற்கு மலர் தூவி வழிபட்டனர்.

மங்கல ஒலி

[தொகு]

திருமணம் நடக்கும் வீட்டில் சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கும். மணச் சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். அரசர் மணவினையில் பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. ஆறு நாட்கள் கழிய எங்கும் பரபரப்புடன் வெண்சங்கு முழங்கின. குற்றமில்லா யாழும், குழலும், தண்ணுமையும், அழகிய முரசும் முழங்கின. கம்பராமாயணம் இதனை

"மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை,பேரிகை பொங்கின;
மறையவர் புகலும் நான்மறை, கங்குலின் ஒலிகளும்
மாகடலும் போன்றதே" [12]

எனக் குறிப்பிடுகிறது.

நகரை அழகு செய்தல்

[தொகு]

மன்னர் மண வினைகளில் நகரினைப் பொலியச் செய்தல் சிறப்பிடம் பெறுகிறது. மக்களும் ஒருங்கிணைந்து கூடி மணவினைச் செயல்களில் ஈடுபட்டனர். மங்கலச் செயல்களாக அரண்மனை வாயில்களில் கமுகு, வாழை ஆகியவற்றைத் தொங்கவிடுதல், மாலைகள் அணிவித்து அகில்புகையூட்டுதல், அழகிய வண்ணக் கோலமிடுதல் போன்ற செயல்களை மேற்கொண்டனர்.

மணமேடை ஒப்பனை

[தொகு]

மணவறை எனப்படும் நிலத்தை திருமகளின் இடை போலப் புனைந்தனர். வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர். மங்கலமாகப் பெரிய தவிசை (இருக்கை) இட்டனர். பொற்காசும், மணியும், முத்தும் குவிக்கப்பட்டன. மங்கலகரமாக விளக்குகள் எழுந்தன. புகைகள் எழுந்தன. பெண்கள் கவரி ஏந்தி நின்றனர். இச்செயல்கள் மன்னரின் மணமேடைகளில் இடம் பெற்றன.

புதுமையாக இடம்பெற்ற சில பழக்கங்கள்

[தொகு]

பண்டைத்தமிழரின் மண மரபில் இடம் பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் அமைந்து காணப்படினும் புதியவைகளும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ளன. பண்டைத் தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம் மற்றும் பெருங்கதையில் காணப்படுகிறது.

  • காப்பு நூல் கட்டுதல்
  • மங்கல நீர் கொண்டு வருதல்
  • மண மக்கள் ஒப்பனை
  • மணமகன் அழைப்பு
  • வேள்வித்தீ
  • அம்மி மிதித்தல்
  • பாத பூசை செய்தல்
  • அருந்ததி காட்டல்
  • அறம் செய்தல்
  • மங்கல அணி
  • சீதனம் கொடுத்தல்

இது போன்று புதியனவாக தமிழர்களின் திருமணத்தில் புதிதாக இடம் பெற்றன.

உலகில் வினோத திருமணங்கள்

[தொகு]
  • சீனா நாட்டில் உகூர் கலாசார மக்கள் மணமகள் மீது அம்பு எய்து அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.
  • ஆப்பிரிக்காவின் மரிட்டானியா பகுதியில் மணப்பெண் உணவு உண்டு உண்டாக வேண்டுமென்று நினைக்கிறார்கள்.
  • ஸ்காட்லந்து நாட்டில் திருமணத்திற்கு முதல் நாள் மணமகளை அழுகிய பழங்களைக்கொண்டு கறுப்பாக மாற்றுகிறார்கள்.
  • சீனா நாட்டின் துஜியா இனத்தில் மணமகள் ஒரு மாதத்திற்கு ஒரு மணி நேரம் அழ வேண்டும். இது அங்கு கட்டாயம் ஆகும்.
  • கொரியா நாட்டில் முதலிரவிற்கு செல்லும் மணமகனை இரண்டு கால்களையும் கட்டி உள்ளங்காலில் அடிக்கிறார்கள்.
  • இந்திய நாட்டில் ஜாதகத்தில் தோசம் இருக்கும் பெண்கள் வாழைக்கன்றையோ, தென்னை மரத்தையோ முதலில் திருமணம் செய்த பின் கல்யாணத்திற்கு ஆயத்தப்படுத்துகிறார்கள்.
  • அயர்லாந்து நாட்டில் திருமணப்பெண் நடனமாடும்போது காலை தரையிலிருந்து தூக்கவே கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
  • ஸ்பார்ட்டன் கலாசாரத்தில் மணப்பெண்னை மொட்டை அடித்து, ஆணின் உடையை உடுத்தச் செய்து அலங்கோலப்படுத்துகிறார்கள்.
  • ஜெர்மானிய திருமணங்களின் மணமக்களுக்கு பீங்கான் தட்டுகள் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் தரையில் போட்டு உடைக்கிறார்கள்.

சாதியும், திருமணமும்

[தொகு]

இந்தியாவில் சராசரி 89 சதவிகிதம் திருமணங்கள் சொந்த சாதிக்குள்ளேயே நடக்கின்றன. தமிழகத்தில் 2.59 சதவிகிதம் மட்டுமே சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன. தமிழக மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவு 97.41 சதவிகிதம் அகமணமுறை திருமணங்கள் நடப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.[13]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தொல்காப்பியம் பொருளதிகாரம். கற்பு. 1
  2. அம்மூவனார். அகநானூறு. நெய்தல், மருதம் தினைப் பாடல்கள்
  3. தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூற்பா-25
  4. அகநானூறு. 86: 4-6
  5. சிலப்பதிகாரம், புகார்க்காண்டம், மங்கலவாழ்த்துப் பாடல். வரி 50.
  6. நாலடியார் பாடல் 86
  7. பெருங்கதை 2.2:49.52
  8. சீவக சிந்தாமணி 2387
  9. பெரிய புராணம் 1726
  10. ஐங்குறுநூறு பாடல் .399
  11. பெருங்கதை, 2.3:17-20
  12. கம்பராமாயணம் பாடல் 1200
  13. பி. சுகந்தி. "கவுரவக் கொலைகள்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமணம்&oldid=4062548" இலிருந்து மீள்விக்கப்பட்டது